நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!

கா.முத்துசூரியா

மிகச் சிலர்தான் சம்பாதிக்க தொடங்கிய காலத்திலேயே சேமிக்க ஆரம்பிக்கிறார்கள். பலரும், 35 அல்லது 40 வயதுக்குப் பிறகு செலவுகள் துரத்தும் போதுதான் சேமிக்கத் தொடங்குகிறார்கள். 55 வயதில் ‘ஓய்வுக்காலத்துக்கு ஒண்ணுமே சேர்க்கலையே’ எனப் புலம்புகிறவர்களை விட, நடுத்தர வயதிலேயே சேமிப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டு விழித்துக் கொள்கிறவர்களைப் பாராட்டலாம். அந்த வகையில் நாணயம் விகடனின் நெடு நாளைய வாசகரான செல்வக்குமார் பாராட்டத்தக்கவர்.

“நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என் வயது 37. என் மாதச் சம்பளம் ரூ.31,000. என் மனைவி மற்றும் என் அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் இருவரின் மாதச் சம்பளம் ரூ.18,000. என் பெற்றோர்கள் என்னுடன்தான் வசித்து வருகிறார்கள். ஏழு வயது மற்றும் நான்கு வயதில் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!

இரண்டு மாதங்களுக்குமுன் பெர்சனல் லோன் ரூ.1 லட்சம் வாங்கினேன். அதற்கு மாதம் ரூ.3,200 செலுத்தி வருகிறேன். நகைக் கடன் ரூ.1.5 லட்சம். அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தி வருகிறேன். குழந்தைகள் இருவரும் நடனம் கற்று வருகிறார்கள். அதற்குக் கட்டணமாக இருவருக்கும் சேர்த்து மாதம் ரூ.1,700 செலுத்தி வருகிறேன்.  பள்ளிக்குச் செல்லும் வேன் கட்டணம், மளிகைப் பொருள்கள், பொழுது போக்குச் செலவுகள், இதர செலவுகள் என மொத்தமாக ரூ.27,000 ஆகிறது.

மெடிக்ளெய்ம் பாலிசி ரூ.3 லட்சம் உள்ளது. இதற்கு மாதம் ரூ.800 செலுத்தி வருகிறேன். ரூ.5 லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் மாதக் கணக்குப்படி ரூ.1,300 செலுத்தி வருகிறேன். ஆகமொத்தம், மாதமொன்றுக்கு ரூ.44,000 செலவாகிறது. இப்போதைக்கு ரூ.5,000 மட்டுமே மிச்சமாகிறது. 

ஆரம்ப காலத்தில் குடும்பச் செலவுகள் குறித்த தெளிவு இல்லை. எனவே, பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்கிற சிந்தனை இல்லை. திருமணத்துக்குப் பிறகே, குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் எப்படியெல்லாம் வரக்கூடும் எனப் புரிந்துகொண்டேன். குழந்தைகள் பிறந்தபின், அவர்கள் வளர வளர செலவுகள் அதிகரித்தன. கடன் வாங்கிச் சமாளிக்க வேண்டிய நிலை உருவானது. எனது அப்பாவுக்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல முடியும். சென்னை ஆவடி அருகில் அரை கிரவுண்ட் இடம் உள்ளது. இது தவிர, வேறு முதலீடுகள் எதுவும் இல்லை.

இரு பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்கு ரூ.20 லட்சமும், திருமணச் செலவுக்கு ரூ.45 லட்சமும் தேவை. எங்கள் ஓய்வுக் காலச் செலவுக்கு ரூ.50 லட்சம் தேவை. இதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் எனச் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்’’ என்று நம்மிடம் கேட்டிருந்தார் செல்வக்குமார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன். காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!

“உங்களுக்கு இப்போதைய நிலையில், ரூ.15 ஆயிரம் வரை மீதப்படுத்தி முதலீடு செய்ய முடியும். ஆனால், நகைக் கடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி வருகிறீர்கள். 15 மாதங்கள் வரை செலுத்த வேண்டும் என்பதால், அதை இப்போதைக்கு விட்டு விடலாம். இன்றைய சூழலில் உங்களால் ரூ.5 ஆயிரம் மட்டுமே முதலீட்டுக்கு ஒதுக்க முடியும். உங்களுடைய எல்லா இலக்குகளுக்கும் இப்போதிருந்து முதலீட்டைத் தொடங்க மாதம் ரூ.25,800 தேவை. அதற்கான சூழல் தற்போது இல்லை.

அவ்வப்போது ஏற்படும் செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டிய நிலையில் நீங்கள் தற்போது இருக்கிறீர்கள். சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே முதலீட்டைத் தொடங்காமல்விட்டது எவ்வளவு பெரிய தவறு என உங்களுக்கே இப்போது புரிந்திருக்கும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!



உங்களின் முதல் குழந்தைக்கான மேற்படிப்புக்கு இப்போது முதலீட்டை ஆரம்பித்தால், மாதம் ரூ.3,700 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இரண்டாவது குழந்தைக்கு மாதம் ரூ.2,300 முதலீடு செய்ய வேண்டும். முதல் குழந்தையைக் கல்லூரியில் சேர்த்து, அடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகே இரண்டாவது குழந்தையைக் கல்லூரியில் சேர்க்க வேண்டியிருப்பதால், இன்னும் ரூ.2 அல்லது ரூ.3  லட்சம் அதிகமாகத் தேவைப்படக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதல் குழந்தையின் திருமணத்துக்கு மாதம் 3,400 ரூபாயும், இரண்டாவது குழந்தைக்கு மாதம் 2,300 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

இன்றைய மதிப்பில் ரூ.7 லட்சம் என்பது உங்கள் முதல் குழந்தையின் திருமணத்தின்போது  ரூ.25 லட்சமாக இருக்கும். இன்றைய சூழலில் ரூ.7 லட்சத்துக்குள் திருமணச் செலவை அடக்க முடியாது என்பதே நிஜம். அப்படியானால் நீங்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ள தொகை போதுமானதாக இருக்காது. நீங்கள் அதற்கும் சேர்த்தே சிந்தித்தாக வேண்டும்.

அடுத்ததாக, உங்கள் ஓய்வுக் காலத்துக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூ.50 லட்சம் என்பதும் போதுமானதாக இருக்காது. இன்றைய சூழலில் கணவன், மனைவி என உங்கள் இருவருக்கும் ரூ.20 ஆயிரம் ஆகும் எனில், உங்களின் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.95 ஆயிரம் தேவை. அதற்கான கார்பஸ் தொகை ரூ.2.5 கோடி வேண்டும். அதற்கு இப்போதிருந்து ரூ.17,200 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பி.எஃப் தொகை ரூ.3,100 போக, 14,100 முதலீடு செய்ய வேண்டும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!

உங்கள் அப்பாவுக்கு இ.எஸ்.ஐ இருப்பதால், மெடிக்ளெய்ம் எடுக்காமல் விட்டுள்ளீர்கள். இ.எஸ்.ஐ மட்டும் போதுமானதாக இருக்காது. எனவே, அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் தொகையை உங்கள் பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்காக அவசரக் கால நிதியாக வைத்துக்கொள்ளவும்.

உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இதுவரை எடுக்கவில்லை என்பதும் குறைதான். போனஸ் பணம் ஏதும் கிடைக்கும்பட்சத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. நீங்கள் வைத்துள்ள இன்ஷூரன்ஸ் பாலிசித் தொகையை ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவும். முதிர்வுக்குப் பிறகு அதிக வருமானம் தரும் திட்டங்களுக்கு மாற்றிக்கொள்ளவும்.

 ஒரு முக்கியமான விஷயம், நடுத்தர வருமானக் காரர்களுக்குப் பொதுவாகவே சொந்த வீடு என்பது ஒரு கனவாக இருக்கும்.உங்கள் எதிர்கால முதலீட்டுக்கான நல்ல சூழல் அமையாத வரை நீங்கள் சொந்த வீடு என்கிற கனவுக்குள் சிக்கி, இ.எம்.ஐ வலைக்குள் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, வருமானத்தை அதிகப்படுத்தும் சூழலை உருவாக்குங்கள். முதலீட்டுக்குத் தேவையான பணம் இல்லாதபோது, உங்கள் இரு குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தருவது பற்றி மறுபரீசிலனை செய்யலாமே! இனிவரும் காலத்தில் செலவுகளைக் குறைத்து முதலீட்டை  அதிகப்படுத்துங்கள்.’’

பரிந்துரை: ஐ.சி.ஐசி.ஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப்- ரூ.1,000,    எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் -    1,500, கோட்டக் செலெக்ட் ஃபோகஸ் -1,000    , செல்வமகள் திட்டம் -2,000, ஐ.டி.பி.ஐ கோல்டு ஃபண்ட் -ரூ.500

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம். 

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்!