
BIZ பாக்ஸ்
இன்னும் நோட்டுகளை எண்ணும் ஆர்.பி.ஐ!
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு தர்மசங்கடம்தான். மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றக் நிலைக் குழுவின் முன் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ‘‘பண மதிப்பு இழப்புக்குப்பின் வங்கியில் டெபாசிட் ஆன தொகை எவ்வளவு’’ என்பதுதான் அந்தக் கேள்வி.

‘‘இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஆள் பலம் குறைவுதான் என்பதால், பணிகள் மெதுவாக நடக்கின்றன. மொத்தமாக எண்ணிவிட்டு, எவ்வளவு தொகை என்பதைச் சொல்கிறோம்’’ என்றார் உர்ஜித். நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களோ இந்தப் பதிலை ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. ‘‘மோடியின் ஆட்சி முடிகிற 2019-க்குள்ளாவது ரூபாய் எண்ணும் வேலையை முடித்துவிடுவார்களா’’ என்று எம்.பி-க்கள் கிண்டலாகக் கேட்க, உர்ஜித்தின் நிலையோ பரிதாபம்!

யோகியின் கன்னி பட்ஜெட்!
உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதியானந்த், தனது முதல் பட்ஜெட்டை கடந்த வாரம் சமர்ப்பித்தார். கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் ரூ.3,46,935 கோடி பட்ஜெட் போட்டார். ஆனால், யோகியோ அதைவிட 11% அதிகரித்து, ரூ.3,84,659 கோடிக்கு பட்ஜெட் போட்டிருக்கிறார். நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதத்துக்குள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் ஏசி, ஏர்கூலர் எனத் தடபுடலாக ஏற்பாடு செய்யக் கூடாது என கறாராக உத்தரவிட்டிருக்கிறார்.
சரிந்தது பிட்காயின் மதிப்பு!
‘கிரிப்டோகரன்சி’ (Cryptocurrency) என்று சொல்லப்படும் விர்ச்சுவல் பணமான பிட்காயினின் மதிப்பு, கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 20% விலை குறைந்தது. கடந்த ஜூன் 12-ம் தேதி 3,000 டாலரை எட்டிய பிட்காயின், இப்போது சுமார் 2,400 டாலருக்கு வர்த்தகமாகிறது. விர்ச்சுவல் பணம் என்றாலே பலரும் பிட்காயின் என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், பிட்காயின் தவிர, எத்ரியம், எத்ரியம் கிளாசிக், ரிப்பிள், லைட்காயின், டாஷ், நெம் என பல வகைகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த பணங்களின் மதிப்பும் இறங்குமுகத்தில்தான் இருக்கிறது.
உலக அளவில் 100 டாப் விஸ்கி பிராண்டுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் முதல் 10 இடத்தில் மூன்று இந்திய விஸ்கி பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்நாப் டீல் நிறுவனத்தை வாங்கி 700 முதல் 750 மில்லியன் டாலரைத் தரத் தயார் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஸ்நாப் டீல், இப்போது குறைந்தபட்சம் 900 மில்லியன் டாலரையாவது (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5,800 கோடிக்கு மேல்) தரும்படி கேட்டிருக்கிறது.
மாடுகளைப் பற்றி பேசாதே!
பிரபல பொருளாதார மேதை அமர்த்யா சென் பற்றி ஒரு டாக்குமென்டரி படத்தை எடுத்தார் சுமன் கோஷ் என்பவர். இந்த டாக்குமென்டரி படத்தைத் தணிக்கை செய்ய, கொல்கத்தாவில் உள்ள தணிக்கை வாரியத்துக்கு அனுப்பினார் சுமன். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ‘மாடு’, ‘குஜராத்’, ‘இந்துத்துவா’, ‘இந்து இந்தியா’ ஆகிய வார்த்தைகளை மெளனமாக்கிவிட (mute) உத்தரவிட்டுள்ளது. அப்படிச் செய்தால் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்றும் சொல்லி இருக்கிறது. ‘‘சில முக்கியமான வார்த்தைகளை உச்சரிக்காமல் இந்தப் படத்தை வெளியிட்டு என்ன பிரயோஜனம்? எந்த ஜனநாயக நாட்டிலும் இப்படிச் செய்யமாட்டார்கள்’’ என்று மனம் கொதித்திருக்கிறார் சுமன்.

கோஹினூர் வடிவில் ஆந்திர சட்டமன்றம்!
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியை அடி அடியாகத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. புதிய தலைநகரின் முக்கியமான கட்டடங்களுக்கு டிசைனை உருவாக்கித் தர பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பு நிறுவனமான ஃபாஸ்டர் + பார்ட்னர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஆந்திர தலைமை உயர் நீதிமன்றத்தினை ஸ்தூபி வடிவிலும், சட்டமன்றத்தை கோஹினூர் வைரம் வடிவிலும் வடிவமைக்க சந்திரபாபு நாயுடு விருப்பம் தெரிவித்தார். அதன்படி, இந்த இரு கட்டடங்களை வடிவமைத்துத் தந்திருக்கிறது பிரிட்டிஷ் நிறுவனம்.

ஏலத்துக்கு வரும் மைக்கேலின் பாடல்கள்!
இதுவரை வெளியாகாத மைக்கேல் ஜாக்சனின் ஒன்பது பாடல்கள் இந்த மாதம் ஏலத்துக்கு விடப்படுகின்றன. நியூயார்க்கில் உள்ள ‘காட்டஹேவ் ராக் அண்ட் ரோல்’ நிறுவனம் நடத்தும் ஏலத்தில் மைக்கேலின் பாடல்கள் ஏலம் விடப்படுகின்றன. ‘பைபிள்’ என்று பெயரிடப்பட்ட ஒன்பது பாடல்களுக்கான ஏலத் தொகை, 50 ஆயிரம் டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், 1 மில்லியன் டாலருக்காவது இந்தப் பாடல்கள் விலை போகும் என்று சொல்லப் படுகிறது!
டிரேடிங் சிக்கலால் திணறிய என்.எஸ்.இ!
இந்த வாரம் திங்களன்று காலை 9.15-க்கு தேசியப் பங்குச் சந்தையான என்.எஸ்.இ வர்த்தகமாகத் தொடங்கியவுடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆர்டர்கள் வர்த்தகமாகாமல் போனது. இதனால் 9.30 மணிக்கு வர்த்தகத்தை நிறுத்தியது என்.எஸ்.இ. அதற்குப் பிறகும் நான்கு முறை வர்த்தகம் தடைப்பட்டு, சரிசெய்யப்பட்டது. இந்தச் சிக்கலுக்கான காரணம், பங்கேற்பு ஆவணங்கள் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்க முற்பட்டதே என்கிறார்கள். இதனால் மும்பை பங்குச் சந்தை மீது பங்கு வர்த்தகர்களின் கவனம் அதிகரித்திருக்கிறது.