நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

ருமான வரித் துறையிடமிருந்து, நீங்கள் ஏற்கெனவே கட்டிய வரிப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கட்டாயம் உங்களுக்கு இருந்தால், இந்த ஜூலை மாதம் முடிவதற்குள் உங்கள் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்தாக வேண்டும். அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை என்றாலும், முடிந்தவரை இப்போதே வரிக் கணக்கினைத் தாக்கல் செய்துவிடுவது நல்லது. ஆறப் போடும் எந்த வேலையையும் பின்னர் கஷ்டப்பட்டே செய்ய வேண்டும் என்கிற அனுபவம் நம் எல்லோரும் இருக்கத்தானே செய்கிறது.

கடந்த நிதியாண்டில் நீங்கள் வருமான வரியை முறையாகச் செலுத்தியிருந்தால் மட்டும் போதாது; வரிக் கணக்கு தாக்கலும் சரியான முறையில் செய்ய  வேண்டும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது நாம் செய்யும் சின்னச் சின்ன  தவறுகளினால் அவை, நம் வரிக் கணக்கு தாக்கலுக்கு வருமான வரித் துறையினர் எளிதாக ஒப்புதல் அளிக்க சிக்கலை ஏற்படுத்துவதுடன், நாம் கட்டிய வரிப் பணம் நமக்குத் திரும்பக் கிடைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.

ஆக, எந்தத் தவறும் இல்லாமல் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது எப்படி என்பதை எல்லோரும் தெரிந்துகொள்வது இந்தச் சமயத்தில் அதிமுக்கியமான விஷயமாக இருக்கிறது.   வருமான வரிக் கணக்கைத் தவறில்லாமல் தாக்கல் செய்ய கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

1. வரிக் கணக்கு தாக்கல் அவசியம்

உங்களுடைய வருமானம், அடிப்படை வருமான வரி வரம்புக்கு மேல் இருந்தால் (பொதுப் பிரிவினருக்கு நிதியாண்டில் ரூ.2.5 லட்சம், 60 வயது முதல் - 80 வயதான மூத்தக் குடிமக்களுக்கு ரூ.3 லட்சம், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சம்) உங்களுக்கான வரி ஏற்கெனவே பிடித்தம் செய்து கட்டப்பட்டிருந்தாலும் நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்வது அவசியம்.

2. தவறுகள் திருத்தப்பட வேண்டும்

வரிதாரர் தங்களது படிவம் - 26AS-ஐ ஆய்வு செய்தல் அவசியம். பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் செலுத்தப்பட்ட வரி உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண்ணில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், படிவம் - 26AS-தான் வரிதாரரின் ஒரே ஆதாரம். இதில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அது முறையாக வரிப் பிடித்தம் செய்தவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!


3. சரியான படிவத்தைத் தேர்ந்தெடுங்கள்

உங்கள் வருமான வகையின் (Nature of Income) அடிப்படையில் சரியானப் படிவத்தைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். உதாரணமாக, நீங்கள் சம்பளதாரராகவோ, ஓய்வூதியம் பெறுபவராகவோ, வீட்டு வாடகை வருமானம் மற்றும் இதர வருமானங்களைப் பெறுபவராகவோ இருந்தால், நீங்கள் வரிப்படிவம்-1 (ITR-1) அதாவது, ‘சஹாஜ்’ படிவத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தாலோ, விவசாய வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருந்தாலோ, மூலதன ஆதாயம் (Capital Gain) இருந்தாலோ அல்லது வியாபார வருமானம் இருந்தாலோ இந்தப் படிவத்தைத் தேர்ந்தெடுக்க இயலாது.

சம்பளம் அல்லது ஓய்வூதியத்துடன் இரண்டுக்கும் மேற்பட்ட அசையா சொத்து வருமானம், மூலதன ஆதாயம், வெளிநாட்டு சொத்து மற்றும் வருமானம், விவசாய வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருந்தால் வரிப்படிவம்-2-ஐ (ITR-2) நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களுக்கு வியாபார வருமானம் (Business Income) இருக்கும்பட்சத்தில், நீங்கள் இந்தப் படிவத்தை உபயோகிக்க முடியாது.

தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்ப (HUF) வருமானம், தனி வணிக வருமானம் (Proprietary Income), இரண்டுக்கும் மேற்பட்ட அசையா சொத்து வருமானம், இதர வருமானங்கள் ஆகியவை இருந்தால், வரிப்படிவம் 3-ஐ (ITR-3) நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 

4. ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்..?

பணமதிப்பு நீக்க  காலத்தில் (கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை) ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பணத்தை நீங்கள் வங்கிக் கணக்கில் கட்டியிருந்தால் (Deposit) அதை வரி கணக்கு  தாக்கலின்போது குறிப்பிட வேண்டியது அவசியம். இவற்றைத் தவிர்க்கும்பட்சத்திலோ அல்லது தவறான தகவல்களைத் தரும்பட்சத்திலோ செலுத்திய தொகையின்மீது 50% - 200% வரை அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

5. நிரந்தர சேமிப்புத் திட்டம்

வங்கியின் ஐந்தாண்டு வரி சேமிப்பு நிரந்தர சேமிப்புத் திட்டத்தில் (Tax Savings Fixed Deposit) மூலம் பெறப்படும் வட்டி, வரிக்கு உட்பட்டதாகும். இதை வரித் தாக்கலின்போது வருமானமாக அறிவிக்க வேண்டும்.

6. ஆதார் எண் கட்டாயம்

ஆதார் எண்ணை வரிக் கணக்கு தாக்கலின் போது குறிப்பிடுவது கட்டாயமாகும். எனவே, அதைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

7. ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் வேலை பார்த்திருந்தால்..?

ஒரே ஆண்டில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலோ அல்லது இடையில் மாறியிருந்தாலோ, உங்கள் பழைய நிறுவனத்திலிருந்து பெற்ற வருமானத்தையும் உங்கள் புதிய நிறுவனத்துக்குத் தவறாமல் அறிவிக்க வேண்டும்.

அதன்படி, உங்களுடைய ஆண்டு வருமானம் கணக்கிடப்பட்டு, அதற்குரிய வரிப் பிடித்தம் செய்யப்படும். நீங்கள் தெரிவிக்கத் தவறும் பட்சத்தில், நீங்கள் வரி கணக்கு தாக்கலின்போது வரி செலுத்துவது மட்டுமல்லாமல், அதற்கான வட்டியையும் அபராதமாக செலுத்த நேரலாம்.

8. வெளிநாட்டுச் சொத்துகளும் வருமானமும்

அனைத்து வெளிநாட்டுச் சொத்துகளையும் வருமானத்தையும் வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது அவசியம் தெரிவிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் தவறு  செய்யும்பட்சத்தில் அபராத நடவடிக்கைக்கு  நீங்கள் ஆளாக வேண்டியிருக்கலாம்.

9. ரூ.50 லட்சத்துக்கு மேல் சொத்து...

உங்களது வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால், நீங்கள் அனைத்து சொத்துகளையும், வரிக் கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.  கடந்த ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால், கூடுதல் வரியாக (Surcharge) 10% இருந்தது. இந்த வருடம் இதன் வரம்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடி வரையில் இருந்தால், கூடுதல் வரி 10%, அதற்கு மேல் எனில், 15% கட்ட வேண்டும்.

இந்த வரம்புக்குட்பட்ட வரிதாரர்கள் தங்களது அசையா சொத்துகளின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். தற்போது வருமான வரித் துறை, வரிக் கணக்கு தாக்கல் படிவத்தில் நிலம் மற்றும் கட்டட விவரங்களை அறிவிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

10. ஜூலை 31-க்குள் வரித் தாக்கல்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். அதாவது, சம்பளதாரர்கள் ஜூலை 31-ம் தேதிக்கு முன்பு வரிக் கணக்கு தாக்கல் செய்துவிட வேண்டும்.  வருமானவரி சட்டத்தின் புதிய பிரிவு 234F-ன்படி காலதாமதமாக செய்யப்படும் வரிக் கணக்கு தாக்கலுக்கு, நிலையான அபராதம் விதிக்கப்படும்.

இது, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year 2018-2019) வருடத்துக்கு பொருந்தும். தற்போது மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 

11. ஆன்லைனில் மட்டுமே

மிக மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்ட,  வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் கீழ் உள்ளவர்கள் (ரீஃபண்டு இருக்கக்கூடாது) தவிர, அனைவரும் வருமான வரிக் கணக்கு  தாக்கலை மின்னணு முறையில் (இஃபைலிங்) மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

12.
வங்கிக் கணக்கு விவரம்

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளின் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு) விவரங்களை அதாவது, வங்கியின் பெயர், கணக்கு எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு உள்பட அனைத்து விவரங்களையும் வருமான வரிக் கணக்கு படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இவற்றை, நீங்கள் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்தாலும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது நான் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு விஷயத்திலும் சிறு தவறும் நிகழாமல் செய்யுங்கள். உங்களுக்கு எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை.

ஆவணங்கள் செக்லிஸ்ட்

வரிக் கணக்கு படிவத்துடன் ஆவணங்கள் எதையும் இணைத்துக் கொடுக்கத் தேவையில்லை. அதே நேரத்தில், கீழே தரப்பட்டுள்ள ஆவணங்கள் நீங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். மேலும், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு ஏதாவது சந்தேகம் வரும் பட்சத்தில் இந்த ஆவணங்களைக் காட்ட வேண்டியிருக்கும் என்பதால், குறைந்தது 5 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

வருமான வரிக் கணக்கு.. தவறில்லாமல் தாக்கல் செய்ய 12 முக்கியக் கட்டளைகள்!

தனிநபர் சார்ந்த ஆவணங்கள்

1. பான் கார்டு, 2. ஆதார் கார்டு, 3. சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் (சொத்து மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்டால் அல்லது வெளிநாட்டு சொத்து இருந்தால்)

வருமானம் சார்ந்த ஆவணங்கள்

1. மூலத்தில் வரி பிடிக்கப்பட்ட (TDS) விவரங்களைக் கொண்ட படிவம் 16/16A/16B

2. வரி விலக்குப் பெற்ற வருமான விவரங்கள் (நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் பெற்ற டிவிடெண்ட் வருமானம்)

3. நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் மூலமான குறுகிய கால / நீண்ட கால ஆதாயம்

4. பேலன்ஸ்ஷீட் (தொழில் நடத்துபவர்கள் எனில்)

வங்கி சார்ந்த ஆவணங்கள்

1. நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் (பெயர்,வங்கிக் கணக்கின் தன்மை, ஐ.எஃப்.எஸ்.சி கோட், கணக்கு எண்)

2. நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் கிடைத்த வட்டி வருமான விவரங்கள்

3. பணமதிப்பு நீக்க காலத்தில் வங்கி கணக்கில் ரொக்கப் பணம் செலுத்தப்பட்ட விவரம் (ரூ.2 லட்சத்துக்கு மேல் செலுத்தியிருந்தால்)

வீடு, மனை சொத்து சார்ந்த ஆவணங்கள்


1. வாங்குபவர் ஒப்பந்தம் (சொத்து வாங்கினால்), மூலதன ஆதாயம் (சொத்தை விற்றால்)

2. குத்தகை ஒப்பந்தம் (வாடகை வருமானம்)

முதலீடு சார்ந்த ஆவணங்கள்

1. வரிச் சேமிப்பு முதலீட்டுக்கான ஆவணங்கள் (பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட்,இ.எல்.எஸ்.எஸ், தேசிய சேமிப்புப் பத்திரம், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்)

2. நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்)

செலவுகள் சார்ந்த ஆவணங்கள்

1. லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டிய ரசீது.

2. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டிய ரசீது

3. வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டிக் கட்டியதற்கான ஆதாரம்

வருமான வரிச் சார்ந்த ஆவணங்கள்

1. டி.டி.எஸ் பிடிக்கப்பட்ட விவரம்

2. வருமான வரிப் படிவம் (வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சம் தாண்டினால், ஆன்லைன் படிவம்)

3. தேசிய சேமிப்புப் பத்திரம், கிஷான் விகாஸ் பத்திர முதலீடு மூலமான வருமான விவரம்

4. டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டதை உறுதி செய்யும் 26AS படிவம்

இவை தவிர, நன்கொடை, கல்விக் கடன் வட்டி போன்றவற்றுக்கான ஆதாரங்களையும் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்முன் தயாராக வைத்துக்கொள்வது அவசியம்.

-சி.சரவணன்,

படம்: மீ.நிவேதன்