
வி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், Money Avenues
இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாது சாமானியருக்கும் தெரிந்த ஒரு தொழில் நிறுவனம் ஒன்று இருக்குமேயானால் அது ரிலையன்ஸ் நிறுவனமாகத்தான் இருக்கும். சமீபத்தில், அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு (Market Capitalization) ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியது.
1977-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ். ஆனால், சென்றாண்டு வரையில், தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரு தேக்கநிலையிலேயே இருந்து வந்தது. இதனால் அடுத்த தலைமுறை ஐ.டி நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கடந்து சென்றது. உதாரணமாக, டி.சி.எஸ் நிறுவனம் மூன்றாண்டுகளுக்கு முன்பே ரூ.5 கோடி அளவிலான சந்தை மதிப்பைத் தொட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கோர் பிசினஸ்’, அதாவது முக்கியத் தொழில்கள் என வழங்கப்படும் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆகியவைகளில் போதிய அளவு வளர்ச்சி, கடந்த காலங்களில் இல்லாதது ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் மந்தநிலைக்கு ஒரு முக்கியக் காரணம்.
இடைப்பட்ட காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கில் முதலீடு செய்தவர்களில் பலர், அந்த நிறுவனத்தின் போக்கில் கடும் அதிருப்தி அடைந்து பங்குகளை விற்றார்கள். ஆனால், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்னும் சேவை மூலம் தொலைத் தொடர்புத் துறையில் கால் பதித்தது, அந்த நிறுவனத்துக்கு ஒரு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சேவையின் மூலமாக 10 கோடி சந்தாதாரர்களுக்கு மேல் குறைந்த காலத்திலேயே பெற்றுள்ளது ஒரு பெரிய சாதனைதான். இதன் காரணமாகவே கடந்த ஆறு மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலை 50 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்தது. இது கடந்த பல ஆண்டுகளாக இல்லாத ஒரு நிகழ்வு.

ரிலையன்ஸ் பங்கில் முதலீடு செய்தவர்கள் கடந்த ஆண்டுகளில் அவசரமாக விற்காமல் பொறுமையாக இருந்திருப்பார்களேயானால் அவர்களின் பொறுமைக்குப் பரிசாக, சரியான பலனைக் கடந்த ஆறு மாதங்களில் பெற்று இருப்பார்கள். இதுபோன்ற ஒரு அசாதாரணமான ஏற்றத்துக்குப்பிறகு ரிலையன்ஸ் பங்கின் விலை, இனிவரும் காலத்தில் இன்னும் உயருமா என்பதே பல முதலீட்டாளர்களின் கேள்வி.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்த நிறுவனம் தனது தொழில்களில் செய்துள்ள முதலீடுகள் முழுமை பெற்று, அதன் காரணமாக நிறுவனத்தின் வருவாயும் லாபமும் கூடுவதற்கான சூழல் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஜியோ சேவையின் முதலீடுகளும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ‘பிரேக் ஈவன்’ நிலையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஏற்பட்டால் முக்கியத் துறைகளில் வரும் வருவாயும் லாபமும் நிறுவனத்துக்கு நல்ல வலுசேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கும் ஆர்.ஓ.ஜி.சி (ROGC) என வழங்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு சார்ந்த திட்டத்தின் மூலமாக, அந்த நிறுவனத்தின் வருவாயும் லாபமும், வரும் ஆண்டு களில் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கிட்டத்தட்ட ரூ.15 ஆயிரம் கோடிக்கு சற்றுக் குறைவாக இருந்தது. வரும் நிதியாண்டுகளில் செயல்பாட்டு லாபம், நல்ல வளர்ச்சியை எட்டும் என்று பல்வேறு ஆய்வறிக் கைகள் தெரிவிக்கின்றன.
இந்தக் காரணங்களால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் நல்லதொரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.