
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : Here Comes Everybody
பதிப்பாளர்: Penguin UK
ஆசிரியர் : க்ளே ஷிர்கி
மாற்றங்கள் தனியொரு மனிதனால் நிகழப்போவது இல்லை. பலரும் ஒன்று கூடினால்தான் சிறப்பான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். பலரும் ஒன்றிணைந்து மாறுதல்களைக் கொண்டுவருவது எப்படி..? க்ளே ஷிர்கி என்பவர் எழுதிய ‘ஹியர் கம்ஸ் எவ்ரிபடி’ எனும் புத்தகம் அதற்கான விடையைச் சொல்கிறது.
2006-ம் ஆண்டு (ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்னால்) நியூயார்க்கில், ஒரு வாடகை காரின் பின்சீட்டில் மறந்து வைத்துவிட்டுப் போன, அன்றைய மதிப்பில் 300 அமெரிக்க டாலர் விலை கொண்ட ‘சைட்கிக்’ என்ற ஒரு செல்போன் எப்படி திரும்பப் பெறப்பட்டது, அதில் மக்களின் பங்கு என்ன என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். அந்த போனின் உரிமையாளருக்கு விரைவில் திருமணம். அவருக்குத் தேவையான அத்தனை போன் நம்பர்களும் அந்த போனில்தான் இருந்தது. போன் தொலைந்து போனது குறித்து உடனே அவர் போலீசில் புகார் கொடுக்க, அதை அவர்கள் தொலைந்து போனது என்று பதிவு செய்து தந்தார்கள். செல்போன் சேவை நிறுவனத்தின் மூலம் அந்த போன் வேறு இடத்தில் பயன்படுத்தப்படுவதை அறிந்த போனின் உரிமையாளர், அந்த போனைப் பயன்படுத்து பவரைத் தொடர்பு கொள்ள, அவர் தெனா வட்டாக, ‘இதுதான் என் விலாசம். வந்து வாங்கிக்கொண்டு போ’ என்று மெசேஜ் அனுப்பி னார். அது போலி விலாசம் என்பது வேறு விஷயம்.
போனைத் தொலைத்தவரோ அன்றைய சூழலில் இருந்த வசதிகளான இணையதளம் (அப்போது சோஷியல் மீடியா இல்லை) மற்றும் புல்லட்டின் போர்டுகள், இணையதளப் பத்திரிகை வாயிலாக போன் தொலைந்து போனதையும் அதை எடுத்தவர் செய்யும் அட்டூழியங்களையும் விவரித்தார். மக்கள் அதைப் படித்துவிட்டு கமென்ட் மூலம் உதவியும் செய்ய, ஒரு சிலர் அந்த போனை வைத்திருப்பவர் வீடு வரை சென்று போட்டோ எடுத்து அனுப்பவும் செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில், போனைப் பயன்படுத்தியவரின் அண்ணன், ‘‘என் தங்கை ஒரு டாக்சி டிரைவரிடம் இருந்து காசு கொடுத்து போனை வாங்கினாள். சும்மா இணையதளம், பத்திரிகை என்று அவளைப் பயமுறுத்தினால் பிரச்னை வேறு மாதிரியாகிவிடும்’ என்று மிரட்டல் விடுத்தார். போனைத் தொலைத்தவர், ‘அட, நம்ம போனை வைத்துக்கொண்டு நம்மையே மிரட்டுகிறாரே, இதை விடக்கூடாது’ என்று நினைத்து போலீஸுக்குச் செல்ல, போலீஸோ ‘தொலைந்து போன பொருள் என்றுதானே எங்கள் ரிக்கார்டில் பதிவு செய்துள்ளோம். அதை வைத்திருப்பவர்மீது எப்படி நடவடிக்கை எடுப்பது’ என்று ஷாக் கொடுத்தனர். போலீஸ் டிபார்ட்மென்டின் இன்டர்னல் ரெக்கார்டுகளை நண்பர் மூலம் பெற்று, நடந்தவற்றை விவரித்து இது அப்பட்டமான திருட்டுபோல் இருக்கிறது என்று சொல்லி, திருட்டு எனப் புகாரை மாற்றச் சொன்னார். ‘எங்களுடைய இன்டர்னல் ரெக்கார்டு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது’ என்று போலீஸ் இவரைக் கைது செய்ய முயல, அதையும் இணையதளத்தில் பதிவு செய்ய, மக்கள் கொதிப்படைய, கைது தவிர்க்கப்பட்டு, பல உயரதிகாரிகளின் முயற்சியால் போனை வைத்திருப்பவர், போலீஸின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாராம்.

போனை வைத்திருந்த வரின் அம்மா, ‘அட, ஒரு போனுக்கு என் மகளை போலீஸ் பிடித்துச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை’ என்று சொன்னாராம். போனைத் தொலைத்தவர் போனைப் பெற்றுக்கொண்டு, மன்னித்து விட்டுவிடலாம் என்று சொல்ல, கேஸ் இனிதே முடிவடைந்தது.
போனைத் தொலைத்தவர் அதை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லாமல் தனிநபராக நின்று முயற்சி செய்திருந்தால், என்னவாயிருக்கும் என்று கேட்கும் ஆசிரியர், அவர் போனை வைத்திருப்பவரைச் சென்று பார்த்து அடிவாங்கிக் கொண்டுகூட வந்திருக்க வாய்ப்புள்ளது.
போனை எடுத்தவரின் நண்பர்கள் அவருக்குக் கண்மூடித்தனமாக ஆதரவாக இருந்தனர். போனைத் தொலைத்தவர், இந்த விஷயத்தில் பணத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. நியாயம் நிலைத்து நிற்கவேண்டும் என்று நினைத்தார். போனின் விலையைவிட அதிகத் தொகை செலவழித்து இணையதளம் போன்ற பல வழிகளில் மக்களிடம் எடுத்துச் சென்றார்.
போனை எடுத்தவரோ தொலைத்தவருக்கு சப்போர்ட் கிடைக்காது. அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று மலைபோல் நம்பியது மட்டுமே பெரிய தவறாகப் போனது. அதனாலேயே முதன்முதலாகப் பதில் சொல்லும்போதே, ‘சும்மா போலீசிடம் போகிறேன் என்று பூச்சாண்டி காண்பிக்காதே’ என்று சொன்னார்.
இந்த கேஸில் ஒரு திருப்புமுனையே, தொலைந்துபோன போன் என்பதில் இருந்து திருட்டுப்போன போன் என போலீஸ், புகாரை மாற்றியதுதான். இணையதளம் என்ற ஒரு பெரிய விஷயம் மட்டுமே போனைக் கிடைக்கச் செய்தது. அதுவே பலரிடம் போனைத் தொலைத்தவரின் அவல நிலையை உலகுக்கு எடுத்துச் சென்றது. அறுபதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், ரேடியோ மற்றும் தொலைபேசிகளுக்கு இந்தச் செய்தி சென்றடைந்தது இணையத்தால்தான். மக்களிடம் அது பெற்ற கவனம்தான் போலீஸ், புகாரைத் தொலைந்துபோன பொருள் என்பதில் இருந்து திருடுபோன பொருள் என்ற நிலைக்கு மாற்ற உதவியாக இருந்தது.
இதற்கு எதிர்வாதமும் உண்டு. போன் எல்லோருக்கும் தான் தொலைந்து போகிறது. சாமான்யனுக்கு ஒரு போன் தொலைந்தால் தன்விதியை நொந்து கொண்டு மற்றொரு போனை வாங்கிக் கொள்கிறான். ஒரு வசதியான நபர் போனைக் கவனக்குறைவாகத் தொலைத்து விட்டு அவருக்குப் பணமும், நேரமும் இருப்பதால், ஊரைக் கூட்டி போனை எடுத்த இளம் வயதுப்பெண்ணை அவமானப்படுத்திக் கைது செய்ய வைத்தது சரியா என்பதுதான் அது. இதற்குப் பதில், சரி மற்றும் தவறு என்ற இரண்டுதான். போனை எடுத்தவர் போனை எடுத்ததையும் தாண்டி செய்த விஷயங்களே,மக்கள் பலரையும் தொலைத்தவருக்குச் சாதகமாக இருக்கச் செய்தது.
சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்திலேயே அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் எதைக் காட்டுகிறது?
மக்கள் கூட்டமாகச் சேர்ந்தால் மாறுதல்கள் நடக்கும். இன்றைக்கு சோஷியல் மீடியாவின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் எக்கச்சக்கமான துறை சார்பற்ற கற்றுக்குட்டிகளும் கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
குழுக்கள் என்பது ஒன்றும் சுலபமானதல்ல. குழுக்களை உருவாக்குவதும், நிலைத்து நிற்கச் செய்வதும் மிகவும் கடினமான விஷயம். சோஷியல் மீடியா குழுக்களை உருவாக்குவதைச் சுலபப்படுத்தினாலும் அதில் ஈடுபாட்டை நிலை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றே என்கிறார் ஆசிரியர்.
குழுக்களை உருவாக்குவது ஏன் சிரமமான ஒன்று என்று கேட்கிறீர்களா? இரண்டு நண்பர்கள் இணைந்து சினிமாவுக்குப் போக நினைக்கின்றனர். இது சுலபத்தில் நடந்துவிடும். அதுவே மூன்று பேரென்றால் கொஞ்சம் கஷ்டம். நான்கு பேர் என்றால் சொல்லவே வேண்டாம். ஏன் தெரியுமா?
இரண்டு பேர் என்றால் இருவரும் எந்த சினிமா, எந்த ஷோ எனச் சுலபத்தில் முடிவு செய்துவிடுவார்கள். நான்கு பேர் எனில், குறைந்தபட்சம் ஆறு விஷயங்களில் ஒத்துப் போக வேண்டியிருக்கும். குழுவின் எண்ணிக்கை அதிகம் என்றாலே வேறுபாடுகளும் அதிகம்தான்!
லாப நோக்கமல்லாத நிறுவனமொன்று, 40 இயக்குநர்களைக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரிடம், ‘இவ்வளவு இயக்குநர்களை வைத்திருக்கிறீர்களே, உங்கள் நிறுவனத்தின் சாதனை என்னவாக இருக்கும்’ என்று கேட்டதற்கு, ‘ஒன்றுமில்லை’ என்றாராம். லாபத்துக்காகச் செயல்படும் நிறுவனத்தில் இது இன்னமும் அதிகமாக இருக்கும். ஒருத்தர் மேட்டுக்கு இழுத்தால், இன்னொருத்தர் பள்ளத்துக்கு இழுப்பார். குழுவை நிர்வகிக்கும் எனர்ஜி செலவு அதிகரிக்க அதிகரிக்க, நாம் செய்யும்முன் சந்தையில் இருக்கும் போட்டியாளர்களில் வேறொருவர் அதைச் செய்துவிடுவார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டெக்னாலஜி மாறுதல்கள் என்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நீங்கள் கால்குலேட்டர் (தனியொரு கருவியாக) காலத்து ஆளாக இருந்தால் உங்களை இன்றைய மொபைல்போன் கால்குலேட்டர்களுக்கு (ஒளிந்திருக்கும் ஒரு அப்ளிக்கேஷன்) பழக்கப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே நீங்கள் பழகிய கால்குலேட்டர் உபயோகிக்கும் முறையை மறக்க வேண்டியிருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அந்த நிலையில்லை. புதியவை பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்குமே தவிர, பழையவற்றை மறக்க வேண்டியிருக்காது.
டெக்னாலஜி மற்றும் குழுக்கள் குறித்த பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் சுவையாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
- நாணயம் டீம்