நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

ந்திய பங்குச் சந்தை, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து புதிய உச்சங்களைச்  சந்தித்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை, இதற்குமுன் இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் அடையாத உச்சங்களாகவே இருக்கின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய பங்குச் சந்தையின் கை ஓங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

சந்தை இப்படி உச்சத்தில் இருக்கும் நிலையில், முதலீட்டாளர்களிடையே ஒருவிதமான பயமும் ஏற்படவே செய்கிறது. சந்தை எப்போது வேண்டுமானாலும் இறங்கிவிடுமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம்.

சந்தை ஏறக்குறைய உச்சத்தில் இருக்கும் நிலையில், இப்போதிருக்கும் ஏற்றம் தொடருமா அல்லது சரியுமா, ஏற்றம் தொடரும்பட்சத்தில் கவனிக்க வேண்டிய துறைகளும், அந்தத் துறை சார்ந்த பங்குகளும் என்னென்ன என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணரும் கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவருமான ரெஜி தாமஸிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

  மேலும் ஏற்றமடையும்

``நடப்பு 2017-ம் ஆண்டில், இதுவரையில் 18% அளவுக்குச் சந்தை உயர்ந்திருக்கிறது. சந்தைக்குச் சாதகமான காரணிகள் இருப்பதால்தான் இந்த ஏற்றம் சாத்தியமாகி இருக்கிறது. மேலும், எலியட்ஸ் வேவ் தியரியின்படி பார்க்கும்போது, சந்தையின் நகர்வுகளானது மேலும் ஏற்றமடைவதற்கான பேட்டர்ன்களையே பார்க்க முடிகிறது.

  எலியட்ஸ் வேவ் என்றால்...?

எலியட்ஸ் வேவ் தியரி பற்றி முன்பே நான் கூறியிருக்கிறேன் என்றாலும், மீண்டும் இப்போது நினைவுபடுத்துகிறேன். இந்த எலியட்ஸ் வேவ் தியரி என்பது, பங்குச் சந்தையின் போக்கைக் கணிக்கும் முக்கியமான தியரிகளில் ஒன்று. கடல் அலைகள் சிறிதாக ஆரம்பித்து, பிறகு பெரிதாக எழும். பிறகு மீண்டும் சிறியதாகச் சுருங்கும். எலியட் என்பவர், கடல் அலையில் இப்படி ஓர் ஒழுங்கு இருப்பதைப் பார்த்து அதைச் சந்தையின் ஏற்ற இறக்கத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவில், அலைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் பங்குச் சந்தையின் நகர்வுகளைக் கணிக்க முடியும் என நிரூபித்தார்.

பல்வேறு டெக்னிக்கல் அனாலிஸ்ட்டுகள் எலியட்ஸ்ஸ் வேவ் தியரியைப் பயன்படுத்தி பங்குச் சந்தை மற்றும் நிறுவனப் பங்குகளின் விலைப் போக்கைக் கணிக்கிறார்கள். இந்த தியரியின்படி, பங்குச் சந்தையில் ஐந்து அலைகள் ஏற்ற ரிதத்திலும், அதைத் தொடர்ந்து மூன்று அலைகள் இறக்க ரிதத்திலும் நிகழ்ந்து  ஒரு முழுச் சுற்றை நிறைவுசெய்யும்.

  நிஃப்டியும் சென்செக்ஸும்

அப்படிப் பார்க்கும்போது இந்த எலியட்ஸ் வேவ் தியரிபடி, இந்திய பங்குச் சந்தையின் சமீபத்திய இறக்கமான 9448 என்ற நிலையிலிருந்து ஏற்ற அலைகள் உருவாகி வருகின்றன.

இந்தப் போக்கில் சந்தையானது, வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி வரையிலான காலத்தில் ஏற்றத்தின் அலைகள் நிஃப்டி 10292 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. சென்செக்ஸ் இதே காலத்தில் 34,000-35,000 வரை ஏற்றமடையலாம்.

முன்பு எலியட்ஸ் வேவ் தியரி பற்றி சொன்னபோது, தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்றாவது ஏற்ற அலையின் குறியீடு 36579 புள்ளிகளாக இருக்கிறது எனக் கூறியிருந்தோம். இந்த நிலையை சென்செக்ஸ் தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிதியாண்டுக்குள் (2017-18) இந்த நிலையை சென்செக்ஸ் அடைய வாய்ப்பிருக்கிறது.

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

  பிரகாசமான காரணிகள் 

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஏற்ற நிலைகள், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலானது. சிலருக்கு இந்த நிரூபிக்கப்பட்ட கொள்கைகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். சந்தையை ஏற்றத்தின் போக்கில் கொண்டு செல்வதற்கான காரணங்கள் அவர்களுக்கு
அவசியமாகின்றன. மேலும், இங்கு குறிப்பிட்டுள்ள ஏற்ற நிலைகளை உறுதி செய்ய, சந்தைக்குச் சாதகமான காரணிகள் அவசியம் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்திய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை, அடுத்து வரும் சில மாதங்களுக்கு ஏற்றத்துக்கான காரணிகள் பிரகாசமாகவே உள்ளன. அவை என்னென்ன என்பதையும் பார்ப்போம். 

  சிறப்பான லிக்விடிட்டி

லிக்விடிட்டி மிக முக்கியமான காரணி ஆகும். சர்வதேச அளவில் வளரும் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா இருக்கிறது. அதனால் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு மிகவும் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சமான ஃபோலியோக்கள், அதிகப்படியான முதலீடுகள் உள்ளன.

  கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம்

தற்போது நம் நாட்டில் பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் முதலீடுகள் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்திய பங்குச் சந்தையில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் மதிப்பு 8.25 பில்லியன் டாலரைத் தொட்டு, கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

  ஃபண்டில் குவியும் முதலீடு

மியூச்சுவல் ஃபண்டுகளில், ஜனவரி 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 39,726 கோடி ரூபாயும், பேலன்ஸ் ஃபண்டுகளில் 27,617 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டி ருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் வரலாறு காணாத முதலீடு வந்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் 70 சதவிகித முதலீடுகள் எஸ்.ஐ.பி மூலமாக வருகின்றன. இந்த முதலீடு திடீரென குறையப் போவதில்லை. சந்தைக்கு நெகட்டிவான போக்குக்கு வாய்ப்பில்லாத நிலையில், முதலீடுகள் தொடர்ந்து சந்தைக்குள் வருதால், சந்தையை ஏற்றத்துக்குக் கொண்டு செல்ல இந்தக் காரணமே போதும். 

எலியேட்ஸ் வேவ் தியரியின்படி, இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் உச்சத்தை அடைந்தபிறகு, `இறக்கம் வருமா’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தற்போது கணிக்கப்பட்டுள்ள 9448 - 10242 என்ற வரம்புக்குள் சில சிறு சிறு இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால், பெரிய இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, இறக்கம் ஏற்படும்போது முதலீடு செய்யலாம்.

உச்சத்தில் சந்தை... இன்னும் ஏறுமா? - எலியட்ஸ் வேவ் தியரியின்படி கணிக்கிறார் ரெஜி தாமஸ்

  கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்

சந்தையின் இந்த விரைவான ஏற்றத்தில் பெரும்பாலும் அனைத்துத் துறைப் பங்குகளுமே நன்கு ஏற்றம் கண்டிருக்கின்றன. இருந்தாலும் அவற்றின் நகர்வுகளில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. எஃப்.எம்.சி.ஜி, ஊடகத் துறைகள் நியூட்ர லாகவே இருக்கின்றன. இன்ஃப்ரா, ஐ.டி மற்றும் பார்மா ஆகிய துறைகள் மோசமாக உள்ளன. இவை தவிர, பிற துறைகள் பெரும்பாலும் ஏற்றத்தை அடையக்கூடும்” என்ற ரெஜி தாமஸ்,  கவனிக்க வேண்டிய துறைகளையும் பங்குகளையும் குறிப்பிட்டார்.

1. வேளாண் துறை: பருவமழை குறித்த எதிர்பார்ப்பு நன்றாக இருப்பதால், இந்தத் துறைக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.

கவனிக்க வேண்டிய பங்கு: எஸ்கார்ட்ஸ்.

2. ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிப் பாகங்கள்: பருவமழை எதிர்பார்ப்பும் ஜி.எஸ்.டி-யும் இந்தத் துறைக்குச் சாதகமாக இருக்கின்றன.

கவனிக்க வேண்டிய பங்குகள்: மாருதி, சியட், அப்போலோ டயர்ஸ், மதர்சன் சுமி 

3.  எஃப்.எம்.சி.ஜி – ஜி.எஸ்.டி-க்குமுன்,பின் என்ற நிலையில் இந்தத் துறை சற்று தாக்கத்துக்குள்ளாகி இருந்தா லும், விரைவில் இதிலிருந்து மீண்டுவர வாய்ப்பு உள்ளது.

கவனிக்க வேண்டிய பங்குகள்: ஐ.டி.சி,  ஹெச்.யூ.எல், டாபர்.

 4.  சிறு வங்கிகள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் துறை.

கவனிக்க வேண்டியவை: ஈக்விடாஸ், ஏயூ பேங்க், மணப்புரம்.

5.  பயணம், பொழுதுபோக்கு மற்றும் ஏவியேஷன்: 2020-க்குள் பயணம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சந்தை மதிப்பு 40 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும். எனவே, இது நீண்ட கால முதலீட்டுக்கானது. சிறு, சிறு விமான நிலையங்கள் திறக்கப்படுவதால், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து வளர்ச்சியடையும் என்று எதிர்பாக்கலாம். ஜி.எஸ்.டி-யும் இந்தத் துறைக்குச் சாதகமாக உள்ளது.

கவனிக்க வேண்டிய பங்குகள்: ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ.

6. ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்: ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியடைவதால், இந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

கவனிக்க வேண்டிய பங்குகள்: ஹெச்.பி.சி.எல், பி.பி.சி.எல்.

7. பார்மா – இந்தத் துறை சற்று அழுத்தத்தில் இருந்தாலும், சில பார்மா பங்குகள் சிறப்பாகச் செயலாற்றுகின்றன.

கவனிக்க வேண்டிய பங்கு: பயோகான்.

8. இன்ஃப்ரா – உட்கட்டமைப்புத் துறையிலும் சில நிறுவனங்கள் மட்டுமே சிறப்பாக உள்ளன.

கவனிக்க வேண்டிய பங்குகள்: எல் அண்ட் டி, வாபேக்

9. ஐ.டி – ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ஐ.டி துறை பங்குகளைக் கவனிக்கலாம்.

கவனிக்க வேண்டிய பங்குகள்: இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்.

10. ஹவுஸிங் ஃபைனான்ஸ் துறையில் கவனிக்க வேண்டிய பங்குகள்: க்ரஹ் ஃபைனான்ஸ், எல்.ஐ.சி ஹவுஸிங், ஹெச்.டி.எஃப்.சி.

- ஜெ.சரவணன்

படம் : பா.காளிமுத்து