நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!

கா.முத்துசூரியா

வ்வளவோ சம்பாதித்தும், சரியான நிதித் திட்டம் இல்லாமல் நிறையத் தவறுகளைச் செய்து விட்டு, நாற்பது வயதுக்குமேல் திடீரென ஞானம் பெற்றவர்களாக விழித்துக்கொண்டு பதறுவார்கள். இப்படி இல்லாமல் முப்பது வயதிலேயே அதிரடி செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சரியான பாதையில் பயணிப்பவர்களுக்குச் சிக்கல்கள் குறைவே. இவர்கள் தங்கள் இலக்குகளைச் சுலபமாக எட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.

“நான் விவரம் தெரியாமல் நிறைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துவிட்டேன்; அவற்றையெல்லாம் தொடர்வது சரியாக இருக்குமா... இல்லை குளோஸ் செய்துவிட்டு வேறு முதலீடுகளுக்குச் செல்வது சிறப்பாக இருக்குமா...” என முதலில் கேள்வி எழுப்பினார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த தயாநிதி.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!

தயாநிதிக்கு வயது 32. சரியான தருணத்தில் நிதி ஆலோசனைக்கு வந்திருக்கும் அவருக்கு முதலில் ஒரு சல்யூட். தயாநிதி, தன் குடும்ப நிதி விவரங்கள் பற்றி நம்மிடம் சொன்னார்.

“நான் ஒரு பொறியியல் பட்டதாரி. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் குழுத் தலைவராகப் பணியாற்றி வருகிறேன்.  மனைவி மற்றும் மூன்று வயது  மகளுடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அம்மா சொந்த ஊரில் வசிக்கிறார்.

என் மனைவியும் பொறியியல் பட்டதாரிதான். மகள் பிறந்த பிறகு பணிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். எனது மாத வருமானம் ரூ.75,000. நான் ரூ.1 கோடிக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். எங்கள் நான்கு பேருக்கும் மொத்தமாக மருத்துவ பாலிசி ரூ.3 லட்சத்துக்கு, அலுவலகத்தில் எடுத்துத் தந்திருக்கிறார்கள்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!


சொந்த ஊரில் ரூ.45 லட்சம் மதிப்பில் வீடு கட்டி வருகிறேன். கையில் இருந்த சேமிப்பையும் போட்டு, ரூ.33 லட்சம், வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். இன்னும் நான்கு மாதங்களில் வீட்டுக் கடன் மாதாந்திரத் தவணைத் தொகை செலுத்த ஆரம்பித்துவிடுவேன். 25 வருடங்கள் செலுத்தும் வகையில் கடன் வாங்கியுள்ளதால் ரூ.20,000 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

கடந்த 10 மாதங்களாக மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.6,000 முதலீடு செய்து வருகிறேன். மேலும், மாதம் ரூ.5,000  பங்குச் சந்தையிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். இன்னும் இரு மாதங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்திரத் தொகையை உயர்த்தலாம் என்று இருக்கிறேன்.

என் பெயரிலும், மனைவி மற்றும் மகள் பெயர்களிலும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருக்கிறேன். சேமிப்பு, காப்பீடு பற்றிய சரியான புரிதல் இல்லாதபோது இவற்றை வாங்கி விட்டேன். டேர்ம் இன்ஷூரன்ஸையும் சேர்த்து மாதம் ரூ.10,000 அளவுக்கு பிரீமியம் செலுத்தி வருகிறேன்.

மாத வீட்டு வாடகை ரூ.14,000 செலுத்துகிறேன். வங்கி வைப்புக் கணக்கில் தற்போது ரூ.3 லட்சம்  உள்ளது. அடுத்த வருடம் என் மகளைப் பள்ளிக்கு அனுப்பவிருக்கிறேன். மகளின் கல்வி, திருமணம் மற்றும் எங்கள் எதிர்காலத்துக்காகச் சேமிக்க விரும்புகிறேன்.

எனது முதலீட்டு முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு, என் எதிர்காலம் சுகமாக அமைய சூப்பரான முதலீட்டுத் திட்டங்களை வகுத்துத் தந்தால்  உதவியாக இருக்கும்” என்றவர், தன் வரவு செலவுத் திட்டங்களையும், இலக்குகளையும் பட்டியலிட்டு அனுப்பி வைத்தார்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!

வருமானம்: ரூ.75,000

வாடகை மற்றும் மாதாந்திரச் செலவுகள் : ரூ.22,000

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : ரூ.6,000

பங்குச் சந்தை முதலீடு : ரூ.5,000

இன்ஷூரன்ஸ் பிரீமியம் மாதம் : ரூ.10,000

வீட்டுக் கடன் இ.எம்.ஐ (அடுத்த நான்கு மாதங்களில்) : ரூ.20,000

மொத்தம் : ரூ.63,000

மீதமாகும் தொகை: ரூ.12,000

பி.எஃப் (4,311+3,061): ரூ.7,372 (2009-ம் ஆண்டு முதல்) தற்போதுவரை இருப்பு: ரூ.5 லட்சம்

இலக்குகள் : 14 வருடங்களில் குழந்தையின் மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம் தேவை. 20 வருடங்களில் குழந்தையின் திருமணத்துக்கு ரூ.15 லட்சம் தேவை. 26 வருடங்களில் என் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தேவை. இந்த மூன்றையும் தற்போதைய மதிப்பில் சொல்லியுள்ளேன்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ்  பார்த்தசாரதி.

“மிஸ்டர் தயாநிதி, தவறு செய்வது மனித இயல்பு. அதைத் திருத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. முதலில் நீங்கள் கட்டிவரும் வீட்டைப் பற்றிச் சொல்கிறேன். பொதுவாக நாம் அடுத்த 15 ஆண்டுகளில்  எந்த ஊரில் இருக்கப்போகிறோமோ, அங்கே சொந்த வீடு கட்டுவதுதான் சரியான விஷயமாக இருக்கும். நீங்கள் இன்னும் 25 ஆண்டுகள் சென்னையில் இருக்கக்கூடிய சூழல் இருப்பதால், சென்னையில் வீடு வாங்குவதே சரி. 

சொந்த வீடு என்பது குடியிருக்கும் ஊரில் இருந்தால், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்குக் கைகொடுப்பதாக இருக்கும். ஆனால், உங்கள் அம்மா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் முடிவினை நீங்கள் எடுத்திருப்பதாகக் கருதுகிறேன். எனவே, நீங்கள் சொந்த ஊரில் வீடு கட்டுவது உணர்வு சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்பதால், அதை நிதி சார்ந்து யோசிக்கத் தேவையில்லை.

அடுத்து, இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விஷயத்தில்  தவறு செய்திருப்பதாக நீங்களே சொல்லி விட்டீர்கள். நாம் கட்டிய இன்ஷூரன்ஸ் பிரிமீயம் திரும்பக் கிடைக்கிற மாதிரியான  இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பது தவறு. அதுவும் மணிபேக், முழு ஆயுள்காலக் காப்பீட்டு பாலிசிகளை எடுப்பதால் எந்தப் பெரிய பயனும் இருக்காது.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!

நீங்கள் ஜீவன் தரங், ஜீவல் சரல், ஜீவன்  ஆனந்த் போன்ற பாலிசிகளை பெய்ட் அப் பாலிசிகளாக மாற்றிக்கொள்வது நல்லது. காரணம், டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.1 கோடிக்கு வைத்திருக்கும்போது இந்த பாலிசிகளை பெய்ட் அப் செய்துகொள்வதே சரியாக இருக்கும்.

உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு 14 வருடங்கள் கழித்து ரூ.25 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும். தற்போது செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீட்டை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.

அடுத்து, குழந்தையின் திருமணத்துக்கு 20 வருடங்கள் கழித்து, ரூ.58 லட்சம் தேவை. அதற்கு நீங்கள் தற்போது செய்துவரும் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் வருமானத்தை  பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, பங்குச் சந்தை முதலீட்டைத் தொடருங்கள்.

 அடுத்ததாக, உங்கள் ஓய்வுக் காலத்துக்கு தற்போது வாழக்கூடிய அதே வாழ்க்கைத் தரத்தைப் பின்பற்றினாலே உங்களுக்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.4.6 கோடி தேவை. உங்கள்    பி.எஃப் மூலம் ரூ.1.9 கோடி கிடைக்கும். இன்னும். ரூ.2.7 கோடி சேர்க்க மாதம் ரூ.12,800 முதலீடு செய்ய வேண்டும். தற்போது மீதமுள்ள தொகை 12,000 ரூபாயையும் வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகையையும் ஓய்வுக் கால முதலீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கையில் உள்ள ரூ.3 லட்சத்தில் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கப் பயன்படுத்தியதுபோக, மீதமுள்ள தொகையை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளவும். மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பெய்ட் அப் செய்வதன் மூலம் மிச்சமாகும் பிரீமியத் தொகையை செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்யவும். 

பரிந்துரை: ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு-ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் -ரூ.2,000, மிரே அஸெட் எமர்ஜிங் -ரூ.1,000, எஸ்.ஐ.பி மிட்கேப் -ரூ.1,000, யூ.டி.ஐ டிரான்ஸ்போர்ட் அண்ட் லாஜிஸ்டிக் -ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் -ரூ.2,500, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ருவல் -ரூ.2,500, ஐ.டி.பி.ஐ கோல்டு ஃபண்ட் -ரூ.800 

சம்பளம் உயரும்போதும், அடுத்த குழந்தை பிறந்தபிறகும் முதலீட்டில் சிறிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம். 

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்!