
கேள்வி பதில்

‘‘அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வெளிநாட்டில் பணிபுரிய உள்ளேன். செலவு போக மாதம் ரூ.2 லட்சம் மிச்சமாகும். ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் இருக்கிறது. தவணைக் காலம் முடிவடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன. இந்தக் கடனை ஒரே ஆண்டில் முடிப்பது நல்லதா அல்லது ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்வதா? ஒரே ஆண்டில் முடித்தால் வருமான வரி விலக்கு கிடைக்குமா?”
நாகராஜன், சென்னை

கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்
``இந்தியாவில் வரி விலக்குக்கு ஏற்ப வருமானம் இருந்து வீட்டுக் கடனை ஒரே ஆண்டில் கட்டி முடித்தால் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் 80சி-ன் படி நிபந்தனைக்குட்பட்டு அசலில் ரூ.1.5 லட்சம், சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்ய முடியும். மொத்தமாக, ரூ. 3.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இதுவே ஐந்து ஆண்டு எனில், ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை க்ளெய்ம் செய்ய முடியும். மொத்தத்தில் ஐந்து ஆண்டுக்கு ரூ.17.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெற முடியும். ஆகையால், இந்தியாவில் வரி விலக்குக்கு ஏற்ப வருமானம் இருந்தால் மேலே குறிப்பிட்டபடி வரி விலக்குப் பெற முடியும். இதுவே இந்தியாவில் வருமானம் வரி விலக்கு வரம்பைத் தாண்டும் பட்சத்தில் வரி விலக்கு எதுவும் கிடைக்காது. இந்தியாவில் வருமானம் இல்லாதபட்சத்தில், வீட்டுக் கடனை முடிந்தவரை உடனடியாக முடிப்பது நல்லது.”
‘‘பங்குச் சந்தையில், முதலீட்டாளர் இறந்தபின் அவருடைய பங்குகளை நாமினிக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறை மற்றும் வரி விதிப்பு என்ன? இந்தப் பங்குகளை விற்பனை செய்வதாக இருந்தால் நாமினிக்கு வரி விதிப்பு என்னவாக இருக்கும்?’’

சங்கர், திருநெல்வேலி
எஸ்.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்
``முதலீட்டாளர் இறந்தபிறகு அவருடைய வாரிசுதாரர்கள் தங்கள் பெயருக்குப் பங்குகளை மாற்ற வேண்டுமெனில், அதற்கான விருப்ப மனுவுடன் சேர்த்து முதலீட்டாளரின் இறப்புச் சான்று, வாரிசுதாரர் என்பதற்கான சான்று (உயில்) மற்றும் பங்குச் சான்றிதழின் அசல் ஆகியவற்றை உரிய நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்த பிறகு வாரிசுதாரரின் பெயர் நிறுவனத்தின் குறிப்பேட்டில் சேர்க்கப்படும். மேலும், அந்தப் பங்குகளை ஓராண்டுக்குப் பிறகு விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி இல்லை. ஓராண்டுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்ட வேண்டி வரும்.”
‘‘ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். முக்கியமான வியாதிகளுடன்கூடிய இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ராஜேந்திரன், ஓசூர்.
எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
``ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்தவரை, பாலிசி எடுக்கும்முன் இருக்கும் நோய்களுக்கு முதல் 3-4 வருடங் களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. மேலும், ஒரு சில பாலிசிகளில் முன்னரே உள்ள நோய்களுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்படும்.
பாலிசி எடுக்கும்முன், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி, இந்தத் துறையில் அதற்கு உள்ள அனுபவம், பாலிசியின் தன்மை, க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் மற்றும் பிரீமியம் தொகை ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.”
“என் அப்பா போட்டிருந்த எஃப்.டி-க்கு நான் நாமினி. நான் இதைத் தொடரலாமா? அப்படித் தொடர்ந்தால் அப்போது கிடைத்த வட்டி கிடைக்குமா?”

ஜெயந்தி, திருச்சி.
த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்
``எஃப்.டி என்பது ஒருமுறை முதலீடு. உங்கள் தந்தையின் இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை வழங்கி, இதுவரை செலுத்தப்பட்ட தொகையை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் அதைத் தொடர விரும்பினால், தற்போதைய வட்டி விகிதத்தை மட்டுமே பெற முடியும். உங்கள் தந்தைக்கு வழங்கப்பட்ட அதே வட்டி விகிதம் கிடைக்காது.”
தொகுப்பு : சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.