நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குச் சந்தையில் ஜெயிக்க... - ஆண்டறிக்கையைப் படிங்க!

பங்குச் சந்தையில் ஜெயிக்க... - ஆண்டறிக்கையைப் படிங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தையில் ஜெயிக்க... - ஆண்டறிக்கையைப் படிங்க!

ஜெ.சரவணன்

ங்குகளின் ஏற்ற, இறக்கத்தில்தான் பங்குச் சந்தையில் சம்பாதிப்பதற்கான சூட்சுமமே அடங்கி இருக்கிறது. பங்குகளின் எதிர்காலத்தை அறிய, ஒரு பங்கு  நிறுவனத்தின் செயல்பாடு களையும் நிதிநிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், பங்குகளில் முதலீடு செய்து அனுபவம் இல்லாதவர்கள், பகுதி நேரம் மட்டுமே பங்குச் சந்தையில் செயல்படுபவர் களால் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியுமா?

“முடியும். அப்படிப்பவர்களுக்குத்தான் பங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் அதைப் படிப்பதே இல்லை. இதனால் ஒரு நிறுவனம் வளர்கிறதா இல்லை, தேய்கிறதா என்பதைக் கண்டறிய முடியாமலே போய்விடு கிறது’’ என்கிறார் பங்குச் சந்தை ஆய்வாளர் யோகேஷ் சுந்தரம்.

ஒரு பங்கு நிறுவனத்தின் ஆண்டறிக்கையை ஏன் படிக்க வேண்டும், அதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

பங்குச் சந்தையில் ஜெயிக்க... - ஆண்டறிக்கையைப் படிங்க!

“பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதாக இருந்தால், அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை ஒரு முதலீட்டாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் ஈடுபட்டிருக்கிறது, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்ன, அதன் நிதிநிலை எப்படியிருக்கிறது எனப் பல விஷயங்களையும் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். மேலும், ஒரு பங்கின் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள அந்த நிறுவனத்தின் முழுமை யான நிதிநிலை, நிர்வாக முடிவுகள் மற்றும் மாற்றங்கள் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவையெல்லாம் பங்கு களின் நகர்வுகளைப் பாதிக்கும் காரணிகளோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்குத்தான் நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையைப் படிக்க வேண்டும். சிலர் காலாண்டு முடிவுகள் வெளியாகிறதே, அது போதாதா என்று நினைத்தால் நிச்சயம் போதாது. ஏனெனில் காலாண்டு முடிவுகளில் வெறும் லாப நஷ்டக் கணக்குகளின் சுருக்கமான வடிவமே வெளியிடப்படும். அரையாண்டு அறிக்கைகளில் இவற்றோடு சேர்த்து பேலன்ஸ் ஷீட் வரும் அவ்வளவுதான். நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையில்தான் லாப, நஷ்டக் கணக்குகள், பேலன்ஸ் ஷீட், கேஷ் ஃப்ளோ, கார்ப்பரேட் கவர்னன்ஸ், அக்கவுன்டிங் பாலிசி மற்றும் நிறுவனங்களின் முக்கியமான முடிவுகள் உள்ளிட்டவை வெளியிடப்படும்.

பங்குச் சந்தையில் ஜெயிக்க... - ஆண்டறிக்கையைப் படிங்க!


உதாரணத்துக்கு, யெஸ் பேங்கின் வருடாந்திர அறிக்கையில் வெளியிட்டிருந்த வாராக் கடன் விவரங்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராக் கடன் விவரங்களோடு பொருந்தவே இல்லை. இது, தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அளவைவிட ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூடுதலாகக் கடன் இருந்தது தெரிய வந்தது. அந்தத் தகவல் தெரிந்ததும் அந்தப் பங்கின் விலையில் இறக்கம் ஏற்பட்டது.

அதேபோல, இன்ஃபோசிஸின் வருடாந்திர அறிக்கையில் ஒரு  பெரிய விவகாரம் வெளியானது. அதாவது, அதன் முன்னாள் முதன்மை நிதித் துறை அதிகாரி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அமைதியாக இருக்க, அவருக்கு மிகப் பெரிய தொகை கம்பெனியால் கொடுக்கப் பட்டிருக்கிறது. இது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் ஒரு சிறு ஃபுட்நோட்டாக மட்டுமே வெளியிடப்பட்டது. இவை போன்ற தகவல்கள் வருடாந்திர அறிக்கையில் மட்டுமே நமக்குக் கிடைக்கவரும்.

இவையில்லாமல் நிறுவனத்துக்கு உள்ள கடன், உடனடி எதிர்காலக் கடன் (Contingent liability) என்கிற எதிர்காலத்தில் வரும் கடன் உள்ளிட்ட விவரங்களும் வருடாந்திர அறிக்கையிலேயே அறிய முடியும். எனவே, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்பவர்கள் பங்குகளை வாங்குவதற்குமுன் நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையைப் படிப்பது அவசியம். 

அறிக்கை முழுவதையும் படிக்க நேரமில்லாத வர்கள், குறைந்தபட்சம் லாப, நஷ்டக் கணக்குகள், ஃபைனான்ஷியல் ஸ்டேட்மென்ட், குறிப்புகள், திட்ட விவரங்கள், இயக்குநர்களின் அறிக்கை போன்றவற்றையாவது படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறுவனங்களின் இணையதளத்தில், எல்லோரும் படிக்கும் வகையில் பிடிஎஃப்-ஆக வருடாந்திர அறிக்கை கிடைக்கும்” என்று கூறி முடித்தார்.

இதுவரை  இல்லாவிட்டாலும், இனியாவது நீங்கள் வைத்திருக்கும் பங்குகளின் ஆண்டறிக்கையைப் படித்து, அதன்படி உங்கள் எதிர்கால முதலீடு குறித்த முடிவினை எடுங்கள்.   பங்குச் சந்தை சூப்பர் முதலீட்டாளர் வாரன் பஃபெட் போல, நீங்கள் வெற்றிகரமான முதலீட்டாளராகத் திகழலாம்!

படம் : ப.பிரியங்கா