
தி.ரா.அருள்ராஜன் கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
தங்கம்
கடந்த வாரம் நாம் சொன்னது போலவே, தங்கம் 28000 என்ற புள்ளியை வலிமையாக உடைத்து, தற்போது 28380 என்ற புள்ளியைத் தொட்டுத் தாண்ட முயற்சி செய்கிறது. இனி, தங்கம் தொடர்ந்து ஏறும்போது அடுத்தகட்டமாக 28470 என்ற அடுத்தகட்ட எல்லையை அடையலாம். இது ஒரு முக்கியத் தடைநிலையாக தற்போது உள்ளது. இதை உடைத்து ஏறும்போது, 28600 மற்றும் 28780 என்ற எல்லையை அடையலாம்.

இது ஒரு வலிமையான தடைநிலை ஆகும். இந்தப் புள்ளியைத் தொடும்போது ஒரு அரை வட்ட வடிவ உருவமைப்பு தோன்றலாம். இந்த உருவமைப்பின் விளிம்பான 28780 உடையும்போது மிகப் பெரிய ஏற்றம் நிகழலாம். அப்போது 28950 மற்றும் 29160 என்ற மிகப் பெரிய எல்லைகளைத் தொடலாம்.
தற்போதைய உடனடி ஆதரவு நிலை என்பது 28140-ல் உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டு இறங்கினால், இந்த புல்பேக் ரேலி முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் இறக்கம் நிகழ்ந்து படிப்படியாக இறங்கி, 28000 மற்றும் 27750 என்ற எல்லைகளை அடையலாம்.

வெள்ளி
கடந்த வாரம் நாம் சொன்னதுபோலவே, வெள்ளி, மேலே 37300 என்ற தடைநிலையை உடைத்து, 37979 என்ற எல்லையைத் தொட்டு நகர முயற்சி செய்கிறது. மேலும், தொடர் இறக்கத்தின் ஏற்றமான புல்ரேலி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. திங்கள், செவ்வாய் என்று வலிமையாக ஏற ஆரம்பித்த வெள்ளி, பின் அடுத்தடுத்த நாள்களில் ஒரு ஸ்பின்னிங் டாப்பை உருவாக்கி உள்ளது. எனவே, மெள்ள மெள்ள ஏற்றம் நிகழ்ந்தாலும், வலுவான ஏற்றமாக அது இல்லை. தற்போது 38000 என்ற எல்லையில் காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே வலுவான சண்டை நடக்கும் இடமாக உள்ளது.

இனி, 38000 என்ற தடை நிலையைத் தாண்டி ஏறும்போது, ஏற்றம் என்பது வலுவானதாக மாறி, 38350 மற்றும் 38825 என்ற எல்லைகளை அடையலாம். அதன்பின் 39350 என்பது மிக வலுவான தடை நிலை ஆகும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய், கடந்த ஒரு வாரமாகக் கீழே 2976-ஐ ஆதரவாகவும், மேலே 3084-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது. இது ஒரு டபுள் டாப் என்ற அமைப்பாகக்கூட மாறலாம். தற்போது 2970 என்ற எல்லையை உடைத்து இறங்கினால், 2860 வரை இறங்கலாம். மீண்டும் மேலே திரும்பினால், 3100-ல் வலிமையாகத் தடுக்கப்படலாம். அதை உடைத்தால் சந்தையானது காளைகள் கைக்கு மாறலாம்.

இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு, தற்போது தடைநிலையான 199-ஐ உடைத்து தொடர்ந்து ஏற முடியாமல் இறங்கி வருகிறது. இயற்கை எரிவாயு நகர்வதால், 5-6 புள்ளிகள் மேலோ அல்லது கீழோ நகர்கிறது. கீழே 192 என்பது முக்கிய ஆதரவு. வியாபாரிகள் இந்த எல்லைகளுக்கு அருகில் மட்டும் வியாபாரம் செய்வது நல்லது.

மென்தா ஆயில்
மென்தா ஆயில் தற்போது 965 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு ஏறிக்கொண்டு இருக்கிறது. உடைத்தால் ஏற்றம் முடிவுக்கு வரலாம். 985 என்பது வலிமையான தடைநிலையாகவும் மாறியுள்ளது. அதற்குமேல் புதிய ஏற்றம் நிகழலாம்.

காட்டன்
காட்டன், பெரிய இறக்கம் நிகழ்ந்தபின் ஒரு பலமான பாட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. எனவே, 19900 என்பது பலமான ஆதரவு எல்லையாக மாறி வருகிறது. மேலே 20500 உடைத்து ஏறினால், புதிய ஏற்றத்துக்குத் தயாராகலாம்.