
கேள்வி பதில்

நான் ஒரு மூத்த குடிமகன். ஓய்வூதியம், ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், 2016-17-ல் குறுகிய கால மூலதன ஆதாயமாக ரூ.1.5 லட்சம் என மொத்தமாக ரூ.4.5 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கு நான் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டுமா?

க.சிவராமன், நெல்லை
ஜி.வி.ரவிக்குமார், ஆடிட்டர்
“வரி செலுத்துபவர் 80 வயதுக்கு உட்பட்டவர் எனில், குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு 15% வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், உங்கள் ஓய்வூதிய வருமானமான ரூ.3 லட்சம், வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.3 லட்சத்துக்குள் இருப்பதால் அதற்கு வரி விலக்கு உண்டு.”
ஆன்லைனில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது ஒருவருக்கு ITR-V படிவத்தில் கையெழுத்திட்டு, CPU-பெங்களூரு வருமான வரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இன்னொருவருக்கு அதுமாதிரி எதுவும் இல்லையே?
கிருஷ்ணமூர்த்தி வெங்கடராமன், சென்னை
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை
“ஆன்லைனில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது டிஜிட்டல் கையெழுத்தினைப் (Digital Signature Certificate - DSC) பயன்படுத்தி ரிட்டர்ன் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால், அத்தகைய நபர்கள் ITR-V கையொப்பமிட்டு அனுப்ப வேண்டியதில்லை. இல்லாவிட்டால் கையொப்பமிட்டு CPU - பெங்களூரு அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு வங்கி (நெட் பேங்கிங்) கணக்கு முறையில் (e-Verify) சமர்ப்பிக்கலாம்.”
போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவையின் (PMS) மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினேஷ், நாகர்கோவில்
பா.பத்மநாபன், நிதி ஆலோசகர்
“Portfolio Management Service (PMS) என்பதைத்தான் பி.எம்.எஸ். என்று குறிப்பிடுகிறோம். இதில் குறைந்தது ரூ.25 லட்சமாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீட்டாளரின் பெயரில் டீமேட் கணக்கு தொடங்கப்பட்டு அதில் முதலீடு மேற்கொள்ளப்படும். அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு மேற்கொண்டு வருகிறவர்கள், இன்னும் கொஞ்சம் வெரைட்டியாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பி.எம்.எஸ் சேவையைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
ரூ.30 லட்சம், ரூ.40 லட்சத்துக்குப் பங்குகளை வாங்கிப் போட்டுவிட்டு, அந்தப் பங்குகளைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு பி.எம்.எஸ் நிச்சயம் உதவும். பி.எம்.எஸ்.-ல் முதலீடு மேற்கொள்ள ரூ.25 லட்சம் பணமாக மட்டுமே தரவேண்டும் என்பதில்லை. உங்களுடைய பழைய பங்குகளைக் கொடுத்தும் அல்லது பழைய பங்குகளுடன் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்தும் முதலீட்டினை மேற்கொள்ளலாம். முதலீட்டுடன் வரக்கூடிய டிவிடெண்ட் அனைத்தும் முதலீட்டாளர்களையே சேரும்.
இப்போது மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் புரோக்கிங் நிறுவனங்கள் எனப் பலர் பி.எம்.எஸ் சேவையை வழங்கி வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்ளும்போது என்ன பங்குகளை வாங்குகிறார்கள் என்பது குறித்த எந்த ஒரு விவரமும் தெரியாது. ஆனால், பி.எம்.எஸ்-ல் என்ன பங்குகளை வாங்குகிறார்கள், விற்கிறார்கள் உள்பட அனைத்து விவரங்களும் முதலீட்டாளருக்குத் தெரியும். இதில் அதிகமாக வர்த்தகம் மேற்கொள்ள மாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் 40-லிருந்து 60 நிறுவனப் பங்குகள் இருக்கும். பி.எம்.எஸ்-ல் அதிகபட்சமாக 15 முதல் 20 வரை பங்குகளை வைத்திருப்பார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்வதில் கட்டுப்பாடு உள்ளது. ஆனால், இதில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பி.எம்.எஸ். போர்ட்ஃபோலியோவில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது ஒரு நிறுவனத்தின் பங்குகளை 20 - 25% வரைகூட வைத்திருக்கலாம். அப்படி செய்யும்போது அதிக வருமானமும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்குப் பிடிக்காத பங்குகள் ஏதேனும் இருந்தால், அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பி.எம்.எஸ்-ல் குறிப்பிட்டுச் சொல்லலாம். ரூ. 25 லட்சம் முதலீடு செய்துவிட்டு, கிடைக்கும் வருமானத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்துக்குள் பணத்தைத் திரும்ப எடுத்தால் 15% வரி செலுத்த வேண்டும்.”
தொகுப்பு : சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.