நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?

ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?

ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?

ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?

ரக்கு மற்றும் சேவை வரி எனப்படும்   ஜி.எஸ்.டி, கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தொழில் செய்துவரும் தொழில்முனைவோர்கள், ஜி.எஸ்.டி-யை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று சொல்கின்றனர் ஆடிட்டர்கள். 

இந்தச் சூழ்நிலையில், புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஜி.எஸ்.டி விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தங்கள் வணிகத்தை ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்வது எப்படி என்பதும் அவர்களது கேள்வியாக இருக்கிறது.

புதிதாகத் தொழில் தொடங்குவோர், ஏற்கெனவே தொழில்முனைவோர்களாக அல்லது சேவைகள் தருவோராக இருப்பவர்கள் எல்லோரும்,  சரக்கு மற்றும் சேவை வரிக்கு எனத் தனியாகத் தொடங்கப்பட்டுள்ள  https://www.gst.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கு, இந்த இணையதளத்தின் பக்கத்தில் சேவைகள் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர், அதற்குள் இருக்கும் பதிவு என்பதைத் தேர்ந்தெடுத்து,  பின்னர் புதிய பதிவு என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய பதிவில், நீங்கள் வரி செலுத்தக்கூடிய புதிய தொழில்முனைவோராக இருந்தால், TAX PAYER என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி இல்லாமல், உங்களுக்காக உங்கள் ஆடிட்டர் அல்லது வழக்கறிஞர் பதிவு செய்கிறார் என்றால், GST PRACTITIONER என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், மாநிலம், மாவட்டம், பெயர், பான் எண், (பான் எண் இல்லாவிட்டால் இந்தத் தளத்திலேயே  அதற்காக விண்ணப்பிக்கவும் முடியும்) மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் உங்களுடையதுதானா என்பதைச் சரியாகப் பதிவு செய்தவுடன், உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும், மொபைல் எண்ணுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் (OTP) வரும். இதன் பின்னர் மூன்று நாள்களுக்குள் உங்களின் விவரங்கள் ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு விடும். மூன்று நாள்களில் பதிவு செய்யப்படும் என்று சொல்லப் பட்டாலும், ஒரு வார காலம்கூட ஆகலாம் என்கிறார்கள். 

ஜி.எஸ்.டி... எங்கே பதிவு செய்ய வேண்டும்?

வணிகர்கள், தொழில் செய்வோர் இனி ஜி.எஸ்.டி இணையதளத்தில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது. இனிமேல் டின் (Taxpayer Identification Number -TIN) எண் வாங்கத் தேவையில்லை. அதே போல, மதிப்புக் கூட்டு வரி (வாட்) பதிவும் தேவையில்லை. உள்ளூர் மாநகராட்சி அனுமதி போன்றவைகளும் இனி தேவையில்லை. ஜி.எஸ்.டி இணையதளத்தில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது. 

ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்கள் பற்றி  ஆடிட்டர் ராஜேந்திர குமாரிடம் பேசினோம்.

“தொழில் செய்வோர்கள் இனி  யாரையும் நேரில் பார்க்கத் தேவையில்லை. ஜி.எஸ்.டி இணையதளத்தில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது. பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த இணையதளத்தில் சில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது, தொழில்முனைவோர் தங்களுடைய தொழில் நிறுவனம் இயங்கும் கட்டடத்துக்கான வாடகை ஒப்பந்தத்தினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

முகவரிக்கான ஆதாரம், புகைப்படம், பான் அட்டை ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். நாம் தாக்கல் செய்யும் ஆவணங்களைக் கொண்டே முகவரி, பான் எண் உள்ளிட்டவற்றைச் சரிபார்ப்பார்கள்.

ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்வதற்கு பான் எண் கட்டாயம். முன்பு ஒரு தொழிலைப் பதிவு செய்வதற்காக, மாநகராட்சி, வணிக வரித்துறை அதிகாரிகள் என ரூ.10,000 வரை செலவிட வேண்டும். ஆனால், தற்போது இணையதளம் வழியாகவே, முறையான ஆவணங்களைக் கொண்டு எளிதில்  பதிவு செய்ய முடியும்.

பதிவு செய்தபின்னர், மாதம் தோறும் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்து ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.  ஜி.எஸ்.டி முறையில், உற்பத்தியாளர் களுக்குத்தான் வரி விதிக்கப்படுகிறது. எனவே, விற்பனையாளர்கள் ஜி.எஸ்.டி குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

பொருளை, வேறொரு பொருளாக மாற்றி விற்பனை செய்யும்போது (அதாவது, நெல்லை வாங்கி அரிசியாக மாற்றி விற்பது) அதற்கு வரி செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி-யில் கூறியபடி, சேவைத் தொழில்களுக்கு வரி விதிக்கப்படும். இந்தியாவில் எங்கு தொழில் தொடங்கினாலும் இந்த இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது” என்றார்.

ஜி.எஸ்.டி இணையதளத்தில் யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆடிட்டர் சரவணப் பிரசாத்திடம் கேட்டோம். “வெளி மாநிலத்தில் இருந்து பொருள்களை வாங்காமல், தமிழகத்தில் வாங்கி, தமிழகத்திலேயே விற்பனை செய்பவர்கள், வருடத்துக்கு ரூ.20 லட்சத்துக்கு  உட்பட்டு வர்த்தகம் செய்வோர் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யத் தேவையில்லை.

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.75 லட்சம்  வரை வியாபாரம் செய்பவர்கள் அதனை ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்ய வேண்டும். இந்த முறையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, பொருளுக்கு ஏற்ப 1% அல்லது 2% ஜி.எஸ்.டி செலுத்தினால் போதுமானது. ஆன்லைன் பதிவு என்பதே நடைமுறையை எளிமைப்படுத்தத்தான். எனவே, பதிவு செய்த விவரங்கள் சரியா என்று பார்க்க, நிறுவனம் செயல்படும் முகவரிக்கு அதிகாரிகள் வரமாட்டார்கள். ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்தவர்கள் மாதம் தோறும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.” என்றார்.

ஜி.எஸ்.டி. வரி கட்ட நிறுவனத்தைப் பதிவு செய்துவிட்டால், நிம்மதியாக பிசினஸ்  செய்யலாமே!  

கே.பாலசுப்பிரமணி

படம்: மீ.நிவேதன்