
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ சி.செந்திலாண்டவன், ராஜபாளையம்.
நான் நாணயம் விகடனைத் தொடர்ந்து படித்து வருவதன் விளைவாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடும் செய்துவருகிறேன். நான் கடந்த ஜனவரி 2016-லிருந்து ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோக்கஸ் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், பிர்லா சன்லைப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், டி.எஸ்.பி. பிளாக்ராக் ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீட்டைத் தொடங்கும்போது பெற்ற யூனிட்கள் ஒவ்வொரு மாதமும் கணிசமாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இதனால் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் குறைய வாய்ப்புண்டா? இதில் நான் மேலும் முதலீட்டைத் தொடரலாமா?
‘‘நீங்கள் சில மாதங்கள் முன்புதான் உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்துள்ளீர்கள். தற்போது நடந்துகொண்டிருப்பது காளைச் சந்தை. காளைச் சந்தையில் யூனிட்டுகளின் விலை உயர்ந்து கொண்டுதான் செல்லும். அதனால் நீங்கள் முதலீடு செய்யும் குறிப்பிட்ட தொகைக்கு, யூனிட்டுகள் குறைவாகத்தான் கிடைக்கும். எஸ்.ஐ.பி முதலீட்டின் மகிமையைக் குறைந்தது ஒரு காளைச் சந்தை மற்றும் ஒரு கரடிச் சந்தையில் முழுவதுமாக முதலீடு செய்தவர்கள்தான் உணர்வார்கள். நீண்ட காலம் நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது, உங்களுக்கு விலைகள் சராசரியாகி நல்ல வருமானம் கிடைக்கும். ஆகவே, குறுகிய கால லாப/ நஷ்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து வாருங்கள்.

@ஆர்.ஸ்ரீனிவாசன்,
நான் கடந்த ஆகஸ்ட் 2016-ல் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தேன். ஓராண்டு காலம் கழித்து இதனை மன்த்லி டிவிடெண்டாக மாற்றப் போகிறேன். 69 வயதான எனக்கு இந்த ஃபண்ட் ஏற்றதுதானா, டிவிடெண்டாகப் பெறும் தொகைக்கு நான் வரி கட்ட வேண்டுமா, இதனை வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டுமா?
‘‘நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்ட் உங்கள் வயதுக்கு ஏற்றதா, இல்லையா என்பதை உங்களின் தேவையை வைத்துத்தான் பதில் சொல்ல முடியும். நீங்கள் முதலீடு செய்துள்ள ரூ.15 லட்சத்தை வைத்துத்தான் உங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்ட் உங்கள் வயதுக்கு ஏற்றதல்ல. இந்த ஃபண்டிலிருந்து கிடக்கும் வருமானம் உங்களுக்கு அவசியமில்லை என்றால், அந்த ஃபண்டில் நீங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வரலாம். பேலன்ஸ்டு ஃபண்டுகளிலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட், டாக்ஸ் ஃப்ரீயாகும். உங்களது வருமான வரித் தாக்கலில், வரி விலக்கு வருமானத்தில் டிவிடெண்ட் வருமானத்தைக் காண்பித்துக் கொள்ளலாம்.’’
@கல்யாணசுந்தரம்.
4 அல்லது 5 நட்சத்திரங்களைப் பெற்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது கடந்த காலத்தில் கிடைத்த லாபத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யலாமா?
‘‘கிரிஸில், வேல்யூ ரிசர்ச், மார்னிங்ஸ்டார் போன்ற பல நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு ரேட்டிங்கை வழங்குகின்றன. இந்த ரேட்டிங்கில் வருமானம் என்பது ஒரு முக்கியப் பங்கு வகுக்கிறது. ஒரு நிறுவனம் ஒரு ஃபண்டுக்கு 4 ஸ்டார் தந்திருக்கலாம்; அதே ஃபண்டுக்கு மற்றொரு நிறுவனம் 3 ஸ்டார் கொடுத்திருக்கலாம். நீங்கள் ஒரு ஃபண்டில் நுழையும்போது பல பரிமாணங்களைப் பார்க்கையில், ஸ்டார் ரேட்டிங்கையும் ஒரு பரிமாணமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்யும்போது ஒரு ஃபண்டுக்கு ரேட்டிங் 5 ஸ்டாராக இருந்திருக்கலாம். அதுவே சில மாதங்களுக்குப் பிறகு 4 அல்லது 3 ஸ்டாராக மாறியிருக்கலாம். அதற்காக அந்த ஃபண்டினை விட்டு உடனுக்குடன் வெளியேற முடியாது. ஆகவே, ஓரு ஃபண்டினைப் பற்றி ஆராயும்போது, ஸ்டார் ரேட்டிங்கையும் ஒரு அங்கமாக வைத்துப் பார்க்கலாமே ஒழிய, அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தர வேண்டாம். அதன் கடந்த காலச் செயல்பாடு, அந்த ஃபண்டின் மேனேஜரின் கடந்த காலச் செயல்பாடு, போர்ட்ஃபோலியோவில் லார்ஜ்கேப், மிட்கேப் போன்றவற்றின் சதவிகிதம், கரடிச் சந்தையில் அந்த ஃபண்டின் செயல்பாடு, ஃபண்ட் நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடு போன்ற பல அம்சங்களையும் பார்த்து ஒரு ஃபண்டினைத் தேர்வு செய்வது சிறந்தது.
சில சிறிய ஃபண்டுகள், துறை சார்ந்த ஃபண்டுகள் அல்லது ஸ்பெஷல் ஃபண்டுகள் போன்றவற்றை ரேட்டிங் நிறுவனங்கள் அலசி ஆராய்ந்து ரேட்டிங் கொடுப்பதில்லை. ஆகவே, அந்த ஃபண்டுகளைப் பற்றி விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.’’
