நடப்பு
தொடர்கள்
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

இழுபறியில் ஃப்ளிப்கார்ட் - ஸ்நாப்டீல்!

இந்தியாவின் மிகப் பெரும் ஆன்லைன் நிறுவனமான ஸ்நாப்டீல்-ஐ, இன்னொரு பெரிய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் வாங்கும் முயற்சி இழுபறி நிலையை எட்டியிருக்கிறது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியனுக்கு மேல் எனச் சொல்லப்பட்டாலும், தற்போது அதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6,500 கோடி) எனக் கருதப்படுகிறது. எனவே, ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 700 - 800 மில்லியன் டாலர் வரை தரத் தயார் என்று சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஃப்ளிப்கார்டின் இந்த ஆஃபரை ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. முக்கியமாக, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சாஃப்ட்பேங்க் நிறுவனம் ‘இது மிகவும் குறைவான தொகை’ என்று சொல்லி ஏற்க மறுத்திருக்கிறது. இந்தப் பேரத்தினால் இரு நிறுவனங்களும் இணையும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது. Dragging deal!

BIZ பாக்ஸ்

‘எந்திரன் 2.0’-க்கு தயாராகும் தியேட்டர்கள்!

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது ‘எந்திரன் 2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரப் போகிறது. ரஜினி நடிக்கும் இந்தப் படமானது 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படம், இந்தியாவில் 10,000 திரையரங்குகளில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1,500 திரையரங்குகள் ஏற்கெனவே 3டி தொழில்நுட்பம் கொண்டவை. ‘எந்திரன் 2.0’ வெளியாவதையொட்டி இன்னும் பல திரையரங்குகள் 3டி தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றனவாம்! Citi, waiting for you!

BIZ பாக்ஸ்

என் சாய்ஸ் இந்தியாதான்!

உலகத்தின் எல்லா சந்தைகளிலும் முதலீடு செய்கிற பங்குச் சந்தை முதலீட்டு ஜாம்பவான் மார்க் பேபர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

‘‘அடுத்த பத்து ஆண்டுக் காலத்தில் நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமெனில், அமெரிக்கச் சந்தையைவிட இந்தியச் சந்தையையே தேர்வு செய்வேன். நீண்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உலக அளவில் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருக்கும் இன்றைய நிலையில், நான் 22% லாபம் கண்டிருக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். நம் மீது வெளிநாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நம்மவர்களுக்கு இல்லையே...Feel really sad!

BIZ பாக்ஸ்

ரூ.45,000 கோடி - பி.எஃப்-லிருந்து் பங்குச் சந்தையில் 2018 மார்ச்சுக்குள் முதலீடு செய்யப்படவுள்ள தொகை!

‘‘ஜி.எஸ்.டி வரியை ஆறு, ஏழு விகிதங்களில் போட்டுவிட்டு, ஒரே நாடு, ஒரே வரி என்று எப்படிச் சொல்ல முடியும்?’’

- மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

BIZ பாக்ஸ்

ஸ்ரீராம் கேப்பிட்டலை வாங்கும் ஐ.டி.எஃப்.சி வங்கி!

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கேப்பிட்டலுக்குச் சொந்தமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனங்களை வாங்கித் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த வாரம் தொடங்கப் போகிறது ஐ.டி.எஃப்.சி வங்கி. இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியராக இருந்த தியாகராஜன், 1.2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஸ்ரீராம் குரூப் என்கிற மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது ஒரு பெரும் சாதனைதான்!

BIZ பாக்ஸ்

ஓய்வு பெற்றவருக்கு ஒரு கோடி சம்பளமா?

ஐ.டி.சி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்து ஓய்வு பெற்றவர் யோகேஷ் தேவேஷ்வர். இவருக்கு அடுத்து ஐ.டி.சி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகப் பதவியேற்றிருப்பவர் சஞ்சய் பூரி.ஐ.டி.சி நிறுவனத்தை நடத்த சஞ்சய்க்கு ஆலோசனை வழங்க மாதமொன்றுக்கு ரூ.1 கோடியை தேவேஷ்வருக்குச் சம்பளமாகத் தர ஐ.டி.சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இது தற்போதைய சி.இ.ஓ-வின் சம்பளத்தைவிட அதிகம். எனவே, இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என முதலீட்டாளர் அமைப்பு ஒன்று போர்க்கொடி தூக்கியிருக்கிறது!

2023-ல் ரூ.62 லட்சம் கோடி!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தற்போது  நிர்வகிக்கும் மொத்த சொத்த மதிப்பு ரூ.19.04 லட்சம் கோடியாக இருக்கிறது. இது 2020-21-ம் ஆண்டில் 41.60 லட்சம் கோடியாகவும், 2021-22-ல்  51 லட்சம் கோடியாகவும், 2022-23-ல் ரூ.62.70 லட்சம் கோடியாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணிப்பு நிஜமாகும்பட்சத்தில், பொன்ஸி மோசடி நிறுவனங்கள் எல்லாம் இல்லாமல் போய்விடும் என்று நம்பலாம்!

BIZ பாக்ஸ்

பாலா பாலச்சந்திரன் @ 80

விப்ரோவின் அஸீம் பிரேம்ஜி முதல் நம்மூர் தொழிலதிபர்கள் வரை அனைவரின் பிசினஸ் ஆலோசகராக இருப்பவர் பேராசிரியர் பாலா பாலச்சந்திரன். அவருக்கு வருகிற 14-ம் தேதி 80-வது பிறந்த நாள். இதனைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள் கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். அன்று நடக்கும் பாலாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பெரிய தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். Happy Birth Day Professor!