நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்!

செல்லமுத்து குப்புசாமி

மீன் மார்க்கெட்டில் பேரம் பேசலாம். நாலு பேரிடம் சுற்றி விசாரித்து, அடித்துப் பேசி வாங்கலாம். ஆனால், மளிகைக் கடையில் சர்க்கரை வாங்குவது அப்படியல்ல. என்ன விலையோ, அதைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். பல நேரங்களில் நாம் விலை கேட்பதே இல்லை. அண்ணாச்சி பில் போடுவார், நாம் பணத்தைக் கொடுத்துவிட்டு வருவோம். அண்ணாச்சி கடையைப் போலத்தான் சூப்பர் மார்க்கெட்டும். கிரெடிட் கார்டைத் தேய்ப்பதோடு சரி.

எனினும் சில நேரங்களில் நாம் பணம் செலுத்தும்முன் பில் மீது மேலோட்டமான பார்வையொன்று செலுத்துவதுண்டு. ஒருவேளை ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை அதிகமாக இருந்தால், “என்னது, சர்க்கரை கிலோ நூறு ரூபாயா? கட் பண்ணிருங்க” எனக் கூறுவதுண்டு. மார்க்கெட் விலைக்குத்தான் வாங்குவோம். ஆனாலும், மார்க்கெட் விலை நாம் நினைப்பதை (அல்லது நாம் ஏற்றுக்கொள்வதை)விட அதிகமாக இருந்தால் நமக்கு வேண்டாம் எனத் தீர்மானிக்கிறோம் இல்லையா? பில்லுக்குப் பணம் கட்டும்முன் தீர்மானிக்கும் இதே நடைமுறை, ஷேர் மார்க்கெட்டில் ஆர்டர் கன்ஃபர்ம் ஆகும்முன் நடைமுறையில் உள்ளது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்!

இதற்கு ‘Protection Percentage’ என்று பெயர். மார்க்கெட் விலையில் ஆர்டர் போடும்போதே இதை நாம் கூடவே உள்ளீடு செய்துவிடலாம்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் bid price & offer price தலா ரூ.99 மற்றும் ரூ.100 என்று வைத்துக்கொள்வோம். அதன் ஷேர்களை வாங்க உங்களுக்கு விருப்பம். மார்க்கெட் பிரைசில் ஒரு ஆர்டர் போடுகிறீர்கள். அப்போது ‘Protection Percentage’-யை 10% எனக் குறிப்பிட்டால் என்னவாகும் எனக் கவனிக்கலாம்.

திடீரென ஏதாவது பாசிட்டிவ் நியூஸ் வந்து கம்பெனியின் பங்குகளுக்கு டிமாண்ட் எகிறுகிறது என வைத்துக்கொண்டால், நீங்கள் ஆர்டர் போடும்போது இருந்த offer price ரூ.100-ல் இருந்து 10% வரைக்கும் உங்கள் ஆர்டர் நடந்தேறும். அதாவது, ரூ.110-க்குள் யார் விற்றாலும் உங்கள் வியாபாரம் நடந்தேறும். ரூ.110.01 அல்லது அதற்கு மேலேதான் விற்க ஆளிருக்கிறார்கள் என்றால் நமது ஆர்டர் நிறைவேறாது. “என்னது, சர்க்கரை கிலோ நூறு ரூபாயா...? கட் பண்ணிருங்க” எனும் அதே கதைதான்.

பங்கினை வாங்கும்போது என்ன தத்துவமோ, அதே தத்துவம்தான் விற்கும்போதும். நாம் ஆர்டர் போட்டபோது bid price ரூ.99-ஆக இருந்தது. ‘Protection Percentage’ 10 சதவிகிதமாகக் குறிப்பிடுகிறோம். ரூ.99-ல் 10% ரூ.9.9 குறைவாக அதாவது, ரூ.89.10 வரைக்கும் வாங்க ஆளிருந்தால் அதுவாகவே விற்றுவிடும். நிறுவனத்துக்கு ஏதாவது பிரச்னை. அதனால் bid price ரூ.70-க்கு (ஏன் ரூ.89க்குக் கீழ் என்ன விலைக்குப் போனாலும்) போகிறதென்றாலும் நமது ஆர்டர் நிறைவேறாது.

இதுதான் ‘Protection Percentage’-ன் சூட்சுமம். கிட்டத்தட்ட இதே தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இன்னொரு சங்கதி உள்ளது. அதற்குப் பெயர் ‘stop loss’. அது குறித்து விரிவாகப் பேசும் முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது day trading எனப்படும் தின வர்த்தகம்.

பொதுவாக, நாம் ஷேர்களைப் பணம் கொடுத்து வாங்குவோம். வியாபாரம் நடந்து முடிந்தபிறகு அவை நமது டீமேட் கணக்கில் வரவாக வந்து சேரும். அந்த ஷேரை நாம் எத்தனை நாள், எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். நாம் விரும்பும்போது விற்கலாம். இதனை ‘டெலிவரி ஆர்டர்’ என்பார்கள். நூறு ரூபாய்க்கு ஷேர் வாங்குவதால் 100 ரூபாய் + புரோக்கரின் கமிஷன் இரண்டையும் சேர்த்துக் கட்டிய பிறகுதான் பங்குகள் நம் கணக்கில் வந்து சேரும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்!சில நாள்களில் காலையில் வாங்கி மதியமே விற்கும் சூழல் நமக்கு வரலாம். ஒரு கம்பெனி இன்று முக்கியமான திட்டம் ஒன்றை அறிவிக்கப் போகிறது. அதனால் விலை கூடும் என நீங்கள் உறுதியாக நம்பினால் இதனைச் செய்யலாம். (ஆகா... இதுதான் ஷேர் மார்க்கெட் சூதாட்டமா என நினைக்கிறீர்களா? களவும் கற்று மறக்க வேண்டுமல்லவா?) சில பேர் இதனையே தொழிலாகத் தினமும் செய்வார்கள். நாம் என்றாவது ஒரு அசாதாரணமான சூழலில், தினத்தில் செய்ய நேரிடலாம். அப்போது இதுபற்றிய புரிதல் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதால் சொல்கிறேன்.

அப்போது 100 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்குவதற்கு 100 ரூபாயும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.100 மதிப்புள்ள ஷேர்களை ரூ.30 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். விலை ரூ.105 வரும்போது அன்றைய தினத்திலேயே விற்றுவிடலாம். நிகரம் லாபம் ரூ.5. வெறும் 30 ரூபாயில் 5 ரூபாய் லாபம் பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் ரூ.130-க்கு விற்க முடிந்தால் 30 ரூபாயில் 30 ரூபாய் லாபம்.

இதுதான் தின வர்த்தகம். இதில் என்ன சிக்கலென்றால், தின வர்த்தகத்தில் நாம் வாங்கும் பங்கு எப்போதும் விலை உயர வேண்டிய அவசியமில்லை. ரூ.100-க்கு நீங்கள் வாங்கிய நிறுவனத்தின் பங்கு விலை ரூ.95-ஆகக் குறையலாம். தின வர்த்தகத்தில் நீங்கள் வாங்கிய பங்குகளை அன்றைக்குள்ளாகவே விற்றாக வேண்டும் என்பதால், ரூ.5-யை நீங்கள் நஷ்டமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். 30  ரூபாயோடு சந்தைக்குப் போன மச்சான், 25 ரூபாயோடு திரும்பிய கதைதான். 30 ரூபாய் மூணு ரூபாயாக மாறும் நிலையும் வரலாம் என்பது கூடுதல் தகவல்.

இந்தப் புரிதலோடு ‘stop loss’-ஐ அணுகுவது முக்கியம். 100 ரூபாய்க்கு ஒரு ஷேரை வாங்குகிறோம், அதும் 110 அல்லது 120-க்குப் போகும் என நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால், அது 80-க்கோ, 70-க்கோ சரியலாம். பலத்த இழப்பு அல்லவா? அப்படி கீழிறங்கிச் செல்லும் விலையில் நமது இழப்பை ஒரு அளவோடு நிறுத்திக்கொள்ளும் வழிமுறைதான் ‘ஸ்டாப் லாஸ்’ (stop loss).

    வாங்கும் விலை    ரூ.100
    விற்க நினைக்கும் விலை    ரூ.110
    ஸ்டாப் லாஸ்    ரூ.95


இப்படி நீங்கள் ஆர்டர் போட்டால் ரூ.100-க்கு நீங்கள் வாங்கிய ஷேர் ரூ.95-க்கு இறங்கியவுடன் கம்ப்யூட்டரே உங்கள் ஷேரை விற்று உங்கள் நஷ்டம் ஐந்து ரூபாயுடன் நிறுத்திவிடும். இன்னும் கீழே இறங்கிப் போனால், உங்கள் நஷ்டம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அதனால் இந்த வழிவகை.

‘அப்பாடா தப்பித்தோம்’ எனப் பெருமூச்சு விடலாம்.

எனினும் இதிலும் ஒரு சிக்கல். 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கியது 95 ரூபாய் வரைக்கும் கீழே வந்து உங்கள் ஸ்டாப் லாஸில் விற்றுத் தொலைத்துவிட்டு, மறுபடியும் மேலேறி 110 ரூபாய்க்குக்கூட போகலாம். அப்போது நீங்கள் சாதித்தது stop loss அல்ல.

(ஜெயிப்போம்)