
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம்
கடந்த சில தினங்களில் தங்கம் விலை நகர்ந்தபோது, அதனுடைய உச்சம் மற்றும் நீச்சம் குறைந்துகொண்டே வந்தது. இதனால், அடுத்து வருகிற நாள்களில் ஒரு வலிமையான பிரேக் அப் அல்லது பிரேக் டவுன் நிகழ வாய்ப்புள்ளது. இந்தக் குறுகிய நகர்வின் முக்கியமான ஆதரவு எல்லை 28,450 ஆகும்.

எனவே, அடுத்து ஒரு பெரிய நகர்வுக்குத் தங்கம் காத்திருக்கிறது. அதைப் போலவே, தங்கம் 28450-ஐ உடைத்துத் திங்களன்று குறைந்தபட்சப் புள்ளியாக 28110 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் அடுத்தடுத்து பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்தது. வெள்ளியன்று பக்கவாட்டு நகர்வையும் உடைத்துக் கீழே இறங்க ஆரம்பித்தது.
இனி என்ன நடக்கலாம்? இதுவரை 28,150 என்பது வலுவான ஆதரவாக இருந்து வந்தது. இந்த எல்லை உடைக்கப்பட்டவுடன், இதுவே தற்போது வலுவான தடைநிலையாக மாற வாய்ப்புள்ளது. அதைத் தாண்டி ஏறினால், 28,250 என்பது உடனடித் தடைநிலை. கீழே 28,000 உடைக்கப்பட்டால், இறக்கம் இன்னும் வலிமையாக இருக்கலாம்.

வெள்ளி
தங்கத்தைப் போலவே, வெள்ளியும் சென்ற வாரம் பெரிய இறக்கத்தைச் சந்தித்தது. நாம் சென்ற வாரம் சொன்னது...
38,400 என்ற ஆதரவு நிலையை உடைத்தால், வெள்ளி பெரிய அளவில் இறங்க வாய்ப்புள்ளது. அதாவது, 38,400 என்ற ஆதரவு எல்லையை உடைத்தவுடன், இறக்கம் படுவேகமாக இருந்தது. சென்ற திங்களன்று தங்கம் இறங்கிய வேகத்தில் வெள்ளி இறங்கியது.
ஆனால், அடுத்த மூன்று நாள்கள் தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், வெள்ளியானது ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வந்தது. திங்களன்று குறைந்தபட்சப் புள்ளியாக 37,805-யைத் தொட்டது. அதன்பின்னும் இறங்கி 37000 என்ற புள்ளியை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த இறக்கத்தின் கடைசி ஆதரவு நிலை 37,350 ஆகும். இதை உடைத்து இறங்கியபிறகு, அதுவே தற்போது தடைநிலையாக உள்ளது. அடுத்து 37,650 வலுவான தடைநிலை. 37000-க்குப்பிறகு, இறக்கம் தொடரலாம்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் தொடர்ந்து ஏற்றத்தில் லாபத்தைக் கொடுத்து வந்தது. நாம் சென்ற வாரம் சொன்னது...
இனி இந்த 2,960 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இந்த இடத்தைத் தாண்டும்போது ஏற்றம் இன்னும் சூடுபிடிக்கலாம். அடுத்த கட்டமாக 3,040 என்ற எல்லையையும், அதையும் தாண்டும்போது 3,135 என்ற எல்லையையும் அடைய வாய்ப்புண்டு. கச்சா எண்ணெய் ஏற்றம் தொடர்ந்தது. 2,960-யையும் தாண்டி 3,075 வரை சென்றது. பின் ஒரு ஸ்பின்னிங் டாப்பை உருவாக்கி ஏற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அதன்பின் கீழே இறங்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், சென்ற வாரம் நாம் கொடுத்து இருந்த முக்கிய ஆதரவு 2,840 ஆகும். கச்சா எண்ணெய் தற்போது இதை உடைக்க முயல்கிறது. இதை உடைக்காத வரை மீண்டும் ஏறி, 3,075 என்ற எல்லையை நோக்கி நகரலாம். ஆனால், 2,840 உடைக்கப்பட்டால் இறக்கம் கணிசமானதாக இருக்கும். அடுத்த எல்லைகள் 2,780 மற்றும் 2,720 ஆகும். இதற்குக் கீழ் மீண்டும் பெரிய இறக்கம் வரலாம்.

இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு-வில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அது சென்ற வாரத்துக்கும் பொருந்தும். சென்ற வாரம் சொன்னது... ஒருவேளை 193 உடைக்கப்பட்டால், வலிமையாக இறங்கி 187 என்ற மிக முக்கிய ஆதரவை நோக்கி நகரலாம் என்று. அதன்படியே நடந்தது. மெள்ள மெள்ள ஆரம்பித்த இதன் விலை, சென்ற புதன் அன்று வலிமையாக இறங்கி, 183.90 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டது. தற்போது புல்பேக் ரேலியில் உள்ளது. இதன் உடனடித் தடைநிலை 190 ஆகும். தாண்டினால், 196 மற்றும் 202-யைத் தொடலாம். முக்கிய ஆதரவு 185 ஆகும்.

மென்தா ஆயில்
மென்தா ஆயில் பற்றி நாம் சென்ற வாரம் சொன்னது... இனி ஜூலை கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். இதன் உடனடித் தடை நிலை 902 ஆகும். ஆதரவு எல்லை 885 ஆகும். மென்தா ஆயிலுக்கும் சென்ற வாரம் ஒரு பம்பர் வாரம் ஆகும். தடைநிலையான 902-யை உடைத்து 942 என்று ஏறிக்கொண்டு இருக்கிறது. தற்போது 950 என்பது வலிமையான தடை நிலை ஆகும். இதை இடித்துக் கீழே இறங்க வாய்ப்புள்ளது. அதையும் உடைத்தால் மிகப் பெரிய ஏற்றம் வரலாம். கீழே ஆதரவு 920 ஆகும்.

காட்டன்
காட்டன் பற்றி சென்ற வாரம் சொன்னது. காட்டன் நல்ல இறக்கத்தில் இருந்து வந்தது. உடனடித் தடைநிலை 20100 ஆகும். சென்ற வாரம் இந்தத் தடையை உடைத்து பலமாக ஏறி 20,850 என்ற எல்லையைத் தொட்டுள்ளது. ஒரு ஹயர் பாட்டத்தை தோற்றுவித்து பலமாக ஏறியுள்ளது.இந்த நிலையில், இனி 21100 என்பது மிக வலிமையான தடைநிலை ஆகும். அதை உடைத்தால் மிகப் பெரிய ஏற்றம் வரலாம். கீழே 20200 என்பதை முக்கிய ஆதரவாகக் கொண்டு உள்ளது.