நடப்பு
தொடர்கள்
Published:Updated:

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

பாலு சத்யா

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

ன்றைக்கு நிதித் துறையில் இருப்பவர்களும் தொழில்முனைவோர்களும்... ஏன் பெரிய தொழிலதிபர்களும்கூட அக்கறைகொள்ளாத ஒரு விஷயம் என்றால், அது தங்கள் உடல்நலம் தொடர்பானதாகவே இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது பழமொழி. ஆனால், பிசினஸ் மற்றும் நிதித் துறையில் உள்ளவர்களின் பணம் தேடும் வேட்கை, பல சமயங்களில் பசியையும் மறக்கச் செய்துவிடுகிறது. பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கத்தானே! கஷ்டப்பட்டுப் பணத்தைச் சம்பாதித்துவிட்டு, அதை அனுபவிக்க நல்ல உடல்நலம் இல்லையெனில், சம்பாதித்துதான் என்ன பயன்? பிசினஸ் செய்பவர்கள் தங்கள் உடல்நலத்தை எப்படிப் பேணவேண்டும் என்பது குறித்து விவரிக்கிறார் பொதுநல மருத்துவர் பாஸ்கரன்.

  தூக்கம் தொலைக்காதீர்கள் ப்ளீஸ்

‘‘நம் உடல் இயக்கம் சீராக இயங்க உதவுவது மெலோட்டோனின் சுரப்பு. ஒருவர் தினமும் 6 - 7 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால்தான் மெலோட்டோனின் சுரப்பு நன்கு சுரக்கும். இரவுத் தூக்கம்தான் இதற்கு ஏற்றது. இதனால்தான் அடுத்த நாளை நம்மால் புத்துணர்வோடு எதிர்கொள்ள முடிகிறது; நன்கு சிந்திக்கவும், உற்சாகத்தோடு செயல்படவும் முடிகிறது. அகாலத்தில் உறங்குவது பிசினஸ்மேன்களுக்கு வழக்கமான ஒன்று. ஆனால், என்ன வேலை என்றாலும், எந்த ஊரில் இருந்தாலும், இரவு 10 மணிக்குள் உறங்கச் சென்றுவிடுவது, தொழில் முனைவோர்களுக்குக் கட்டாயம். 

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

* நல்ல தூக்கம் வேண்டுமெனில், உறக்கத்தைக் கெடுக்காத இரவு உணவினைச் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானமாகும் இட்லி, தோசை, பழங்கள் நல்லது. மிளகு, மஞ்சள் சிறிது சேர்த்த ஒரு டம்ளர் பால் அருந்தலாம். இதையும் இரவு 8 மணிக்கு முன்னர் முடித்துவிட வேண்டும். அலுவலகத்தில் வேலையிருந்தால், அலுவலகத்திலேயே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, இரவில் காபி, டீ சாப்பிடுவது தூக்கத்தைக் கெடுக்கும்.

*   படுக்கையை உங்கள் ஆபிஸாக மாற்றாதீர்கள். லேப்டாப்பில் வேலை செய்வது, சாட்டிங், பிரௌசிங்கில் ஈடுபடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது என மூளையைத் தூண்டும் வேலைகள் இரவு 10 மணிக்கு மேல் வேண்டவே வேண்டாம். ஒரே இடத்தில் தூங்குவதை வழக்கப் படுத்திக்கொள்ளவும். இரவில் உறங்குவதற்கு முன்னர் தண்ணீர் குறைவாகக் குடிக்க வேண்டும். இல்லையென்றால், சிறுநீர்க் கழிப்பதற்காக இடையில் எழ வேண்டியிருக்கும். அது ஆழ்ந்த உறக்கத்தைக் கெடுக்கும்.

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!



*  இருட்டுதான் ஆழ்ந்த உறக்கத்துக்கு இட்டுச் செல்லும். படுக்கையறையில் கண்ணை உறுத்தாத மெல்லிய இரவு விளக்கு இருந்தால் பரவாயில்லை.

*  அறையில் ஏசி இருந்தால், அடிக்கடி அதன் வெப்பநிலையை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள். இதுவும் உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும். முடிந்த வரை பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள். அது இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும்.

* காலையில் எழுந்து உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வது இரவு உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும். மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற மனதைப் புத்துணர்ச்சியாக்கும் மனநலப் பயிற்சிகளையும் செய்யலாம்.

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

  பசித்தவுடன் சாப்பிடுங்கள்

காலையில் எழுந்திருக்கும்போதே பிசினஸ்மேன் களைத் தொற்றிக்கொள்வது டென்ஷன். அந்தப் பதற்றத்தில் காலை உணவில் ஆரம்பித்து, இரவு வரை நேரத்துக்குச் சாப்பிடாமல், நேரங்கெட்ட நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிடுவார்கள். இது மகா தவறு. இதனால் ஊட்டச்சத்துக் குறையும். உடலில் தேவையில்லாத கொழுப்பு சேரும்; அது இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், சர்க்கரை நோய் ஏற்படக் காரணமாகும்.

*  இதற்குத் தீர்வு, பசி என்கிற மணி வயிற்றில் அடித்தால், அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். காலையில் சத்தான சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.  குறைந்த பட்சம் இரண்டு டம்ளர் பார்லி கஞ்சியாவது குடித்துவிட வேண்டும். அதிகபட்சம் 9 மணிக்குள் காலை உணவை முடித்துவிடுவது நல்லது.

* சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்கள் உடல்நிலைக்குப் பொருத்தமான ஜூஸ் அருந்தலாம்; பழங்கள் சாப்பிடலாம்.

*  மதிய உணவை 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஆரோக்கியமான சாதம், அதிகம் காய்கறிகள், கீரைகள் என மதிய உணவு அமைந்திருப்பது சிறப்பு. மாலையில் கொரிப்பதற்கு  பஜ்ஜி, போண்டா, பீட்ஸா என்று தேடி ஓடாமல், சுண்டல், நட்ஸ் எனச் சாப்பிடலாம்.

*  இரவு எட்டு மணிக்குள் நன்கு செரிமானம் ஆகக்கூடிய எளிய உணவுகளை உட்கொள்ளவும்.  கடைகள், ஹோட்டல்களில் இருந்து கிடைக்கும் உணவுகளுக்கு முடிந்த வரை `நோ’ சொல்லுங்கள்.

*  அசைவப் பிரியர்கள் தினமும் என்றில்லாமல், வாரத்துக்கு இருமுறை அதுவும் வீட்டில் தயாரித்த அசைவ உணவைச் சாப்பிடலாம். அசைவ உணவில் முட்டை மட்டும் விதிவிலக்கு. தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

  ஒரே இடத்தில் உட்கார்ந்தால்...

ஒரே இடத்தில் உட்கார்வது நிதித் துறையில் இருப்பவர்களாலும் பிசினஸ்மேன்களாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இதனால் உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், தொப்பை உண்டாவது, மூலநோய் எனப் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். இதனால் மாரடைப்புகூட ஏற்படும். 

*  முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை தலையைச் சுழற்றி, தலையை இடப்பக்கம், வலப்பக்கம், முன்பக்கம், பின்பக்கம் என இரண்டு மூன்று முறை அசைத்துக் கழுத்துக்குப் பயிற்சி கொடுக்கவும். இருபது  நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 விநாடிகளுக்கு 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கவும். இது கண்களுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும்.

* ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரவும். அந்த நேரத்தில் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கைகளால் தோள்களையும் முதுகையும் அமுக்கிவிடவும். இது தசைகள் வலுவோடு இருக்க உதவும்.

* ஏசியில் வேலை செய்யும்போது நேரடியாக தலை, கழுத்து, தோள்களில் ஏசிக் காற்றுபடாமல் இருக்கும் இடத்தில் அமர்ந்துகொள்ளவும். நீண்ட நேரம் ஏசிக் குளிரில் இருந்தால், அது ரத்த ஓட்டத்தைத் தடைப்படுத்தும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது ஏசி-யில் இருந்து விலகி இருக்கவும். 

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

  ஒழித்துக் கட்டுங்கள் மதுவையும் புகையையும்

நிதித் துறையிலும் தொழில் துறையிலும் இருப்பவர்கள் டென்ஷனுக்கு ஆளாகும் போதெல்லாம் புகைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னையும், கவலையும் அதிகமானால் இரவில் மது அருந்துவதும் வழக்கம். இந்தப் பழக்கங்கள் நுரையீரல் பாதிப்பு, இதய நோய், பசியின்மை, நெஞ்செரிச்சல், உடல் சோர்வு எனப் பிரச்னைகளைக் கொண்டுவந்து விடும். 

இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முதல் தேவை, மன உறுதி. சிறிது காலம் இவற்றை விட்டொழித்தாலே போதும், பிறகு நிரந்தரமாக விட்டுவிடலாம். குடிப்பழக்கத்துக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் ஆளானவர்கள், முறையாக கவுன்சலிங் பெற்றாவது அதை விட்டொழிப்பது நல்லது.

* சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின்தான் சிகரெட் பிடிக்கும் விருப்பத்தைத் தூண்டுவது. இதற்கு மாற்றாக நட்ஸ் சாப்பிடுவது, ஜூஸ் அருந்துவது எனப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். சிகரெட் பிடிக்கவேண்டும் என்று தோன்றும்போது ஒரு டம்ளர் நீர் அருந்துவதுகூட அந்த ஆசையை மட்டுப்படுத்த உதவும்.

*  சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களோடு விலகி இருங்கள். அத்தகைய நண்பர்களைத் தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தினரோடு நேரத்தை அதிகம் செலவிடுவதும் நல்ல பலன் தரும்.

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!

  டென்ஷன்... டென்ஷன்

பிசினஸ் செய்பவர்களால் தடுக்கவே முடியாதது, டென்ஷன். இது அதிகமானால், மன உளைச்சல் தொடங்கி மனஅழுத்தம் வரை கொண்டுபோய் விட்டுவிடும். இது உடல்நலத்துக்கும் கேடு விளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரைநோய் எல்லாவற்றுக்கும் காரணமாவது டென்ஷன்தான்.

லாபத்தை அதிகரிக்கும் ஆரோக்கியம்!


*  ஒரு வேலை அல்லது புராஜெக்ட் என்று நீங்கள் ஆரம்பிக்கும்போது, உங்களால் முடிந்ததை மட்டுமே இலக்காக வைத்துக்கொள்வது டென்ஷன் வராமல் தடுக்கும். இரண்டு நாள்களில் ஒரு வேலையை முடிக்க முடியும் எனில், அதற்கு மூன்று நாள் ஒதுக்கினால், வீண் பதற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.

* எதையுமே திட்டமிட்டு, ஒழுங்காகச் செய்தால் டென்ஷன் உண்டாகாது. ஒரு வேலைக்கு எப்போதுமே ஒரு மாற்றை (Alternative) ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வது நல்லது. டென்ஷனைக் குறைக்க மிகவும் உதவியாக இருப்பது நேர மேலாண்மை. எந்த வேலையாக இருந்தாலும் முன்கூட்டியே திட்டமிட்டுவிட வேண்டும்.

காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மன இறுக்கம் தவிர்க்க உதவும்.

* தியானம், யோகா ஆகியவை டென்ஷனைக் குறைக்கும். இதற்காக ஒரு நாளைக்கு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும். மனஅழுத்த மேலாண்மை (Stress Management Techniques) நிபுணர்களிடம் பயிற்சி பெறலாம்.

* மனஅழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதும் நல்லது.

‘‘லாபம் தவிர வேறு எதையும் தராத தொழில் ஒரு தொழிலே அல்ல’’ என்று சொல்லியிருக்கிறார் ஹென்றி ஃபோர்டு. உடல்நலத்தைக் கெடுக்கும் எந்தத் தொழிலிலும் எத்தனை கோடி ரூபாய் கிடைத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை.

`பிஸி’ என்கிற வார்த்தைக்கு மிகப் பொருத்த மானவர்கள்தான் பிஸினஸ்மேன்கள். அதற்காக உடல்நலத்தைக் கவனிக்காத அளவுக்கு பிஸியாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், கோடி கோடியாக பணம் இருக்கும். அதை அனுபவிக்க உடலில் வலுவிருக்காது என்பதை மறக்காதீர்கள்!