மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதி செய்யப் போகும் பொருளை எப்படி சிரத்தையுடன்  தேர்ந்தெடுப்பீர்களோ, அதே சிரத்தையுடன் ஏற்றுமதி செய்யும் பொருளுக்குச் சாதகமான நாட்டையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. 

ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் அவசியம். முதலில் உங்களுடைய பொருளை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளின் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள நடைமுறைகளும், தடைகள் ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற தகவல்களும் மிக முக்கியமானவை. மேலும், ஒரு நாட்டுக்கு ஒரு பொருள் போவதற்கும், தொழில்ரீதியாக நீங்கள் போவதற்கும் உள்ள நடைமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அங்குச் செல்வதற்கான போக்குவரத்து வழிகள் என்னென்ன, ஒரு நாட்டுக்கு உங்களுடைய பொருள் போக எவ்வளவு நேரம் ஆகும், நீங்கள் போக எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாடுகளின் விவரங்களை வைத்து உங்களுடைய ஏற்றுமதிக்கான நாடுகளைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றிலிருந்து தகுந்த நாடுகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

பொருள்களை அனுப்ப, முடிந்தவரை ட்ரான்சிட் விமானங்களைத் தவிர்ப்பது நல்லது. ட்ரான்சிட் விமானங்கள் நேரடியாக நாம் அனுப்ப வேண்டிய நாட்டுக்குச் செல்லாமல், வேறு ஓர் இடத்துக்குச் செல்லும். அங்கிருந்து வேறு ஒரு விமானம் மூலம் பொருள்கள் நீங்கள் அனுப்பத் திட்டமிட்ட நாட்டுக்குச் செல்லும். இதனால் நாம் திட்டமிட்ட ஏற்றுமதி தாமதமாகலாம். தாமதமானால் நாம் அனுப்பும் பொருள்கள் அதே தரத்தில், அதே நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால் நமக்கு நஷ்டம் ஏற்படலாம்.

உதாரணமாக, சென்னையிலிருந்து புரூனே என்ற நாட்டுக்குக் கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்கிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் அந்தப் பொருள் சென்று சேர எட்டு நாள்கள் ஆகும். முதலில் மதர் வெசல் (mother vessel) அல்லது ஃபீடர் வெசல் (Feeder vessel) மூலமாகப் பொருள்கள் சிங்கப்பூருக்குப் போகும். இதற்கு 5 நாள்கள் ஆகலாம். பின்னர் சிங்கப்பூர் அல்லது மலேசியாவிலிருந்து பார்ஜ் (Barge) என்ற கப்பல் மூலம் புரூனேவுக்குச் செல்லும். ஆனால், இந்த பார்ஜ் கப்பல், உடனே பொருள்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடாது. அது கிளம்புவதற்கு 15 நாள்கள்கூட ஆகலாம்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?



இதுவே விமானத்தின் மூலம் அனுப்பப்பட வேண்டும் என்றால் சென்னையிலிருந்து புரூனேவுக்குச் சென்று சேர 15 மணி நேரம் ஆகலாம். ட்ரான்சிட் விமானம் வழியாகவே புரூனே சென்று சேரும். முதலில் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு விமானம் செல்லும். பின்னர் மலேசியா அல்லது சிங்கப்பூரிலிருந்து ட்ரான்சிட் விமானமானது புரூனேவுக்குச் செல்லும். மலேசியாவிலிருந்து புரூனேவுக்குச் செல்ல 3 மணி நேரம்தான் ஆகும். ஆனால் அதே சமயம் மலேசியாவில் இருந்து விமானம் புறப்பட மூன்று நாள்களுக்கும் மேல்கூட ஆகலாம்.

எனவே, நாம் அனுப்பக்கூடிய பொருள்கள் குறிப்பிட்ட நாட்டுக்குச் சென்று சேர்வதற்கான காலம் எவ்வளவு என்பதைப் பொறுத்து இறக்குமதியாளரிடம் இத்தனை நாள்களில் வந்து சேரும் என்று தெரிவிக்க வேண்டும். மேலும், விசா குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். விசா கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1,500-லிருந்து ரூ.50,000் வரையிலும் இருக்கலாம். முதன்முதலில் அயல்நாடு செல்பவர்கள் குறைந்தபட்ச கட்டணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. விசா விரைவாகக் கிடைக்கும்படியான நாடுகளைத்  தேர்வு செய்யலாம். புதிதாக ஏற்றுமதி செய்யப்போகிறவர்கள் ரூ.25 ஆயிரத்துக்குக்கீழ் செலவாகும்படி தங்களின் பயணத்தைத் திட்டமிடலாம்.

அதேபோல் எந்த நாட்டுக்கு நாம் சென்றாலும் அந்த நாட்டு இமிக்ரேஷனில் நம்மை, பல கேள்விகள் கேட்பார்கள். எதற்காக வந்திருக்கிறோம், எத்தனை நாள்கள் தங்குவோம் என்றெல்லாம் கேட்பார்கள். அதைவிட முக்கியமாக ‘சோ மணி (show money)’ எவ்வளவு இருக்கிறது என்று கேட்பார்கள். அதாவது, நீங்கள் அந்த நாட்டில் தங்கப் போகும் நாள்களுக்குத் தேவையான செலவுகளுக்குப் போதுமான பணம் நம்மிடம் இருக்கிறதா என்பதை அறியத்தான் இந்தக் கேள்வி. கையில் எதுவுமே இல்லாமல் அங்கு தங்கி என்ன செய்யப் போகிறோம் என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் நமக்குச் சிக்கல்தான். எனவே, நாம் எத்தனை நாள்கள் அங்கு தங்கப் போகிறோமோ அத்தனை நாள்களுக்கான பணம் நம்மிடம் இருக்க வேண்டும்.

பிற நாடுகளுக்குப் போவதற்குமுன் நாம் சந்திக்கப் போகிறவரின் சந்திப்பை உறுதி செய்து  கொண்டு, அதற்கு ஏற்பப் பயணத்தைத் திட்டமிட வேண்டும். அதேபோல் எங்கே தங்கப் போகிறோம் என்கிற முழு விவரங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். இதுகூட தெரியாமலா கிளம்பி வந்துவிட்டீர்கள் என்று அவர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டால் சிக்கல் நமக்குத்தான்.

நாடுகளைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த இதழில் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)