
BIZ பாக்ஸ்
பங்குச் சந்தையில் அதிகரிக்கும் எல்.ஐ.சி முதலீடு!
இந்தியாவின் மிகப் பெரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை இந்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என்கிறார்கள். எல்.ஐ.சி, இதுவரை ரூ.3.5 லட்சம் கோடியைப் பங்குகளிலும், பாண்டு களிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியை பிரிமீயமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி-யை நம்பி நாமும் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடலாம்போல!

மோடியால் அதிகரித்த ரேடியோ வருமானம்!
அகில இந்திய வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். பிரதமர் பேசும் நிகழ்ச்சி இது என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் தருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக மட்டும் அகில இந்திய வானொலி, கடந்த நிதியாண்டில் ரூ.5.19 கோடியை ஈட்டியிருக்கிறது. 2015-16-ம் நிதியாண்டில் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ.4.78 கோடி மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம், 10 விநாடிகளுக்கு ரூ.2 லட்சம் . பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டபின் இதுவரை 33 முறை இந்த நிகழ்ச்சியில், நாட்டு மக்களுடன் உரையாற்றி இருக்கிறாராம் பிரதமர். மோடிஜி, டி.வி-யிலயும் அடிக்கடி வந்து பேசுங்க!

ரன்பீர் கபூர் மற்றும் கத்ரீனா கைஃபை வைத்து இந்தியில் ஒரு மெகா பட்ஜெட் படத்தை எடுத்தது வால்ட் டிஸ்னி. இந்தப் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் ரூ.37 கோடி மட்டுமே. ஆனால், இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.110 கோடி. கடந்த ஆண்டில் வெளியான அமீர்கானின் டங்கல் ரூ.75 கோடியில் உருவானது. ஆனால், முதல் நான்கு நாள்களில் ரூ.387 கோடியை அள்ளித் தந்தது. சினிமா தயாரிப்புனாலே ரிஸ்க்குதானே..?

ரவியின் ஃபைனான்ஷியல் த்ரில்லர்!
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருக்கிறார் ரவி சுப்பிரமணியன். இவர் எழுதிய ‘இன் த நேம் ஆஃப் காட்’ என்கிற நாவல்தான் எழுத்துலகின் சமீபத்திய பரபரப்பு. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் வரலாற்றைக் கற்பனை கலந்து கலக்கியிருக்கிறார் ரவி. வங்கித் துறையில் பல ஆண்டு கால அனுபவம்கொண்ட இவர், ‘த இன்கிரிடபிள் பேங்கர்’, ‘த பேங்ஸ்டர்’ என்கிற நாவல்களையும் எழுதியிருக்கிறார். ‘வங்கித் துறையின் ஜான் கிரிஷம்’ என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையால் புகழப்பட்ட ரவி, வங்கிகளைப் பின்புலமாக வைத்து இன்னும் நிறைய எழுதும் ஆவலில் இருக்கிறார்.
16,700 கோடி ரூபாய் - விவசாய இன்ஷூரன்ஸ் மூலம் 11 பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கடந்த 2016-17-ல் சம்பாதித்த லாபம்! இவங்க காட்ல ம்ழைதான்!

ஜி.எஸ்.டி: உற்சாகமாகப் பதிவு செய்யும் வணிகர்கள்!
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான அதன் நெட்வொர்க்கில் பதிவு செய்துவரும் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகச் சொல்லியிருக்கிறார் இந்த நெட்வொர்க்கின் தலைவர் நவீன் குமார். ‘‘இதுவரை சுமார் 80 லட்சம் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.என்-ல் பதிவு செய்துள்ளன. அடுத்த மாதத்தில் இது 90 லட்சமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக’’ சொல்லியிருக்கிறார் அவர். அடுத்த சில ஆண்டுகளில் இதில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் இரண்டு கோடியாக இருக்கும் என்கிறார்கள். அப்ப, வரி வருமானமும் அதிகமாகுமா ஆபீஸர்?
வங்கிகள் மூடல்: வாட்ஸ் அப்-பில் பரவிய வதந்தி!
இந்தியாவின் ஒன்பது முக்கிய வங்கிகள் மூடப்படவிருப்பதாக வாட்ஸ் அப்-பில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க பலரும் அதிர்ந்துபோனார்கள். இந்த வங்கிகளில் உள்ள பணத்தைத் திரும்ப எடுக்கத் தயாரானார்கள். இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகமும், மத்திய ரிசர்வ் வங்கியும் சொல்லி இருக்கின்றன. இந்த வங்கிகள் ‘ப்ராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன்’ (PCA) நடவடிக்கையின் கீழ் தற்போது உள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ் இருந்தாலும், இந்த வங்கிகள் தங்களது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அவை சொல்லியிருக்கின்றன. வாட்ஸ் அப்-பில் வரும் தகவல்களை எல்லாம் ஃபார்வர்ட் செய்யாதீங்க மக்களே!