நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?

நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?

நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?

“நம்பிப் போட்டேன்; நஷ்டமாப் போச்சே” என்றபடி என்முன் வந்து உட்கார்ந்தார் நண்பர் மாதவன். மாதவன் மேற்படிப்புப் படித்தவர்; ஐ.டி கம்பெனியில் நல்ல உயர் பதவியில் இருப்பவர்; கை நிறையச் சம்பளம். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவருக்குச் சேமிப்புக் கணக்கு இருக்கிறது. அநாவசியமாக எந்தச் செலவையும் செய்ய மாட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வங்கியிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. “சார், உங்க கணக்கில் பணத்த சும்மாதான போட்டு வெச்சுருக்கீங்க... ஒரு நல்ல சேவிங்க்ஸ் பிளான் இருக்கு. அதுல போட்டு வெச்சா, இப்ப இருக்கிறதைவிட அதிக வருமானமும் கிடைக்கும்; கூடுதலா இன்ஷூரன்ஸும் கிடைக்கும்” என்றார் போனில் பேசியவர். 

நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?

‘சரி, இப்போதைக்குப் பணம் சும்மாதான கிடக்கு’ன்னு ஒப்புக்கொண்டு, அவர்கள் சொன்ன திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தார்.

அந்த ஆண்டே முதலீட்டில் பெரும்பகுதி காலி. கேட்டால், ‘‘முதல் ஆண்டு அப்படித்தான் இருக்கும். ஏஜென்ட் கமிஷன் கொஞ்சம் அதிகம்.  அடுத்த ஆண்டிலிருந்து வருமானம் கொட்டும்’’  என்றார்கள். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் முதலீடு வளரவே இல்லை. சொல்லப்போனால், நஷ்டம் ஏற்படத் தொடங்கியது.

இதுவரை ஏற்பட்ட நஷ்டம் போதும். இத்தோடு பணத்தை வெளியே எடுத்தால் மிச்சமிருக்கும் பணத்தையாவது பாதுகாப்பாக வேறு எங்காவது முதலீடு செய்யலாம் என வங்கிக்குச் சென்றால், இந்தத் திட்டத்தை விற்ற அதிகாரி அங்கு இல்லை. மாறுதலாகிச் சென்றுவிட்டார்.
இப்போது இருக்கும் அதிகாரி, “ஐந்து ஆண்டுக்கு முன்னே பணத்த எடுப்பது சிரமம்; உங்களுக்கு இழப்பும் அதிகமாகும்” என்றார். முடிந்தவரைத் திட்டித் தீர்த்துவிட்டு வந்ததுதான் மிச்சம்.

அதுவரை இந்தத் திட்டம் அந்த வங்கியுடையது என நம்பிக்கொண்டிருந்தவருக்கு, அது அவர்கள் திட்டமல்ல; வெளிநிறுவனம் ஒன்றின் திட்டத்தைத்தான் அவர்கள் மார்க்கெட்டிங் செய்து தன் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. “ஏன் சார், நீங்களெல்லாம் படிச்சவங்கதானே... முதலீடு செய்யறதுக்கு முன்னேயே, எல்லாத்தையும் படிச்சுப் பார்த்துப் பணத்தப் போடமாட்டீங்களா” என்று வேறு கேட்டு வெறுப்பேற்றினார் அந்த வங்கி அதிகாரி.

நாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..?


மாதவன் மட்டுமல்ல, அவரைப் போல பாதிக்கப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். காப்பீடு மட்டுமல்ல, வரிச் சேமிப்புத் திட்டங்கள், குழந்தைகள் கல்வித் திட்டம், ரியல் எஸ்டேட் முதலீடுகள், தங்கம் என வங்கித் துறைக்கும் வங்கிகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத முதலீட்டுத் திட்டங்களை எல்லாம் அப்பாவி முதலீட்டாளர்கள் தலையில் கட்டிவிட்டு,  வேறு ஊருக்கு மாற்றல் வாங்கித் தப்பித்த வங்கி ஊழியர்கள் அதிகம்.

குறைந்த வட்டிக்கு டெபாசிட்டுக்களைப் பொது மக்களிடமிருந்து பெற்று, கொஞ்சம் அதிக வட்டிக்குத் தொழில்முனைவோருக்குக் கொடுத்து அதில் லாபம் ஈட்டுவதுதானே வங்கிகளின் வேலை. ஆனால், இன்று அதைத் தவிர வேறு பலவற்றை அதிகமாகச் செய்கின்றன வங்கிகள். அவற்றின் லாப, நஷ்டங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்பதில்லை என்பது ஜீரணிக்க முடியாத நிஜம். 

சொல்லப்போனால், முதலில், நம் கணக்கில் எவ்வளவு தொகை இப்போது இருக்கிறது என்னும் தகவலைக் கையில் வைத்துக்கொண்டு இப்படித் செய்வதே மிகப் பெரிய தவறு. இதில், சரியான புரிதல் இல்லாமல், வேறு ஒரு நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தைச் சம்பந்தமே இல்லாமல் விற்பனை செய்வது எவ்வளவு பெரிய ரிஸ்க்? இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?

வங்கிகளின் சேவைகளில் உள்ள குறைபாடு களை மட்டுமே இதுவரை முறையிட முடியும். இந்த மாதிரி ‘தவறான விற்பனை’ (misselling) பற்றி யாரிடம் முறையிடுவது என்ற பிரச்னை இவ்வளவு நாள் இருந்து வந்தது. இனி அந்தக் கவலை இல்லை.

வங்கிச் சேவையில் குறை கேட்க, ‘பேங்கிங் ஆம்புட்ஸ்மேன் ஸ்கீம் 2006’-ல் சில மாற்றங்களைச் சேர்த்து, கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டு இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. இது, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி மொபைல் பேங்கிங், வெளி நிறுவனங்களுடைய காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் என வங்கி சார்பில்லாத திட்டங்களை  வாடிக்கை யாளர்கள் தலையில் கட்டினாலோ, ஒளிவு மறைவற்ற தன்மை குறைவாக இருந்து ஏதாவது தகவல் மறைக்கப்பட்டிருந்தாலோ, சரியாகவோ விளக்கமாகவோ சொல்லாமல் விடப்பட்டு இருந்தாலோ, குறைகளைக் களைவதற்கு யாரை அணுகுவது என வாடிக்கையாளருக்கு இருக்கும் முறைகளைச் சரியாகச் சொல்லாமல் விட்டிருந்தாலோ, விற்பனைக்குப் பிந்தையச் சேவைகளை முறையாகச் செய்யாவிட்டாலோ, ‘வங்கியின் சேவையில் குறைபாடு’ எனக் குற்றம் சாட்டி அருகிலிருக்கும் அந்தப் பகுதிக்கான பேங்கிங் ஆம்புட்ஸ்மேனை அணுகித் தீர்வு காணலாம்’’  எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

“ஆட் ஆன் கார்டு தருகிறோம், கார்டு மீது காப்பீடு தருகிறோம்” என அழைத்துத் தொந்தரவு செய்தால்கூட புகார் செய்யலாம். இது சம்பந்தமான முழு விவரங்களும் ஆன்லைனில், பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BOS2006_2302017.pdf

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், அபராதம், அபராத வட்டி, உள்ளிட்ட பல சேவைகளில் உள்ள குறைகள் சம்பந்தமாகவும் ஆம்புட்ஸ் மேனிடம் முறையீடு செய்யலாம். முதலில் வங்கிக்கு எழுத்து மூலமாக முறையிட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களால் அதுமுறையாகத் தீர்த்து வைக்கப்படாவிட்டாலோ, அல்லது தரப்படும் தீர்வு திருப்திகரமானதாக இல்லையென்றாலோ அதன் பின்னர் பேங்கிங் ஆம்புட்ஸ்மேனிடம் நாம் முறையிடலாம். அவர்கள் கொடுக்கும் தீர்வும் திருப்திகரமானதாக இல்லையென்றால், இதற்கான மேல் முறையீட்டு அமைப்பான ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரிடம் முறையிடலாம். இது எதற்கும் எந்த விதமான கட்டணங்களும் இல்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருப்பவர்கள் சென்னையில் உள்ள ஆர்.பி.ஐ அலுவலகத்தை அணுக வேண்டும். 
   
உங்களுக்கொரு ஆலோசனை... இனிமேலாவது கண் வலிக்கு வைத்தியம் பார்க்க பல் டாக்டர் கிட்ட போகாதீங்க. அந்தந்தத் துறையில படித்த, விவரமான, நல்ல அனுபவமிக்க வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, யோசித்து முடிவெடுத்து முதலீடு செய்வது நல்லது.