
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ செந்தில்.
‘‘நான் தற்போது வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைக்கிறேன். இதில் வருமான வரி தொடர்பான பிரச்னைகள் ஏதும் வருமா?
‘‘அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள், அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி, அந்தத் தொகையை முதலீடு செய்வது வரைக்கும் எவ்விதமான வருமான வரியும் கட்ட வேண்டாம். அவ்வாறு செய்த முதலீடு ஈட்டி கொடுக்கும் வருமானத்துக்கு, இந்திய சட்டதிட்டங்களின்படி வருமான வரி உரித்தாகும்பட்சத்தில், வரி செலுத்த வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் அங்கிருந்து பணம் அனுப்பி, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அந்த முதலீட்டை ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி ஏதும் செலுத்த வேண்டாம். அந்த வகையான திட்டங்களில் இருந்து கிடைக்கும் டிவிடெண்டுக்கும் ஏதும் வரி கிடையாது.
அதேசமயத்தில், நீங்கள் அவ்வாறு அனுப்பிய பணத்தைக் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது, வரும் வருமானத்துக்கு வரி உரித்தாகும். அதற்குரிய வரியை மூலத்திலேயே பிடித்து விடுவார்கள். நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் போது, வருமான வரி செலுத்த வேண்டியிருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் வருமான வரியைத் தாக்கல் செய்வது சிறந்தது.’’

@ எஸ்.அமல்ராஜ்.
‘‘ஜூன் 30-ம் தேதியுடன் நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வுக்கால பலனாக ரூ.60 லட்சம் கிடைக்கும். மாதம் ரூ.50,000 பென்ஷன் வரும். என் இரு குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியும் வேலை பார்க்கிறார். பென்ஷனாகக் கிடைக்கும் தொகையே என் செலவுகளுக்குப் போதுமானது. நான் இப்போது டி.எஸ்.பி பிளாக்ராக் டாக்ஸ் சேவர், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஆகிய ஃபண்டுகளில் மாதமொன்று ரூ.5,000 வரிச் சலுகைக்காக முதலீடு செய்து வருகிறேன். என்னிடமுள்ள ரூ.60 லட்சத்தை என் குழந்தைகளுக்காக பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? ரிலையன்ஸ் கார்ப்பரேட் பாண்ட் - 25%, பிர்லா சன்லைப் டைனமிக் பாண்ட் - 25%, கோடக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் - 50%. இந்த ஃபண்ட் திட்டங்களைத் தொடரலாமா?’’
‘‘நீங்கள் கடன் சார்ந்த திட்டங்களில் 50 சதவிகிதமும், பங்கு சார்ந்த திட்டங்களில் 50 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். உங்களின் நோக்கம் - உங்களுக்குப் பிறகு, உங்கள் குழந்தைகளுக்கு இந்த முதலீடு செல்ல வேண்டும் என்பதுதான். இது நிகழ்வதற்கு பல வருடங்கள் ஆகலாம்.
இச்சூழ்நிலையில், நீங்கள் தாராளமாக முழு பணத்தையும் பங்கு சார்ந்த திட்டங்களிலேயே முதலீடு செய்யலாம். அவ்வாறு நீங்கள் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பினால், கடன் சார்ந்த திட்டங் களுக்குப் பதிலாக ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டங்களை நாடலாம்.
ஏனென்றால் அவற்றின் வரி விதிப்பு பங்கு சார்ந்த திட்டங்களுக்கு இணையாகும். முழு பணத்தையும் முதலீடு செய்யும்போது எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்வது நல்லது. இரு வகையான ஆப்ஷன்களையும் மேற்காணும் அட்டவணையில் கொடுத்துள்ளேன். நீங்கள் பங்கு சார்ந்த திட்டங்களுக்கும் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களுக்கும் 50% - 50% ஒதுக்கீடு செய்ய விரும்பினால், பிர்லா சன்லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்டிற்குப் பதிலாக ஐசிஐசிஐ புரூ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளவும்.’’
