
நாணயம் புக் செல்ஃப்


புத்தகத்தின் பெயர்: ஸ்டார்ட் வித் ஒய் (Start with Why: How Great Leaders Inspire Everyone to Take Action)
ஆசிரியர்: சைமன் சினெக் (Siman Sinek)
பதிப்பாளர்: போர்ட்ஃபோலியோ (மறுமதிப்பு)
சில நிறுவனங்கள் ஏன் அடிக்கடி புத்தாக்கங்களை (Innovation) செய்கின்றன, வெற்றிகரமாகத் திகழும் நிறுவனங்கள் பலவற்றில் சில மட்டுமே தொடர் வெற்றிகளைப் பெறுகின்றனவே, ஏன், ஏன், ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்கிறது சைமன் சினெக் எழுதிய ஸ்டார்ட் வித் ஒய் என்கிற புத்தகம்.
வெற்றியுடனும் புகழுடனும் திகழ்ந்த தனிமனிதர்களில் சிலரான மார்ட்டின் லூதர் கிங், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ரைட் சகோதரர்கள் போன்றவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமை என்பது வெகு குறைவாகவே இருக்கும். ஆனால், அவர்கள் வெற்றியுடன் திகழ்ந்ததற்கு ஒரு முக்கியமான, பொதுவான குணம், ‘ஏன்’ என்ற கேள்வியுடனேயே அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆரம்பிக்கும்போதே கேட்டனர் என்பதே.
நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதைச் சொல்ல பலரும் இருப்பார்கள். ஆனால், மிக மிக முக்கியமான கேள்வியான ஏன் செய்கிறோம் என்ற கேள்விக்கே முதலில் பதில் தேவை.
உங்கள் நிறுவனம் எதற்காக நிறுவப்பட்டது, ஏன் உங்கள் நிறுவனம் இந்தச் செயல்களை எல்லாம் செய்கிறது, ஏன் வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குகிறார்கள் என்ற கேள்விகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது ‘ஏன்’ என்கிற கேள்வி மட்டுமே.
1900-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சாமுவேல் பியர்பான்ட் லேன்ஞ்ச்லி என்பவருக்கு 50,000 டாலர் பணத்தைத் தரத் தயாராக இருந்தது அரசாங்கம். அவரோ பெரிய கணிதவியல் அறிஞர். ஹாவர்டு பல்கலையில்கூட கொஞ்ச நாள் வேலை பார்த்திருந்தார். ஆண்ட்ரு கார்னகி மற்றும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் போன்றவர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். நல்ல அறிவு, பணம், சமூகத் தொடர்பு என எல்லாமும் அவரிடம் இருந்தது. ஆனால், காசோ அல்லது சமூகத் தொடர்போ இல்லாமல் இருந்த வில்பர் மற்றும் ஓர்வில்லி ரைட் என்ற இருவரும் தங்களது சொந்த முயற்சியால் முதன் முதலாக ஒரு விமானத்தைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்திப் பறந்தும் காட்டினார்கள். காசு, கல்வி, சமூகத் தொடர்பு என எல்லாம் இருந்தும் சாமுவேலால் முடியாதது ரைட் சகோதரர்களுக்கு எப்படி சாத்தியமானது?
சாமுவேலானாலும் சரி, ரைட் சகோதரர்களானாலும் சரி, அவர்களுடைய உத்வேகத்துக்கு (Motivation) எந்தக் குறையும் இல்லை. சமநிலையிலான உத்வேகத்தையே கொண்டிருந்தனர். இருவருமே ஒரே எல்லைக்கோட்டைத் தொட முயன்றனர். ரைட் சகோதரர் தன்னுடன் இருப்பவர்களைச் சரியான அளவில் கவர்ந்து அவர்களை வழிநடத்தினார். அதனாலேயே அவருடன் இருந்தவர்கள் முழுமனதுடன் செயல்பட்டு, ரைட் சகோதரர்களுக்குத் தேவையான உபகரணங்களை வடிவமைத்துக் கொடுத்தனர். அப்படித் தயார் செய்த உபகரணங்களே உலகத்தைப் புரட்டிப் போட்ட விமானப் பயணத் தொழில்நுட்பமாக மாறியது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
ரைட் சகோதரர்கள் ஏன் என்ற கேள்வியுடனேயே தங்களுடைய விமான வடிவமைப்பை ஆரம்பித்ததுதான். இது மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன கம்ப்யூட்டர் ஸ்பெஷலிஸ்ட்டா, இல்லை, மல்டி நேஷனல் வியாபாரத்தைக் கரைத்துக் குடித்தவரா? கம்ப்யூட்டர் துறையில் செயல்பட்டு வந்த ஏனைய போட்டியாளர்களைப் போல் அல்லாமல் ஏன் இப்படி இருக்க வேண்டும், ஏன் இப்படி இருக்கக்கூடாது என்று அப்போதைய நடைமுறைகளை ஏன் என்ற கேள்விகளால் துளைத்தெடுத்ததாலேயேதான் வெற்றிகளைப் பெற்றார்.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர், ஜப்பானில் கார் தயாரிக்கும் ஃபேக்டரி ஒன்றைப் பார்வையிடச் சென்றார். கார் உருவாக்கப்படும்போது கடைசி கட்டத்தில் கதவுகள் பொருத்தப்படும். அமெரிக்காவில் கார் கதவுகள் பொருத்தப்படும் இடத்தில் ரப்பர் சுத்தியலுடன் சிலர் பணியமர்த்தப் பட்டிருப்பார்கள். கதவு கொஞ்சம் கோணல்மானலாக இருந்தால், அவர்கள் அதைத் தட்டி சரிசெய்வார்கள். ஜப்பான் தொழிற்சாலையில், ரப்பர் சுத்தியல் ஆட்கள் இல்லாததைக் கண்ட அமெரிக்க கார் நிறுவன அதிகாரி, எங்கே சுத்தியல்காரர்கள் என்று கேட்க, ஜப்பானியரோ ‘‘எங்கள் கம்பெனியில் கதவுகள் என்பது டிசைன் நிலையிலேயே சரியாகச் செய்யப்பட்டுவிடுகிறது. எனவே, அவை மிகவும் ஃபெர்பெக்ட்டான வகையில் பொருந்திவிடும்” என்றாராம்.
இங்கேதான் ஏன் என்ற கேள்வியும் அதனுடைய பயனும் நமக்கு உதவுகிறது. ஏன், எப்படி, என்ன என்ற கேள்விகளே தொழில்களின் அகரவரிசை. நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்று பார்த்து வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்குவதில்லை. ஏன் அதைச் செய்கிறீர்கள் என்று பார்த்தே தயாரிப்புகளை வாங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டாவதாகக் கேட்கப்படவேண்டிய கேள்வி, எப்படி என்பது. மூன்றாவது கேள்வி என்ன என்பது. இந்தக் கேள்விகள் தெளிவுக்காகக் கேட்கப்படும் கேள்விகள். ஏன் நீங்கள் ஒரு பொருளைச் (சேவையை) செய்கிறீர்கள் என்பது முதல் கேள்வி. பல நிறுவனங்கள் போட்டி போடும் சந்தையில் நீங்களும் இருக்கிறீர்கள். நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் நன்றாக விற்பனையாகின்றன. ஆனால், நீங்கள் தயாரிக்கும் பொருளை உங்களுடைய தயாரிப்பு என்பதற்காக வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள் என்பதற்காகத்தான் வாங்குகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?
நீங்கள் எதையோ குறிக்கோளாகக் (தரம், டிசைன், பிரீமியம் என) கொண்டுதான் அந்தப் பொருளை உற்பத்தி செய்கிறீர்கள். இந்த மாதிரியான சந்தைச் சூழலில் உங்களுக்கே ஏன் அந்தப் பொருளை உற்பத்தி செய்கிறீர்கள் என்று தெரியாவிட்டால், அப்புறம் எப்படி வாடிக்கை யாளர்களுக்குத் தெரியும் என்பதுதான் கேள்வியே.
உதாரணத்துக்கு, ஆப்பிள் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். ஹெச்.பி, டெல், டோஷிபா போன்ற போட்டியாளர்களுக்கும் ஆப்பிளுக்கும் அடிப்படையில், தயாரிக்கும் பொருள்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால், ஏன் ஆப்பிளின் பொருள்கள் விற்பனையில் சிறப்பாக இருக்கின்றன? ஆப்பிள் தற்போது இருக்கும் நிலையிலிருந்து தயாரிப்புகளை மாற்ற வேண்டும் (வடிவமைப்பு, தடிமன் போன்றவற்றில்) என்பதில், ஏன் செய்கிறோம் என்ற கேள்விக்குப் பதில் இருப்பதாலேயேதான்.
ஒரு தொழிலில் போட்டி அதிகமாக இருக்கிறது. என்ன செய்தால் போட்டியைச் சமாளிக்கலாம் என்பது ஒரு கேள்வி? மாறாக நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை ஏன் செய்கிறோம் என்ற கேள்வியைக் கேட்டு, இன்றைக்கு இருக்கும் சூழல் மற்றும் டெக்னாலஜியில் நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று கேட்பதே சரியானதொரு கேள்வியாக இருக்கும்.
ஏன் என்ற கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால், எப்படி என்ற கேள்விக்கும் எப்போது என்ற கேள்விக்கும் பதில் தெரியாமலே போய்விடும்.
இந்தப் புத்தகத்தை தொழில்முனைவோர் அனைவரும் ஒரு முறை நிச்சயம் படிக்கலாம்.
- நாணயம் டீம்