நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் கலை!

ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் கலை!

நாணயம் புக் செல்ஃப்

ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் கலை!

புத்தகத்தின் பெயர்: மேக் த ரைட் சாய்ஸ் (Make the Right Choice)

ஆசிரியர்: ஜோயல் ஜெஃப் (Joel Zeff)

பதிப்பாளர்: ஜான் வில்லி அண்ட் சன்ஸ் (John Wiley & Sons)

லுவலகத்தில் ஆக்கபூர்வமாக, புதுமையாகச் செயல்படுவது எப்படி..? நிர்வாகத்தின் பெரிய பதவியில் இருப்பவர் களுக்கும் குழுத் தலைவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான சரியான பதில் தெரிவதே இல்லை. இந்தக் கேள்விக்கான விடையைச் சொல்லும் புத்தகம்தான் ‘மேக் த ரைட் சாய்ஸ்.’

ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ஆசிரியர்,  இறுதியில் ஒரு செயல்திறன் மேம்பாட்டு ஆலோசகராக உருவெடுத்தார். இந்த மேம்பாட்டுத்திறனுக்கான பயிற்சிகளின் போது பங்கேற்பவர்களைப் பல  குழுக்களாகப் பிரித்து, பல விளையாட்டுகளை விளையாடச் சொல்லி அதை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரியவந்தது. சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டால் நம்மில் பலரும் அபரிமிதமான படைப்புத் திறனுடனும்,ஆற்றலுடனும், வாஞ்சையுடனும் செயல்படக்கூடியவர்களே. 

இப்படிப் பயிற்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் செயல்திறன்மிக்கவர்களாக  இருந்தபோதிலும், நிறுவனங்கள் பலவும் ‘ஆளுங்க சரியில்லையப்பா’ என்று புலம்பவே செய்கின்றன. உள்ளபடி பார்த்தால், ஆட்கள் சரியில்லை என்பதற்குப் பதில், அவர்களுக்குச் சரியான செயல்பாட்டுக்கு உண்டான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்பதே சரி. சரியான செயல்பாட்டுக்கு உண்டான வாய்ப்புகள் அளிக்கப்படும்போது அனைவருமே பெர்ஃபாமென்ஸில் தூள் கிளப்புவார்கள் என்கிறார் ஆசிரியர்.

நாம் எல்லோருமே கற்பனாசக்தி கொண்டவர்கள்தான். எல்லோருக்குமே ஜாலியாக இருப்பது பிடிக்கும்தான். அதிக செயல்திறனுடன் செயல்பட நமக்குத் தேவை சரியான வாய்ப்புகள், சரியான தலைவன் மற்றும் சரியான ஆக்கபூர்வமான ஊக்கம் என்ற மூன்று மட்டுமே.

பொதுவாக, பணியாளர்களை இப்படிப் பிரிக்கலாம். மாற்றத்தைச் சுலபத்தில் ஏற்றுக் கொள்பவர்கள், பொறுமையாக விஷயங்களைப் புரிந்துகொள்பவர்கள், ஆதரவும் உதவியும் செய்பவர்கள், கற்பனாசக்திமிக்கவர்கள்,  தலைவர்கள், அடுத்தவர் வெற்றி பெற ஓடியோடி  உதவுபவர்கள், சலிப்பில்லாமல் குழுவாக இணைந்து வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் என்ற பெரும் பிரிவுகளுக்குள் நாம் அனைவரும் அடங்கிவிடுவோம். இந்த ஒவ்வொரு குணத்தையுமே பட்டை தீட்டி, வெற்றிக்கான பாதையில் நம்மால் பயணிக்க முடியும். அது எப்படி என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகம்.

ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் கலை!


நாமெல்லாம் ரொம்ப பிசியான ஆட்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்கிறோம். அப்படி செய்வதால், பல சமயம் வெற்றி பெறுவதற்குத் தேவையான சின்ன சின்ன விஷயங்கள் பலவற்றைச் செய்ய மறந்துவிடுகிறோம். அந்தச் சின்ன சின்ன விஷயங்கள் என்னென்ன? அவற்றைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகவும், சந்தோஷமாகவும்  இருப்பது எப்படி என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார் ஆசிரியர்.

பணியிடத்தில் பாசிட்டிவ்வான ஒரு சூழலை உருவாக்குவதன் அவசியத்தைத் தெளிவாக, ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார் ஆசிரியர். மூன்று வயதுக்குக் கீழான சிறு குழந்தைகள் தனியாக வாஷ்ரூமை உபயோகித்துத் திரும்பியவுடன், ‘சமத்துக் குட்டி. நீயே பத்திரமாய் போய் வந்துவிட்டாயே’ என்று வாழ்த்தும்போது எத்தனை சந்தோஷம் அடைகின்றன. இதை நாம் அனைவருமே நம் குழந்தைகளுக்குச் செய்திருப்போம்.

ஏன்? குழந்தைகளுக்கு என்னால் இதைச் செய்ய முடியும் என்ற மன உறுதி வரவேண்டும் என்பதற்காகத்தானே. சிறு குழந்தை என்ன, வளர்ந்த மனிதன் என்ன... எல்லோருக்குமே இது போன்ற பாராட்டும் ஊக்குவித்தலும் தேவை.

என் வாடிக்கையாளர்களின் நிறுவனங்கள் பலவற்றிலும் பணியிடச் சூழல் குறித்த ஆய்வுகளுக்கான சர்வேக்கள் நடத்தப்பட்டபோது தெரியவந்த விஷயம், கிட்டத்தட்ட 50% நபர்களுக்கு உற்சாகமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்பதே. 

இப்போது சிறு குழந்தையின் உதாரணத்தை மீண்டும் படியுங்கள். உங்களுக்கு உற்சாகப் படுத்துதல் மற்றும் அங்கீகரித்தல் என்ற இரண்டின் அர்த்தம் புரியும். அதை விட்டுவிட்டு, எதைச் செய்தாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமலே இருந்தால்,  எங்கேயிருந்து வரும் மாற்றம், முன்னேற்றம் என்று கிண்டல் அடிக்கிறார் ஆசிரியர்.

நம் அனைவருக்கும் வேலையில் இரண்டு விஷயங்கள் கட்டாயம் தேவை. வாய்ப்புகள் மற்றும் அதை செயல்படுத்தத் தேவையான ஊக்கமளிக்கும் ஆதரவு என்பதே அந்த இரண்டு விஷயங்கள். ஒரு நிர்வாகியாக, ஒரு முதலாளியாகப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். நன்றி சொல்லிப் பழகுங்கள். உங்கள் பங்களிப்பு நிறுவனத்துக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா என்று சொல்லி ஊக்கப்படுத்துங்கள். அனைவருக்கும் அவர்கள் செய்யும் செயலுக்கு ஆதரவாக இருங்கள். ஏனென்றால், ஆதரவு நம்பிக்கையை உருவாக்கும். நம்பிக்கை வெற்றியையும், செயல்திறனையும் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையில், முக்கியச் செய்தியை ஆறாவது பக்கத்தில் பதுக்கி வைக்கக்கூடாது என்பார்கள். அதேபோல்தான், ஒவ்வொரு நபரும் செய்யும் சாதனைகளையும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அங்கீகரியுங்கள் என்கிறார் ஆசிரியர்.

நிறைய நிறுவனங்களுக்குப் பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதன் அவசியம் புரிவதில்லை. அப்படி புரிந்துகொண்ட ஒரு சில நிறுவனங்களும், எது பணியாளர்களை நிஜமாகவே மகிழ்ச்சியடைய வைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதில்லை என்கிறார் ஆசிரியர். ஆனால், பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள செலவுகள் மட்டும்  எக்கச்சக்கமாகச் செய்யப்படுகின்றன. வருடாந்திர மீட்டிங், புத்தாக்கப் பயிற்சி, 5 ஸ்டார் ஓட்டல் விருந்து,  இன்பச் சுற்றுலா என்றால் ஊழியர்கள்  மகிழ்ச்சி அடைவார்கள்தான். ஆனால், அந்த மகிழ்ச்சி சில  நாள்கள் மட்டுமே இருக்கும். பணிக்குத் திரும்பி மீண்டும் மன அழுத்தமும் ஏமாற்றத்தினால் வரும் எண்ணக்குலைவும் உடனடியாகத் தலைதூக்கிவிடும். நீண்ட கால அடிப்படையில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கவேண்டும்  எனில்,  என்ன செய்ய வேண்டும்?

செலவில்லாத இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவது; இரண்டாவது, செயல் படுவதற்கான ஊக்கம் தரும் ஆதரவைத் தருவது. நிர்வாகிகள் பல வகை. அவர்கள் அனைவரும் ஒரு நாள் தங்களுடைய செயல்படும் விதத்தை மாற்றிக்கொண்டேயாக வேண்டும். மாற்றம் என்பதே பயமுறுத்தும் விஷயம். ஆனால்,  மாற்றம் என்பது வந்தே தீரும். அதை எதிர்பார்த்து வரவேற்கவும், கொஞ்சம் நெளிவுசுளிவாக அதைக் கையாளவும் அத்தனை நிர்வாகிகளும் பழக வேண்டும்.

வேலை என்று வந்துவிட்டாலே, அங்கு கேளிக்கைக்கு  இடமில்லை என்கிறோம். ஆனால், முக்கியமான விஷயம், கேளிக்கைகள்தான் கற்பனைசக்தி, தலைமைப் பண்பு, ஆர்வம் மற்றும் வெற்றி போன்றவற்றைச் சென்றடைய மிகவும் தேவையான எரிபொருளாகத் திகழ்கிறது. சீரியஸாக வேலை பார்க்கும் இடத்தில், கிரியேட்டிவிட்டி செத்துப் போகிறது. காமெடியே உங்களை சீரியஸ் மூடிலிருந்து ஒரு பிரேக்கை எடுக்க வைக்கிறது. அதனாலே உங்கள் மூளையில் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ற பொறி தட்டுகிறது என்கிறார் ஆசிரியர்.

இறுதியாக மீட்டிங்குகள் குறித்துச் சொல்லும் ஆசிரியர், காமெடி, கேளிக்கை, ஜாலி என்பதைத் தங்களுக்குள் கொண்டிருக்கும் நிறுவனங்களில் நடக்கும் மீட்டிங்குகளும் ஜாலியாகப்போகும். அந்த மீட்டிங்குகளில் நிஜமாகவே புதிய கருத்துக்களும் செயல்திட்டங்களும் உருவாகும்.  டென்ஷனும் எதிர்மறை அலையும், ஏடாகூடமான தொந்தரவுகளைத் தரும் சூழலும்கொண்ட நிறுவனங்களில் நடக்கும் மீட்டிங்குகளில் பொறி பறக்கும். அந்தப் பொறி நிறுவனத்தையே பொசுக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கொஞ்சம் ஜாலியாக இருக்கும்படி உங்கள் நிறுவனங்களை மாற்றியமைத்து அதன் பலன்களை முழுமையாய் அனுபவியுங்கள் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

தொழில்முனைவோர் மற்றும் நிர்வாகிகள் ஒருமுறை படிக்கவேண்டிய புத்தகம் இது!

நாணயம் டீம்