நடப்பு
தொடர்கள்
Published:Updated:

குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!

குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!

பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், fortuneplanners.com

டுத்தர வர்க்கத்தினர் மலைபோல நம்பி சேமித்து வந்த திட்டங்களுக்கான வட்டியை மேலும் குறைத்திருக்கிறது மத்திய அரசு (பார்க்க தபால் அலுவலக சேமிப்புகள் அட்டவணை). இந்த வட்டி விகிதம் இன்னும் குறையலாம் என்பதே தற்போதுள்ள நிலைமை. இந்த நிலையில், இனி எதில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்கிற கேள்வி நடுத்தர வர்க்கத்தினரின் மனதில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதில் இனி...

‘‘நாம் முதலீடு செய்யும்போது, நாம் எவ்வளவு காலத்துக்குச் செய்யப்போகிறோம், நாம் எதிர்பார்க்கும் வருமானம் எவ்வளவு, நாம் செய்யும் முதலீட்டில் ரிஸ்க்குகள் என்னென்ன, அந்த முதலீடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரக்கூடியதா, அந்த முதலீட்டைக் கண்காணிக்க அரசு அமைப்புகள் ஏதும் உண்டா, முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்குச்  செலுத்த வேண்டிய வரி, கடந்த காலத்தில் கிடைத்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்குமா என்பவற்றையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

ஆனால், பலரும் இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த சில வருடங்களாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட,  பாதுகாப்பான முதலீடுகளின் வட்டி குறைந்துகொண்டே வருகிறது. இனிவரும் காலத்திலும் இந்த வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!

நம் நாடு இன்னும் 10 வருடங்களில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதத்தைப் பார்த்தால், 1 - 2 சதவிகிதமே கிடைக்கிறது. எனவே, நம் வட்டி விகிதம் வரும் காலங்களில் குறையவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வங்கி வைப்புத் திட்டங்களுக்கும், உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களுக்குமான வட்டி வருமானம் குறைந்து வரும் வேளையில், இனி எதில்தான் முதலீடு செய்வது என்கிற கேள்வி எல்லோருக்குமே எழும்.

குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!


கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் மிகச் சில காலகட்டங்களில் மட்டுமே ரியல் எஸ்டேட் விலை அதிவேகமாக உயர்ந்து, வருமானம் தந்திருக்கிறது. மற்ற காலங்களில் அது குறைவான வருமானத்தையே தந்திருக்கிறது. தற்போது பல நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை மைனஸில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. தவிர, நீங்கள் வீடு வைத்திருந்து, அதில் வரும் வாடகை வருமானத்துக்கு நம் வருமான வரிக்கேற்ப வரி செலுத்த வேண்டும். இன்று சொத்தின் மதிப்பில் வாடகை மூலமான வருமானம் என எடுத்துக்கொண்டால், அது 2% க்கு மேல் கிடைக்காது. அதாவது, நம்முடைய வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய வாடகை ரூ.10,000 மட்டுமே. எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு உயருமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் என்றாலும், நீண்ட காலத்தில் ஒற்றை இலக்கச் சதவிகிதத்தில் மட்டுமே அது வளர்ந்திருக்கும். 

தங்கத்தில் முதலீடு செய்தாலும் எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நம் மக்களிடம் இருக்கிறது. ரியல் எஸ்டேட் போலவே ஒரு சில ஆண்டுகளில் தங்கத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட கொஞ்சம்தான்  அதிக வருமானம் தருவதாகவே தங்கம் இருக்கிறது. 

குறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி!

ஆனால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டைவிட பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்தில்  பணவீக்கத்தைவிட கணிசமான வருமானத்தைத் தரவல்லது. இதனால்தான் வளர்ந்த நாடுகளில் பலரும் பங்குச் சந்தை முதலீட்டை விரும்பிச் செய்கிறார்கள். அமெரிக்காவில் 80 சதவிகித்தினருக்கு மேல் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டைத் தேர்வு செய்கிறவர்கள் வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே. மேலும், இதில் செய்யப்பட்டுள்ள முதலீடு ஒரு வருடத்தைக் கடந்துவிட்டால் கிடைக்கும் லாபத்துக்கு ஒரு ரூபாய்கூட வரி கட்ட வேண்டியதில்லை, இப்போதுள்ள விதிமுறைகளின்படி.

‘‘பங்குச் சந்தையா..? அதில் முதலீடு செய்தபின், சந்தை விழுந்துவிட்டால்..?’’ எனப் பலர் பயப் படுகிறார்கள். பங்குச் சந்தை எப்போதும் உயர்ந்து கொண்டே செல்லும் முதலீடு அல்ல; ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். குறைந்தபட்சம் 10 சதவிகித இறக்கத்தைக் கண்டு பதறாத முதிர்ச்சி நமக்கு வேண்டும். 2008-ல் பங்குச் சந்தை 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விழுந்த வேகத்தில் சந்தை மீண்டு வந்தது வரலாறு. இனி சந்தை நிச்சயம் விழும். ஆனால், விழுந்த சந்தை மீண்டும் உயரும்.

‘‘எனக்குப் பங்குச் சந்தை பற்றித் தெரியாது. பங்குகளின் செயல்பாட்டினை என்னால் நேரடியாகக் கண்காணிக்க முடியாது’’ என்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் இரட்டை இலக்க வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தாராளமாகத் தேர்வு செயலாம்.

நீண்ட காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு, பேலன்ஸ்டு வகை பண்டுகள், குறைந்த ஏற்ற இறக்கம் மற்றும் குறைவான ரிஸ்க்-ல் நல்ல பலன் தரும். ஆனால், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்காவது நம் முதலீட்டை அதில் வைத்திருக்க வேண்டும்.

போஸ்ட் ஆபீஸ், சீனியர் சிட்டிஷன் சேவிங்ஸ், பி.பி.எஃப், செல்வமகள் திட்டம் என எல்லாமே நீண்ட கால முதலீடுகளாகும். அவற்றில் முதலீடு செய்யும்போது யாரும் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுமாதிரி, மியூச்சுவல் ஃபண்டிலும் 15 அல்லது 20 ஆண்டுகள் முதலீட்டைப் போட்டு வைத்திருந்தால், குறைந்த வருமானம் என்கிற பேச்சுக்கே இடமிருக்காது!