மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்!

செல்லமுத்து குப்புசாமி

‘பங்குச் சந்தையில், உங்கள் கையில் இல்லாத பங்குகளைக்கூட விற்கலாம் என்கிறார்களே’ எனச் சிலர் அதிசயமாகக் கேட்பதுண்டு. பங்குச் சந்தை, சூதாட்டம் என்று சொல்வதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக வேறு சொல்லி பயமுறுத்துவார்கள். பங்குச் சந்தையில் மட்டுமல்ல, காய்கறி சந்தையிலும் இருக்கும் சாதாரண விஷயம்தான். வெறுங்கையில் முழம் போடுவது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மாதிரியான விஷயம்தான் நம் கையில் இல்லாத பங்குகளை விற்கும் short sell எனப்படும் சங்கதி.

ஒரு மொத்த வியாபாரி 1,000 கிலோ சர்க்கரை ஸ்டாக் வைத்திருக்கிறார். தற்போது ஒரு கிலோ விலை ரூ.50. அடுத்த வாரம் வெளிநாட்டிலிருந்து நிறைய சர்க்கரை இறக்குமதியாகும் என்கிற செய்தி கிடைக்கிறது. அப்படி இறக்குமதியானால் சர்க்கரையின் தேவை மந்தமாகும். விலையும் ரூ.40-க்குக் குறையும் என்று யூகிக்கிறார். அப்படிக் குறைவதற்குள் கையிருப்பில் உள்ளதை விற்று விட்டு, விலை குறைந்தவுடன் வாங்கி ஸ்டாக் செய்துகொள்ளலாம் எனக் கணக்குப் போடுகிறார்.

ஆயிரம் கிலோவை (1000 X 50 = ரூ.50,000-க்கு) விற்றுவிட்டு, மீண்டும் ஆயிரம் (1000 X 40 = ரூ.40,000) கிலோ வாங்குகிறார். அதே ஆயிரம் கிலோ கையிருப்பை அவரால் பேண முடிகிறது. மார்க்கெட் விலையின் ஏற்ற, இறக்கத்தைக் கணித்து அதற்கேற்ப செயல்பட்டதன் மூலம் ரூ.10,000 லாபமும் கிடைக்கிறது. ஒரு பொருள் விலை ஏறினால் மட்டும்தான் அதிலிருந்து லாபம் சம்பாதிக்க முடியும் என்றில்லை. விலை இறங்கினாலும் லாபம் சம்பாதிக்கலாம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்!

சர்க்கரை வியாபாரி, கையிருப்பில் சர்க்கரையை வைத்திருந்ததால் அதை விற்றுவிட்டு, பிறகு வாங்கினார். அதனால் அவருக்கு இந்த விலை இறக்கத்தின்போது லாபம் பார்ப்பது சாத்தியம் ஆனது. கையில் சரக்கு இல்லாத ஒருவருக்கு அது சாத்தியமா என்று கேட்கலாம். கைதேர்ந்த வியாபாரிகளிடம் பேசிப் பாருங்கள். முதலில் ஆர்டரை வாங்கிவிட்டு, பிறகு பொருளை வாங்கி விற்பதால் லாபம் சம்பாதித்ததை அவர்கள் கதைகதையாகச் சொல்வார்கள். ஆனால், ஷேர் மார்க்கெட்டில் அது பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. காலையில் பங்குச் சந்தை துவங்கியவுடன் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பங்கு விலை ரூ.200-க்கு விற்பனையாகிறது. அதன் முதன்மை நிர்வாகி, அக்கவுன்ட்டிங் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பு பிற்பகலில் வெளியாகப் போகிறது. அந்தத் தீர்ப்பு கம்பெனிக்குப் பாதகமாக அமையும். அதனால் விலை குறையும் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்.

ஆனால், உங்கள் கையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் இல்லை. ஆனாலும் ரூ.200-க்கு 100 பங்குகளை விற்பதற்கு ஆர்டர் போட்டு அதுவும் நிறைவேறிவிடுகிறது. அன்றைய தினம் முடிவதற்குள், உங்களிடம் வாங்கியவருக்கு நீங்கள் 100 பங்குகளைத் தந்தாக வேண்டும். இந்த ஆர்டருக்குப் பெயர்தான் விற்று வாங்குவது (short sell).

கையில் இல்லாமலே விற்று முடித்த short sell ஆர்டரைத் திரும்ப வாங்குவதற்குப் பெயர் square off. அந்த ஆர்டரை ரூ.190-க்குப் போட்டு வைக்கிறீர்கள். அது சில மணி நேரங்களில் நிறைவேறுகிறது. ஒரு ஷேருக்கு 10 ரூபாய் லாபம். 100 ஷேருக்கு 1,000 ரூபாய் லாபம். 

தின வர்த்தகம் எனும் டே டிரேடிங் செய்யும் ஆட்கள் வாங்கி விற்பது, விற்று வாங்குவதுஎன இரண்டையுமே கையாள்வார்கள். அன்றைய நாளின் சூழ்நிலைக்கேற்ப, குறிப்பிட்ட நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் அல்லது நிகழ்வு களுக்கேற்ப அவர்கள் தமது செய்கையைத் தீர்மானிப்பார்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்!


எனினும் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பங்குகளை வாங்கித்தான் விற்க வேண்டும் என்றோ அல்லது விற்றுத்தான் வாங்கவேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் கிடையாது. பல பேர் வாங்கி விற்றால், சிலர் விற்று வாங்குவார்கள். வாங்கி விற்கிறவர்கள் எல்லோரும் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறார்கள் என நினைத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல, விற்று வாங்குகிறவர்கள் எல்லோரும் அதிக விலைக்கு விற்று, பின்னர் குறைவான விலைக்கு வாங்கி பணம் பார்க்கிறார்கள் என்றும் கிடையாது. வாங்கியபின் வாங்கிய விலையைக் காட்டிலும் குறைவாக விற்க நேரிடுவதும், விற்ற விலையைவிட அதிக விலைக்கு வாங்கி நேர் செய்வதும் நிறைய நடக்கும்.

தினம் வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்கிறவர் களைவிட நஷ்டம் ஈட்டுகிறவர்களே, அதிகமாக இருப்பார்கள். இந்தத் தின வர்த்தகத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஒரு அனுகூலம், ஆயிரம் ரூபாய் ஷேரை வாங்குவதற்கு ஆயிரம் ரூபாயும் நம் கையில் இருக்க வேண்டியதில்லை என்பதே. அதேபோல ஆயிரம் ரூபாய் ஷேரை விற்பதற்கு அந்த ஷேரோ அல்லது ஆயிரம் ரூபாய் பணமோ நம்மிடம் இருக்க வேண்டியதில்லை. சென்ற வாரமே பார்த்தோமே, 100 ரூபாய் மதிப்புள்ள ஷேரை 30 ரூபாய் கொடுத்து வாங்கலாம் என்று. இதற்குப் பெயர்தான் மார்ஜின்.

இது பற்றி எல்லாம் பிறகு பார்ப்போம். ஏனெனில் நம் நோக்கம், பங்குச் சந்தை முதலீட்டின் அடிப்படை அம்சங்களையும், சூட்சமங்களையும் புரிந்துகொள்வதுதான்.

 டிரேடிங் என்பது அடிப்படையில் வியாபாரம். பொருளை வாங்கி விற்கும் மனோபாவம் கொண்டவர்களே அவர்கள். குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதை நோக்கமாகவும், அதை ஒரு கலையாகவும் நினைத்து இயங்குகிறவர்கள். டிரேடிங் ஒரு கலை. அதனை அறிவியல் என்று சொல்வோரும் உண்டு. ஆனால், நம்மைப் பொருத்தமட்டில் டிரேடிங் ஒரு அவுட் ஆஃப் சிலபஸ் சப்ஜெக்ட். எனவே, அது பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டாம்.
 
டிரேடர்கள் நாம் வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு வாங்க ஆள் வருவார்களா எனப் பார்ப்பார்கள். செடி மரமாகி, மரம் தரும் பழத்தை சாப்பிடுவதற்கெல்லாம் அவர்களுக்குப்  பொறுமை இருக்காது. அவர்களது நோக்கம் வாங்கிய ஷேரை விற்பதுதான்; வைத்திருப்பது கிடையாது. அதற்கு நேர்மாறாக முதலீட்டாளர்களது மனநிலை ஒரு ஷேரை வாங்கி அதனை நீண்ட காலம் வைத்திருக்கும் நோக்கிலே இருக்கும்.

முதலீடு என்பது நீண்ட பயணம். டிரேடிங் போல அது ஒரு நிகழ்வன்று. சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் செல்வதைப் போன்றது. அப்படியான பயணத்தில் நாம் எல்லாவற்றையும் கடந்து வருவோம். சுங்கச் சாவடி, போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் போடுவது, இடையில் உணவுக்காக நிற்பது, நெரிசலற்ற பகுதிகளில் பெரு வேகம், கார் பஞ்சர் ஆவது என என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நமது துவக்கப் புள்ளியும் இறுதியில் அடையப் போகும் இலக்கும் முக்கியம். முதலீடு என்பது அப்படித்தான்.

சில திட்டமிடல்கள், சில முன்னெச்சரிக்கைகள், சில தெளிவுகள், சில தெரிவுகள், சில புரிதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே முதலீடு. பெர்சனல் ஃபைனான்ஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், தனி நபர் ஒழுக்கத்தின் வெளிப்பாடாகவும் அது இருக்கப் போகிறதென்ற தெளிவோடு.

(ஜெயிப்போம்)