மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

ன் இனிய இளைய சமுதாயமே, நீங்கள் படித்து முடித்தபின் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமா அல்லது பலருக்கும் வேலை போட்டுத் தரும் தொழில்முனைவோராக மாற விருப்பமா?

உங்கள் விருப்பம் தொழில் முனைவோராக ஆவதுதான் எனில், கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே அதற்கான தயாரிப்புகளில் நீங்கள் இறங்க வேண்டியது அவசியம். அதனால் பெரிய பிரயோஜனம் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், நாம் பிசினஸ் செய்யும்போது கண்டிப்பாக அது நமக்கு உதவும். அதற்கு உதாரணமாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

நான் கடலூரில் உள்ள பாய்ஸ் ஸ்கூலில், தமிழ் மீடியத்தில் படித்தேன். கல்லூரிப் படிப்புக்காகக் கோயம்புத்தூருக்குச் சென்றேன். அங்கு ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் கோ எஜுகேஷன் கல்லூரி. ஆங்கில மீடியம் வேறு. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி இருந்தது.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!

என்னோடு படித்த ஒரு மாணவன் பெரிய, பெரிய ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருவான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கோபம் கோபமாக வரும். ஏனென்றால், எனக்கு ஆங்கிலம் படிக்க வராது.

கல்லூரியில் எனக்கு ஆங்கில வகுப்பு எடுத்த பேராசிரியர் ரொம்ப வித்தியாசமாகப் பாடம் எடுப்பார். அதனால் அவர் எடுக்கும் வகுப்புகளுக்குத் தவறாமல் செல்வேன். ஒரு நாள் அவரது வகுப்பில் ‘ஃப்யூச்சர் ஷாக்’ (Future Shock) என்கிற புத்தகத்தைப் பற்றிச் சொன்னார். நானும் அதை வாங்கினேன். அது 400 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம். இதுவரை அதில் நான் 30 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். எப்போது அந்தப் புத்தகத்தைத் திறந்தாலும் எனக்குத் தூக்கம் வந்துவிடும். அந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புத்தகங்கள் என்றாலே அலர்ஜி.

ஆனால், அப்போதே எனக்கு பிசினஸில் ஆர்வம் இருந்தது. ஒரு நாள் என் அப்பாவுடன்  பேசிக்கொண்டிருந்தபோது ‘‘ஆங்கிலமும் பிசினஸ் சக்சஸும் ரிலேட்டட் ஆன் விஷயம்’’ என்று  போகிறபோக்கில் சொன்னார். அந்த விஷயம் சட்டென்று என் மூளையில் போய் பதிந்துவிட்டது. அன்றிலிருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓட ஆரம்பித்தேன். பல ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஒருநாள், ‘இன்னவேட்டிவ் சீக்ரெட்ஸ் ஆஃப் சக்சஸ்’ (Innovative Secret of Success) என்கிற ஒரு ஆடியோ புத்தகத்தை வாங்கினேன். அதை வாங்கியபிறகுதான் என் வாழ்க்கை மாறியது. அதில் எனக்குப் புரிகிற ஆங்கிலத்தில் ஒரு இங்கிலீஷ்காரர் பேசியிருந்தார். அதற்கடுத்து ஆடியோ புத்தகங்களைத் தேடித் தேடிக் கேட்க ஆரம்பித்தேன். அதுதான் என்னை மேம்படுத்திக் கொள்ள அதிகமாக உதவியது.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!

கற்றுக்கொள்வதில் நான்கு வகைகள் உண்டு. 1. புத்தகம் படிப்பது, 2. கருத்தரங்குகளில் கலந்துகொண்டு நிபுணர்களின் பேச்சைக் கேட்பது, 3. ஆடியோக்களைக் கேட்பது, 4. நம் எதிர்காலத் துறையில் யாரிடமாவது உதவியாளராக இருப்பது. இதில் ஆடியோ மூலம் கற்பதில் ஒரு பெரிய நன்மை உண்டு.

காரணம், அந்த ஒன்றைத்தான் நீங்கள் ஓய்வாக இருக்கிற நேரத்தில் செய்ய முடியும். மற்ற மூன்று விஷயங்களுக்கும் நீங்கள் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால், ஆடியோ மூலம் கற்றுக்கொள்வதற்குத் தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. வாகனம் ஓட்டும்போது, வாக்கிங் செல்லும்போது என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதனாலேயே எனக்கு ஆடியோ புத்தகங்கள் மிகவும் பிடித்தது. 

நான் அதிகமாக ஆடியோ கேஸட்களைக் கேட்பதைப் பார்த்த என் நண்பர்கள், ‘‘நீதான் எல்லாத்தையும் கேட்டு முடிச்சிட்டியே. இதோட போதும்’’ என்று சொன்னார்கள். நானும் சில நாள்கள் அதைக் கேட்காமல் இருந்தேன். ஒரு நல்ல விஷயத்தை நாம் செய்யாமல் இருக்கும்போது கெட்ட விஷயங்கள் தானாகவே நமக்குள் வந்துவிடும்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!



அதேபோலத்தான் எனக்கும் நடந்தது. அதற்குபின் என்னால் எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்க முடியவில்லை. அதனால் மறுபடியும் ஆடியோவைக் கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் 1000 ஆடியோ கேஸட்களுக்கும் மேல் கேட்டிருக்கிறேன். அந்த கேஸட்களை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

புத்தகங்களுக்கு நூலகம் இருக்கிற மாதிரி, என்னிடம் உள்ள ஆடியோ கேஸட்களை வைத்து ஒரு ஆடியோ லைப்ரரி வைக்கலாம் என யோசித்து வைத்துள்ளேன். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆடியோ கேஸட்களில் தீர்வு இருக்கிறது. அதற்காகவே இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

புத்தகம் படிப்பதை ஒரு காலகட்டத்தோடு போதும் என்று நினைத்து விட்டுவிடக் கூடாது. நான் கல்லூரியில் படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு மாணவன் பெரிய பெரிய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பான் என்று ஏற்கெனவே சொன்னேன் இல்லையா? அவனைச் சமீபத்தில் சந்தித்தேன். அப்போது அவனிடம், ‘‘இப்போது என்ன புத்தகம் படிக்கிறாய்?’’ என்று கேட்டேன்.

‘‘புத்தகமா, அதெல்லாம் கல்லூரியோடு சரி. அதுக்கு அப்பறம் நான் படிக்கவில்லை’’ என்று சொன்னான். அது மிகப்பெரிய தவறு. அதிகமாகப் புத்தகம் படிக்க வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு புத்தகத்தை அடிக்கடி படிக்க வேண்டும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். அதற்கான உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன்.

‘த சீக்ரெட்’ புத்தகத்தை எழுதிய எழுத்தாளரான ஜான் டிமார்டினி (Dr. John Demartini) தனது 16 வயதில் ஹவாய் என்ற தீவில் தனியாக இருந்தார். காட்டில் கிடைப்பதைச் சாப்பிடுவது, தண்ணீரில் விளையாடுவது, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியாக இருப்பது எனத் தினமும் இதையேதான் செய்துகொண்டிருப்பார்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி!


ஒரு நாள் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டு, மூன்று நாள்கள் எங்கேயும் செல்ல முடியாமல் அவரது கூடாரத்திலேயே படுத்துக்கிடந்தார். அந்த மூன்று நாள்களுமே அந்த வழியாகச் சென்ற ஒரு பெண் அவரைக் கவனித்திருக்கிறார். அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

ஒரு வழியாகக் குணமாகி வந்த ஜான் டிமார்டினி, ‘‘நான் ஏன் இப்படி இருக்கேன்? நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது’ என யோசித்துக் கொண்டே வந்தாராம். அப்போது அவரிடம் ஒரு பெரியவர், ‘‘தம்பி உன்னைப் பத்தி உனக்குத் தெரியல. உன்கிட்ட நிறையத் திறமை இருக்கு. நீ வாழ்க்கையில் பெரிய ஆளாய் வருவே’ என்று சொல்லி ‘Think and Grow Rich’ என்ற புத்தகத்தைக் கொடுத்தாராம். அந்தப் புத்தகத்தை அவர் ஒரே மாதத்தில் 30 முறை படித்தாராம்.

இது நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தேன். இப்போது வரை அவர் 30 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் படித்திருக்கிறார். பகவத் கீதையை 8 வெவ்வேறு வெர்சன்களில் படித்துள்ளார். அன்று அந்த பெரியவர் கொடுத்த புத்தகத்தை ஒரு முறை மட்டும் படித்திருந்தால், அவர் இன்று இந்த நிலைமையில் இருந்திருக்கமாட்டார்.

எனவே, அதிகமாகப் படியுங்கள், தொடர்ந்து படியுங்கள். நீங்கள் படிப்பதற்கு இடையூறாக எது இருந்தாலும் அதனிடம் இருந்து தள்ளியிருங்கள். வெற்றி உங்கள் வசப்படும்.

தொகுப்பு: மா.பாண்டியராஜன்

(மாத்தி யோசிப்போம்)