மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 - பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 -  பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 - பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

பெண்கள், பள்ளியிலும்  கல்லூரியிலும் படிக்கும்போது அவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். தேர்ச்சி பெற்ற அனைவரும் வேலைக்குச் செல்கிறார்களா எனப் பார்த்தால், குறைவுதான். சிலருக்கு வேலைக்குப் போகப் பிடிக்காது; சிலருக்குப் பிடித்தாலும், அனுப்பமாட்டார்கள். சிலருக்குக் கல்யாணம் ஆகிடும். இப்படிப் பல காரணங்களால் பள்ளி, கல்லூரியில் நன்றாகப் படித்த பெண்கள் வேலைக்குச் செல்லாத நிலை ஏற்படும். அவர்களின் படிப்பும் பயன்படாமல் போய்விடும்.

நம் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுவிட்டாலே வெற்றி என்று நினைக்கிறார்கள். பெண்களும் அதையே ஆமோதிக்கிறார்கள். திருமணம், குழந்தை பெறுவதெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால், அது ஒருபோதும் வெற்றியாகாது. ஆண்களைப் பொறுத்தவரை,  திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சி; பெண்களைப் பொறுத்தவரை அது  வெற்றி. ஆண்களைப் பொறுத்தவரை, குழந்தைப் பெற்றுக்கொள்வது மகிழ்ச்சி; பெண்களைப் பொறுத்தவரை, அது வெற்றி. ஆண்களைப் பொறுத்தவரை, தன் குழந்தையை நல்லபடியாக வளர்த்துத் திருமணம் செய்துவைப்பது மகிழ்ச்சி; பெண்களைப் பொறுத்தவரை, அது சக்சஸ்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 -  பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!

ஆண்களுக்கு மகிழ்ச்சியாகத்  தோன்றுகிற விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கு சக்ஸஸ் என்று நம் சமூகம் சொல்லித் தந்திருக்கிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்குத் தயாராகும் அளவுக்குக்கூட தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறத் தயாராவதில்லை. திருமணம் செய்வதற்கு முன்புவரை தன் அழகுக்கும் உடம்புக்கும் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், அதற்குப் பிறகு அதைப்பற்றி கவலையே படுவதில்லை. ‘அதான் கல்யாணம் ஆயிடுச்சே, குழந்தை பிறந்துடுச்சே, இனிமேல் எதுக்கு இதெல்லாம்’ என்கிற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. இந்த எண்ணத்திலிருந்து அவர்கள் வெளியில் வரவேண்டும்.

சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால், அதில் நாம் வெற்றி அடைந்து விட்டதாக நினைத்தால், அது நம்மை முடக்கிவிடும். உங்களுக்கு எவையெல்லாம் மகிழ்ச்சி அளிக்குமோ, அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். உங்களுக்கு காபி குடிக்கப் பிடிக்கும்; நண்பர்களுடன் படம் பார்க்கப் பிடிக்கும்; புத்தகம் படிக்கப் பிடிக்கும் என அவை எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும், அவற்றைப் பட்டியலிட்டு அதைத் தினமும் செய்து, மகிழ்ச்சியடையுங்கள். அளவற்ற மகிழ்ச்சிதான் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தினமும் விருப்பப்பட்டுச் சமைக்கிறீர்கள் என்றால் மகிழ்ச்சி. ஆனால், உங்கள் சமையலுக்கு விருது கிடைத்தால் அதுதான் வெற்றி. இதுதான் இரண்டுக்குமான வித்தியாசம். இதை நம் பெண்களுக்குச் சொல்லித் தராமல் நம் சமூகம் அடக்கி வைத்துள்ளது.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 -  பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!



யானை, குட்டியாக இருக்கும்போது அதன் காலில் கட்டப்படும் சங்கிலியைத் தாண்டி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிற எண்ணத்தை அதனிடம் ஏற்படுத்திவிடுகிற மாதிரி, பெண்களின் மனதில் பல கற்பனைத் தடைகள் விதிக்கப்பட்டுவிடுகின்றன. அந்தத் தடைகளைத் தாண்டி பல பெண்களால் வரமுடிவதே இல்லை. 

உங்கள் கணவரின் வெற்றிதான் உங்கள் வெற்றி என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தீர்கள் எனில், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று அர்த்தம். நீங்கள் வளர்ந்தால்தான் உங்களுக்குக் கீழே உள்ளவர்களை நீங்கள் தூக்கிவிட முடியும்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற சில சக்சஸ் டிப்ஸ்களைச் சொல்கிறேன்.

1. எல்லாரும் என்ன செய்கிறார்களோ, அதைச் செய்யாதீர்கள். எல்லாரும் செய்வதையே நீங்களும் செய்தால், அவர்கள் இருக்கும் இடத்தில்தான்   நீங்களும் இருப்பீர்கள். எனவே, அவர்களிடம் இருந்து நீங்கள் மாறுபட்டுச் செயல்படுங்கள்.

2. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுயமுன்னேற்றப் பேச்சாளர் நிக்கோலஸ் (Nicholas James Vujicic) ஒரு மேடையில் பேசும்போது, ‘‘நீங்கள் வாழ்க்கையில் பணக்காரனாகக் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்துங்கள்’’ என்று சொன்னார். முதலில் அதை நான் கேட்டபோது நகைச்சுவையாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன நோக்கம்,  நாம் அந்த நோட்டுகளைக் கையில் தொடவில்லை எனில், அதை நினைக்கவே மாட்டோம். 500, 1,000 ரூபாய் தாள்களைத் தொட்டுச் செலவு செய்யும்போது, நாம் அதிகம் சம்பாதிக்க நினைப்போம்.

3. எல்லாருக்கும் ரோல் மாடல்கள் இருப்பார்கள். வெறும் வாயால் மட்டும் அவர்களின் பெயர்களைச் சொல்லாமல், அவர்கள் என்னென்ன செய்தார்களோ அல்லது  செய்கிறார்களோ, அதை நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டும். 

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 -  பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்!

4. பெண்கள்தான் சமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சமையலறையிலேயே இருக்கக்கூடாது. அது உங்களின் நேரத்தை மட்டு மல்லாமல், சிந்தனைகளையும் சாகடித்துவிடும். என் அண்ணன்களுக்கும் எனக்கும் பெண் பார்க்கும்போது, என் அம்மா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார். அது, ‘என் மருமகள் களுக்குச் சமையல் தெரியக்கூடாது’ என்பதுதான். ‘அவர்கள் ஆசைப்பட்டு சமைக்கிறார்கள் என்றால் தாராளமாகச் சமைக்கலாம். ஆனால், நாம் பெண்கள்; அதனால் நாம்தான் சமைக்க வேண்டும் என்று சமைக்கக் கூடாது’ என்பார்.

ஏனென்றால், பெண்கள் சமையலறையில் தன் நேரத்தையும், திறமையையும் வீணடிக்கிறார்கள். அதனால் சமைக்காமல் உங்களுக்கு விருப்பப்பட்ட வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது என்று உங்கள் வீட்டில் சொல்லிச்சொல்லியே, உங்களைச் சமையலறையிலேயே சமாதி கட்டிவிடுவார்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு உடம்பு சரியில்லை எனில், வேறு யாருக்கும் பார்க்கத் தெரியாது.

5. டிவி பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்தகம் படிக்கும்போது உங்கள் கண்ணும் மூளையும் மட்டும்தான் வேலை செய்யும். ஆடியோ சிடி கேட்டால் காதும் மூளையும் மட்டும்தான் வேலை செய்யும். ஆனால், நீங்கள் டிவி பார்க்கும்போது, உங்கள் கண், காது, மூளை எல்லாம் வேலை செய்யும். அது உங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால், கொஞ்ச நேரம் மட்டும் டிவி-யைப் பாருங்கள். உங்களைப் புத்துணர்ச்சியாக்க மட்டுமே டிவி பார்த்தால் போதும். 

6. டிவி-யைப் போலத்தான் ஷாப்பிங்கும். ஷாப்பிங் செய்வதையே வழக்கமாக வைத்துக்கொள்ளாதீர்கள். அது உங்கள் நேரத்தை அதிகமாக அபகரித்துக் கொள்ளும். நகைகள் மீதும் பெரிதாக ஆசை வைக்காதீர்கள். பொன் நகையைவிட உங்கள் புன்னகைக்கே மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் ஃபாலோ செய்தால், பெண்கள் தங்களின் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.  சேலம் பக்கத்தில் ஒரு சின்ன ஊரில், ‘நேச்சுரல்ஸ்’ பியூட்டி பார்லர் தொடங்க வேண்டும் ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டார். நான் மறுத்துவிட்டேன். நான் அங்கு போகும்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்டதால், ‘சரி’ என்று அவரைப் பார்க்கப் போனேன். அவரே கடையெல்லாம் பார்த்து வைத்திருந்தார். பிறகு என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் பென்ஸ் கார் ஒன்றும், பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் இருந்தது. அவற்றைப் பார்த்தபோது, ‘‘நல்லா வசதியாதானே இருக்காங்க. இவங்களுக்கு எதுக்கு பிசினஸ்’’ என்று நினைத்தேன். உடனே அந்த  ஊரில் ஒரு கிளையை ஆரம்பித்தோம். ஒரு வருடம் கழித்து அவர் போன் செய்து, ‘நன்றி’ என்றார். ‘எதுக்கு’ என்றேன். ‘‘இந்த மாதம் நான் ரூ.50,000 லாபம் பார்த்துட்டேன். எனக்கு ரூ.50,000 பெரிய காசு கிடையாது.  என் வீட்டில் எப்பவும் ரூ.10 லட்சம் இருக்கும். ஆனால், அதை நான் எடுத்துச் செலவு செய்தால், என் கணவருக்கு கணக்குச் சொல்லணும். இந்த ரூ.50,000 என் பணம். இதற்கு நான் யாருக்கும் கணக்குச் சொல்லத் தேவையில்லை’’ என்றார்.

ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நின்று, அவர்களின் சுதந்திரத்தைச் சுவாசிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்!

தொகுப்பு: மா.பாண்டியராஜன்

(மாத்தி யோசிப்போம்)