நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!

வேகமெடுக்கும்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!

பா.பிரவீன் குமார்

ந்திய சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுதான் நல்ல முதலீட்டு வாய்ப்பாக உருவாகியிருக்கிறது.  முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் மீதான நம்பிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியனைச் சந்தித்து, மியூச்சுவல் ஃபண்ட் துறையின் எதிர்காலம் பற்றிப் பேசினோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

“2015 மார்ச் முதல் 2017 வரையிலான காலத்தில்,  இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையால் நிர்வகிக்கப்படும் தொகை, 62% வரை வளர்ச்சி கண்டுள்ளது. அதுவே, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் தொகையின் வளர்ச்சி 69 சதவிகிதமாக, அதாவது ரூ.6,28,304 கோடியாக இருக்கிறது. இந்தத் தகவல்,  ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. 

வேகமெடுக்கும்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!

இந்தக் குறிப்பிட்ட காலத்தில், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை 108 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. எஸ்.ஐ.பி முதலீடு, எண்ணிக்கை அடிப்படையில்  83% வளர்ச்சி கண்டுள்ளது. மாதாந்திர எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகையில் பி-15 என்கிற சிறுநகரங்களின் வளர்ச்சி, கிட்டத்தட்ட 63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில்  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சி 65% ஆகும். பி-15 நகரங்களைச் சேர்ந்தவர்கள் எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத் திட்டத்தில் முதலீடு செய்து செல்வம் சேர்த்திருக்கிறார்கள். இந்த மாற்றத்துக்கான காரணங்கள் என்ன?

கடந்த 20 ஆண்டுகளில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை மிகவும் வலிமைமிக்கதாக உருவெடுத்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குமுறைகள் மியூச்சுவல் ஃபண்டை வலிமையானதாக, ஆற்றல்மிக்கதாக, மிகக் குறைவான அபாயம் கொண்டதாக மாற்றி இருக்கிறது.

முதலீட்டின் அடிப்படையில் டி15 (பெரிய நகரங்கள்), பி15 (சிறிய நகரங்கள்) என  பிரிக்கப்பட்டு, சிறிய நகரங்களைச் சேர்ந்த  முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  சிறிய நகரங்களுக்கு இரண்டு அடிப்படைப் புள்ளிகள் அதிகமாக செலவு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மியூச்சுவல் ஃபண்ட் துறையை மேலும் மேம்பட வைத்தது.  மியூச்சுவல் ஃபண்ட் கட்டமைப்பில் மட்டுமல்ல, அரசுக் கொள்கைகள், பொருளாதார சீர்திருத்தங்கள்  உள்ளிட்டவற்றிலும் சாதகமான சூழல் ஏற்பட்டது. முதலீட்டுக்கேற்ற சாதகமான கொள்கைகள் இயற்றப்பட்டன. இவை முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் கவரவே, அவர்கள் தயக்கமின்றி அதிக அளவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் முதலீடு செய்தனர்.

நிதி அமைப்புகளுக்குள் மக்களைச் சேர்க்கும் ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா’ என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம் 2014-ல் அறிமுகம் செய்யப்பட்டது. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் அனைவருக்கும் நிதிச்  சேவை அளிக்க இந்தத்  திட்டத்தின் கீழ் இலக்கு  நிர்ணயிக்கப் பட்டது. இதன் மூலம் நகரம் மட்டுமின்றி, அனைத்துக் கிராமங்களிலும் வீடுகள்தோறும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்தது.

வேகமெடுக்கும்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!

இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற இலக்குச் சாத்தியமாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ‘டிஜிட்டல் இந்தியா திட்டம்’ 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், டிஜிட்டல் கட்டமைப்பு, டிஜிட்டல் விழிப்பு உணர்வு மற்றும் டிஜிட்டல் சேவைகளை உருவாக்கி, சமூகத்துக்கு டிஜிட்டல் திறனை அளிக்கத் திட்டமிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உயர் பண மதிப்பு நீக்கம், நவம்பர் 2016-ல் கொண்டு வரப்பட்டது. இது, நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்த எடுக்கப்பட்ட மூன்றாவது மற்றும் மிக வலிமையான நடவடிக்கையாகும். மேலும், மறைந்திருக்கும் பணத்தைச் சந்தைக்குள் கொண்டுவரும் மிக முக்கிய நடவடிக்கையாகும். பண மதிப்பு  நீக்க நடவடிக்கை, பல்வேறு வகைகளில் இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. வரி வருவாய் அதிகரித்தது, அரசாங்கத்தின் செலவிடும் திறன் அதிகரித்தது, பண வீக்கம் கட்டுப்படுத்தப் பட்டது, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் டிஜிட்டல் முறை கொண்டு வரப்பட்டது உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இந்த அனைத்து விஷயங்களும் இந்தியர்களின் செலவு செய்யும், சேமிக்கும் மற்றும் அனைத்திலும் முக்கியமான முதலீடு செய்யும் எண்ணத்தை அதிகரித்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மியூச்சுவல் ஃபண்ட் குறிப்பிடத்தகுந்த பயனைப் பெற்றது. உதாரணத்துக்கு, பண மதிப்பு நீக்க  அறிவிப்புக்கு முன்புவரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மாதாந்திர பண வரவு ரூ.19,000 கோடி. இதுவே, இந்த அறிவிப்புக்குப் பிறகு, அடுத்த மாதமே, அதாவது டிசம்பர் 2016-ல் இந்தத் துறைக்கான பண வரவு என்பது ரூ.24,500 கோடி ஆனது.

பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு 2017-18-ம் நிதியாண்டானது மிக முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. இன்றைக்கு டிஜிட்டல் என்பது 24X7 சேனலாக உருவெடுத்திருக்கிறது. இதுதொடர்பான விழிப்பு உணர்வு, வாடிக்கையாளர்களுக்கு இது பற்றிய தகவலை அளிப்பது, பண மாற்றப் பரிமாற்றம், பொருள்கள் வாங்குதல் - விற்றல் தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவை முக்கியமாக இருக்கப் போகிறது.

முதலீட்டாளருக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல், நிதி அனுபவத்தைப் பெறுதல், எங்கிருந்தாலும் அவரைச் சென்று சேருதல், மிக எளிய முறையில் இயக்குதல் போன்றவற்றுக்கு டிஜிட்டல் முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. இவை அனைத்தும் முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதை அதிகரிக்கிறது. ஓராண்டுக்கு முன்பாக,  புதிய சொத்துப் பிரிவான  இன்வைட் (INvIT), ரெய்ட் (REIT) ஆகியவை அறிமுகமாகின. முதலீட்டாளர்களுக்கான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளும் இந்தத் துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றன.

வேகமெடுக்கும்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்!

மியூச்சுவல் ஃபண்ட் தொழில் துறையில் கிட்டத்தட்ட 5.59 கோடி கணக்குகள் (ஃபோலியோக்கள்) உள்ளன. தோராயமாக, இரண்டு கோடி திட்டங்கள் தனித்தன்மையான பான் எண்ணைக் கொண்டுள்ளன. என் கணிப்பின்படி, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் வரக்கூடிய புதிய ஃபோலியோக்கள் ஐந்து கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர்களைப் பெறும். ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறையில் 80 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர். 2018-19-ம் நிதியாண்டின் இறுதிக்குள்ளாக நாம் மிக எளிமையாக, ஐந்து கோடி தனித்தன்மை வாய்ந்த வாடிக்கையாளர் களைப் பெறலாம்.

சந்தையின் போக்கு எப்போதும் நேர்கோட்டில் பயணித்ததில்லை. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பொருளாதாரத் தாக்கங்களுக்கு ஏற்ப, அதில் எப்போதும் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது. இருப்பினும், சமீப காலமாகச் சந்தையானது நிலையாக முன்நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

வருவாய் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையூட்டும் கண்ணோட்டங்கள் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகிறது. இவை இரண்டும் சாதகமாக இருப்பதால், சந்தையின் போக்கு நேர்த்தியாக இருக்கிறது. வட்டி விகிதம் குறைவு மற்றும் அரசாங்கத்தின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் லாபத்தையும் ஏற்படுத்துகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை காரணமாக அதிகரித்து வரும் வட்டி விகிதப் போக்கினால் நிச்சயமற்ற நிலைப்பாடு  உள்ளது. இது சில விதங்களில், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவெடுக்கும் செயல் முறைக்கு வழிவகுக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, நம்பிக்கை, ஒழுக்கம், இலக்கை நோக்கிய முதலீடு உள்ளிட்டவை நீண்ட காலத்துக்கு அவர்களுக்குப் பயனை அளிக்கும்” என்றார் பாலா.

இனி, முதலீடு செய்வதற்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட் என்பதில் சந்தேகமில்லை!