
கா.முத்துசூரியா
பெண்களுக்குப் பால் கணக்கை எழுதி வைப்பதைத் தாண்டி வேறு பெரிய அளவிலான கணக்கு வழக்குகளெல்லாம் புரியாது என நீங்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருந்தால், அது தவறு.
எதிர்காலத் நிதித் திட்டமிடல் பற்றி பல ஆண்களே கவலைப்படாத நிலையில், “என் குடும்பத்துக்கான நிதித் திட்டமிடலைச் சொல்லுங்கள்” எனக் கேட்டு மெயில் அனுப்பிய கோவையைச் சேர்ந்த பிரேமாவைப் பாராட்டுவோம். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தாலும், இருப்பதில் எதைச் சிக்கனமாகச் செலவு செய்தால் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளலாம் என நம்பிக்கையுடன் கேள்வி எழுப்புகிறார் பிரேமா.

“நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். எனக்கு 37 வயது. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம். என் கணவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு 45 வயது. என் மகன் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.25,000 செமஸ்டர் பீஸ் செலுத்தி வருகிறோம். என் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கட்டணம் ரூ.10,000 செலுத்தி வருகிறோம்.
நாங்கள் தற்போது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, சொந்தமாக வீடு ஒன்றினை ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கியுள் ளோம். 20 ஆண்டுகள் இ.எம்.ஐ அடிப்படையில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளதால், இ.எம்.ஐ ரூ.15,380 செலுத்தி வருகிறேன்.
வீட்டு வாடகை ரூ.5,000 வருகிறது. கிரெடிட் கார்டு கடன் ரூ.40,000 வாங்கியுள்ளேன். இன் னும் எட்டு மாதங்கள் செலுத்த வேண்டும். நகைக் கடன் ரூ.1,10,000 வாங்கியுள்ளேன். இன்னும் மூன்று மாதங்களில் முடிந்துவிடும். என் மகன் படித்து முடித்து வேலைக்குப் போனதும், அவனுடைய வருமானத்தைச் சேர்த்து அவன் திருமணத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் என் மகளின் திருமணத்துக்கு நகை 25 பவுன் சேர்க்க வேண்டும். மற்ற செலவு களுக்கு இன்றைய மதிப்பில் ரூ.5 லட்சம் தேவை.

என் அலுவலகத்தில் ரூ.4 லட்சத்துக்கான ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார்கள். பி.எஃப் மாதம் ரூ.1,800 (1,800 + 1,800) பிடித்து வருகிறார்கள். இதுவரை பி.எஃப்-ல் ரூ.35,000 உள்ளது. இரண்டு எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிகள் எடுத்துள்ளேன்.
வரவுக்கும், செலவுக்கும் தற்போது சரியாக இருப்பதே நிம்மதி. ஆனால், எதிர்காலத் தேவைகளை நினைக்கும்போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. செலவுகள் நெருக்கினாலும் அதையும் தாண்டி, எப்படி சேமிக்கலாம் எனச் சொன்னால் உதவியாக இருக்கும்” என்றவர், வரவு செலவு விவரங்களைப் பட்டியலிட்டார்.
மொத்த வருமானம்: ரூ.45,000

குடும்பச் செலவுகள்: ரூ.10,500
கிரெடிட் கார்டு கடன்: ரூ.3,000
நகைக் கடன்: ரூ.5,000
மகள் பள்ளிக் கட்டணம்: ரூ.3,800
மகன் கல்லூரிக் கட்டணம்: ரூ.4,200
இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.500
வீட்டுக் கடன் இ.எம்.ஐ: ரூ.15,380
எஸ்.ஐ.பி: ரூ.2,500 (இரண்டு ஃபண்டுகளில்)
மொத்தச் செலவுகள்: ரூ.44,880
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“ஓய்வுக் காலமா, சொந்த வீடா என்கிறபோது பலரும் செய்யும் தவறு சொந்த வீட்டைத் தேர்வு செய்வதுதான். பிரேமா... நீங்களும் அந்தத் தவறைத்தான் செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் நான்கு பேருக்கும் குடும்பச் செலவுகள் ரூ.10,500 ஆகிறது எனில், இரண்டு பேருக்கு ரூ.8,500 ஆகும். உங்கள் ஓய்வுக் காலத்துக்கு கணக்கிடும்போது ரூ.29,000 தேவையாக இருக்கும். அதற்கான கார்ப்பஸ் தொகையாக ரூ.88 லட்சம் தேவை. ஆனால், இன்றைய சூழலில் அதற்கான முதலீட்டைத் தொடங்குவது கஷ்டம்.
காரணம், நீங்கள் வீடு வாங்கியதால், பெரும் பகுதியான தொகை இ.எம்.ஐ செலுத்தவே போய்விடுகிறது. ரூ.15,380 இ.எம்.ஐ செலுத்து கிறீர்கள். ஆனால், வாடகை வருமானம் ரூ.5,000 மட்டுமே வருகிறது. வாடகை ஆண்டுக்கு 7% உயர்வு எனக் கணக்கிட்டாலும், உங்கள் ஓய்வுக் காலத்தின்போது ரூ.17,000 மட்டுமே கிடைக்கும்.
வீடு வாங்குவதைத் தவிர்த்து, அதற்கான இ.எம்.ஐ தொகையில் வாடகை வருமானம் ரூ.5,000 போக 10,300 ரூபாயை 10% வட்டி கிடைக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால்கூட, உங்கள் ஓய்வுக் காலத்தில் ரூ.78 லட்சம் கிடைக்கக்கூடும். முன் பணமாகச் செலுத்திய ரூ.5 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் 20 வருடங்களில் 33.65 லட்சம் கிடைக்கும். மொத்தம் ரூ.1.12 கோடிக்கு 6% வட்டி கிடைத்தால் கூட மாதம் ரூ.56,000 கிடைக்கும். இதனோடு பி.எஃப் தொகையையும் சேர்த்து வளமாக வாழலாமே. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அடுத்து என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
உங்கள் ஓய்வுக் காலத்துக்கு ரூ.88.7 லட்சம் சேர்க்க வேண்டுமானால், மாதம் ரூ.13,000 முதலீடு செய்ய வேண்டும். இப்போது செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீடு, பி.எஃப், கிரெடிட் கார்டு கடன், நகைக் கடன் எல்லாம் சேர்த்தாலே ரூ.14,100 மட்டுமே முதலீட்டுக்கான வாய்ப்பாக உள்ளது. அதற்கும் கடன்கள் முடிய வேண்டும். அடுத்து மகள் திருமணத்துக்கு 25 பவுன் நகை சேர்க்க, ரூ.5,40,000 தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.3,300 முதலீடு செய்ய வேண்டும். அடுத்த 10 வருடங்களில் திருமணச் செலவுகளுக்கு ரூ.9.85 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.4,800 முதலீடு செய்ய வேண்டும்.

மொத்தமாக, உங்களுக்கு முதலீட்டுக்கு மாதம் ரூ.21,100 தேவை. ஆனால், கடன்கள் முடிந்ததும் சில மாதங்களில் 14,100 மட்டுமே முதலீட்டுக்கான வாய்ப்பாக உள்ளது. மகன் படிப்பு முடிந்ததும் ரூ.4,200 மிச்சமாகும். அப்போதும், உங்கள் சம்பளம் அதிகரிக்கும்போதும், முதலீட்டைப் படிப்படியாக அதிகரிக்கலாம். உங்கள் கணவர் 60 வயது வரை பணியாற்ற முடியும் எனில், ஓய்வுக் காலத்துக்கு ஓரளவு சேர்க்க வாய்ப்பாக இருக்கும்.
உங்களுக்கு இருக்கும் வீட்டுக் கடன் ரூ.25 லட்சம் அளவுக்காவது டேர்ம் இன்ஷூரன்ஸ் இருப்பது நல்லது. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் பெய்ட் அப் பாலிசிகளாக மாற்றிக்கொண்டு, அதற்குச் செலுத்திவரும் பிரீமியத்தை டேர்ம் இன்ஷூரன்ஸுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும். பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகைகளை அவசர கால நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
பரிந்துரை: பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.2,000, ரிலையன்ஸ் டாப் 200 - ரூ.1,000, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்ட் மிட்கேப் - ரூ.1,000, செல்வமகள் திட்டம் - ரூ.3,000, கூடுதலாக பி.எஃப் - ரூ.1,000.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878
-கா.முத்துசூரியா
