
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ பி.ராஜ்குமார்,
‘‘மாதம் 10,000 ரூபாயை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். குறைந்தபட்ச ரிஸ்க் உடைய ஃபண்டுகளே எனக்கு வேண்டும். காரணம், ஐந்து ஆண்டுகள் கழித்து வீடு் கட்ட எனக்கு அந்தப் பணம் வேண்டும். எனவே, எனக்குப் பலன் தரும் ஃபண்டுகளைச் சொல்லுங்கள்.
‘‘நீங்கள் செய்யும் முதலீட்டில் எந்தவிதமான ரிஸ்க்கும் இருக்கக்கூடாது என்றால், உங்களின் மாதாந்திர முதலீட்டை கோட்டக் லோ டியூரேஷன் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ புரூ சேவிங்ஸ் ஃபண்டில் செய்துகொள்ளுங்கள். சற்று ரிஸ்க்குடன் கூடிய டாக்ஸ் ஃப்ரீ வருமானம் வேண்டுமென்றால், உங்களின் முதலீட்டை ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஈக்விட்டி இன்கம் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். பின் குறிப்பிட்ட இரண்டு ஃபண்டுகளும் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 30% பங்கு சார்ந்த முதலீட்டை வைத்திருக்கும்.’’
@ இ.எ.பார்த்தசாரதி.

‘‘என் வயது 31. நான் பங்கு சார்ந்த திட்டங்களில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்து வருகிறேன். இப்போது என்னிடம் இருக்கும் ரூ.1 லட்சத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடிய மாதிரி எந்த ஃபண்டில் போட்டு வைக்கலாம். மூன்றாண்டு டெபாசிட்டுக்கு மாற்றாக எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்?’’
‘‘தாங்கள் இளம் வயதிலேயே வளர்ச்சி தரக்கூடிய முதலீடான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி ஆரம்பித்துள்ளது குறித்து மகிழ்ச்சி. அவசரத் தேவைகளுக்காக அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள். ரூ.1 லட்சத்தை நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது கோட்டக் லோ டியூரேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம்.
உங்களுக்கு மூன்று வருடம் தேவையில்லாத பணத்தை, சற்று அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். சற்றுக் குறைவான ரிஸ்க் மற்றும் வருமானம் வேண்டுமென்றால் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’
என். விஜயன், கள்ளக்குறிச்சி.
‘‘நான் ஓர் அரசு ஊழியர். என் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம். எனக்கு இப்போது 30 வயதாகிறது. என் மனைவி இல்லத்தரசி. மூன்று வயதில் எனக்கு ஒரு மகள் இருக்கிறார். 55 வயதில் நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இப்போது என் குடும்பச் செலவு மாதம் ரூ.25,000. 55 வயதுக்குப்பின் இப்போதிருக்கிற மாதிரியான என் தொகுப்பு நிதியில் (Corpus) எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பது என் முதல் கேள்வி. ஏற்கெனவே நான் ஐந்து ஃபண்டுகளில் (கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், எஸ்.பி.ஐ. புளூசிப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இண்டியா ஹை குரோத் கம்பெனீஸ், மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ், டி.எஸ்.பி பிளாக்ராக் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட்) எஸ்.ஐ.பி முறையில் மாதமொன்றுக்கு ரூ.3,000 வீதம் முதலீடு செய்து வருகிறேன். இன்னும் 10,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் சேமிக்க விரும்புகிறேன். இதற்கான ஃபண்டுகளைச் சொல்லுங்கள்.
‘‘தற்போது உங்களின் குடும்பச் செலவு ரூ.25,000 என்றால், உங்களின் 55-வது வயதில் ஆண்டுக்கு 6% பணவீக்கத்துடன், தங்களுக்குத் தேவைப்படும் தொகை சுமார் ரூ.1,07,000 ஆகும். உங்களின் வாழ்வுக் காலம் 85 வயது வரை என்று எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, நீங்கள் 55-வது வயதில் சேர்த்திருக்க வேண்டிய கார்ப்பஸ் ரூ.3.35 கோடியாகும். அதற்கு நீங்கள் மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.21,000 ஆகும்.
நீங்கள் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய 6,000 ரூபாயைச் சரிபாதியாகப் பிரித்து கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டிலும், மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்களால் முதலீடு செய்ய முடியும் மற்றுமொரு 4,000 ரூபாயை உங்களின் குழந்தையின் தேவைக்காக பிரின்சிபல் குரோத் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.’’
