
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்

‘‘நாங்கள் விழுப்புரத்தில் வசித்து வருகிறோம். வரிக் குறைவு என்பதற்காக புதுச்சேரிக்குச் சென்று வாகனங்களை இதற்குமுன் வாங்குவோம். `ஜி.எஸ்.டி வந்ததால், இந்தியா முழுக்க வாகனங்களின் விலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்’ என்கிறான் என் நண்பன். இது உண்மையா?”
கே.ராஜேஷ், விழுப்புரம்.
``ஜி.எஸ்.டி-யின் முக்கிய நோக்கமே ஒரே நாடு, ஒரே வரி என்பதுதான். இதுவரை ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான விற்பனை வரியை விதித்து வந்தது. இதனால் ஏற்பட்ட அசெளகர்யங்களைக் களைவதற்காகவும், நாடு முழுவதும் ஒரே வரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஜி.எஸ்.டி. இனி, வாகனங்களை இந்தியாவில் எங்கு வாங்கினாலும் ஒரே வரி, ஒரே விலைதான் இருக்கும். ஆகவே, இதற்குமுன் புதுச்சேரிக்குச் சென்று வாகனங்களை வாங்கியதுபோல் இனி வாங்கத் தேவையில்லை.”

``வெள்ளி விற்பனையில் ஜி.எஸ்.டி-யின் தாக்கம் என்னவாக இருக்கும்?’’
சங்கர், சேலம்.
``வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 3% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி 1.5%, மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி 1.5% என மொத்தம் 3% வரி வசூலிக்கப்படும்.’’
“நான் தற்போது தங்கம் வாங்கி, அதை நகையாகச் செய்து, உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு விநியோகம் செய்கிறேன். புல்லியன் ரேட்டுக்கு சுங்க வரி 10% செலுத்தி வருகிறேன். இந்த 10% சுங்க வரியை நான் எப்படித் திரும்பப் பெறுவது?’’
உமா சங்கர், கோவை.
``நீங்கள் இறக்குமதி வரி செலுத்தியதற்கான உள்ளீட்டு வரி வரவில் ஐ.டி.சி இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்க முடியாது. ஆனால், செலுத்தப்பட்டிருக்கும் ஐ.ஜி.எஸ்.டி-க்கான வரியை உள்ளீட்டு வரியாக எடுத்துக்கொள்ள முடியும்.”
``நான் சிறிய நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். என் ஆண்டு டேர்ன் ஓவர் ரூ.10 லட்சம். நான் ஜி.எஸ்.டி-யைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டுமா?”
முத்துகுமார், திருச்சி.
``ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குள் டேர்ன் ஓவர் இருந்தால், ஜி.எஸ்.டி பதிவு செய்வது அவசியமில்லை. ஆனால், நீங்கள் வெளிமாநிலத்தில் விற்பனை செய்வதாக இருந்தாலும் அல்லது தாமாகவே முன்வந்து பதிவு செய்வதாக இருந்தாலும் ஜி.எஸ்.டி-யைப் பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யும்பட்சத்தில் உங்களுடைய நகைகளுக்கான வரி மூன்று சதவிகிதமாக இருக்கும்.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
