மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஏற்றுமதி / இறக்குமதித் தொழிலில் சிறந்து விளங்க என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும், ஏற்றுமதி செய்வதற்கு நம் நாட்டில் என்னென்ன நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று முன்பே கூறியிருக்கிறேன். எந்தப் பொருளெல்லாம் ஏற்றுமதி செய்யக்கூடாது, எந்தப் பொருளுக்கெல்லாம் உரிமம் பெற வேண்டும் எனப் பல விஷயங்களைப் பார்த்தோம்.

அதுபோலவே, இறக்குமதி செய்வதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் அது தொடர்பான நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் செயல்படுத்தப்படும். ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் அவற்றைப் பற்றி ஓரளவேனும் தெரிந்திருப்பது அவசியம். அப்போதுதான் தடங்கல்கள், சிக்கல்கள் இல்லாமல் வெற்றிகரமாக ஏற்றுமதித் தொழிலைச் செய்ய முடியும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் தேவையைப் பொறுத்து, சூழலைப் பொறுத்து அவற்றின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் மாறுபடுகின்றன. ஒரு நாடு, பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் ஈடுபட சில கொள்கைகளை வைத்திருக்கும். அந்தக் கொள்கைகளின்படி மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கும். எப்படி ஏற்றுமதி செய்வதைத் தீர்மானிக்க உள்நாட்டுத் தேவை, பற்றாக்குறை, மிக முக்கியமான வளங்கள் ஆகியவை காரணிகளாக உள்ளனவோ, அதைப் போல இறக்குமதி செய்வதற்கும் தேவை, முடிந்தமட்டும் சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிடுவது போன்றவை காரணிகளாக உள்ளன. தேவைப்படுகிற பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய, தேவைப்படாத பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பதும் இவற்றின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்!

எனவே, நீங்கள் எந்த நாட்டுக்குப் பொருளை ஏற்றுமதி செய்வதாக இருந்தாலும் அந்த நாட்டைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நாட்டுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் பொருள்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டுக்குப் பொருளை ஏற்றுமதி செய்வதற்குமுன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரி ஆகிய மூன்று விஷயங்கள்தான். உதாரணமாக, அரிசிக்கு என்னென்ன விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை இங்கே ஒரு உதாரணமாகப் பார்க்கலாம்.

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்குமுன் ‘ஸ்டாக்பைல்’ (stockpile) பற்றிக் கேளுங்கள். ‘ஸ்டாக்பைல்’ என்பது திடீர் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்தப் படுவதற்காகவும் விலை ஏற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் சேமித்து வைப்பதாகும். சிங்கப்பூர் அரசாங்கம்,அதன் ‘ஸ்டாக்பைல்’ அடிப்படையில்தான் அரிசி வர்த்தகத்தை அனுமதிக்கிறது. எனவே, இறக்குமதியாளர், அரிசி இறக்குமதி  செய்வதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

மலேசியா

மலேசியாவிலும் அரிசி இறக்குமதியைக் கண்காணிப்பதற்காக ‘பெர்னாஸ்’ என்ற கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புதான் மலேசியாவில் அரிசி உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்துகிறது. எனவே, இறக்குமதியாளர் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

புரூனே

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்!புரூனே நாட்டைப் பொறுத்தவரை, அந்த நாட்டு அரசு, ஒதுக்கீடு முறையில் மட்டுமே அரிசி இறக்குமதியை அனுமதிக்கிறது. எனவே, இறக்குமதியாளரிடம் அரசின் ஒதுக்கீடு முறையில் இறக்குமதி செய்ய ஒப்புதல் பெற்றிருக்கிறாரா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

இலங்கை

இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்கும். அதற்கான ஆணையை இலங்கை அரசு வெளியிடும். அதன்பிறகே அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய இயலும்.

அரபு நாடுகள்

அரபு நாடுகளைப் பொறுத்தவரை, ஆர்டரின் பேரில் ஏற்றுமதி செய்யலாம். அங்கு எந்தத் தடையும் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், பேக்கிங்மீது லேபிள் செய்யப்படும்போது அரபு மொழியிலும் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும்.
 
அமெரிக்கா


அமெரிக்கா, இறக்குமதியில் மிகவும் உஷாராகவே இருக்கும். உணவுப் பொருள்கள், மருந்துகள் இறக்குமதியில் மிகவும் கவனமாகச் செயல்படும். PQ (Plant Protection and Quarantine) என்ற சான்றிதழை ஏற்றுமதியாளர் பதிவு செய்து பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரிசி ஏற்றுமதி செய்ய முடியும். இதனை ‘பைத்தோ சானிட்டரி சான்றிதழ்’ (pythosanitary certificate) என்றும் குறிப்பிடுவார்கள்.
 
வியட்நாம், தாய்லாந்து

அரிசி ஏற்றுமதியில் வியட்நாம், தாய்லாந்து இரண்டு நாடுகளும் இந்தியாவுக்குப் போட்டி நாடுகள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இந்த இரண்டு நாடுகளிலிருந்து ஆர்டர் வந்தால், அது பெரும்பாலும் போலி ஆர்டர்களாகத்தான் இருக்கும். உஷாராக இருங்கள். அதேபோல் பிராண்டட் பொருள்களை ஏற்றுமதி செய்வதாக இருந்தால், அந்த நாடுகளில் ஏற்கெனவே விநியோகஸ்தர்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களால் ஏற்றுமதி செய்ய முடியும். ஏற்றுமதிக்குப் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான சான்றிதழ்கள் கேட்கப் படுகின்றன. என்னென்ன சான்றிதழ்கள் என்பதைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மாறுபடும். எனவே, நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகும் பொருள்களுக்கு உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரி உள்ளிட்டவற்றை உங்களுடைய இறக்குமதியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்!

(ஜெயிப்போம்)