நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!

நாகராஜன் சாந்தன், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் , SNPwealth.com

ந்தவொரு பெற்றோரும், தாங்கள் கஷ்டப்பட்டால்கூட பரவாயில்லை; தங்களது குழந்தைகள் பெரியவர்களான பிறகு கஷ்டப்படக்கூடாது என்றே நினைப்பார்கள். அதற்காக தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். ஏனென்றால், தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து, அவர்கள் பெரியவர்களானபிறகு நல்லதொரு வேலைக்குச் சென்று கை நிறையச் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருக்கும்!     

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!

அரசு வேலை அல்லது தனியார் நிறுவனத்தில் பெரிய வேலை, கை நிறைய சம்பளம் வாங்குவது எல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைக்கான போட்டியில் ஜெயித்து வருவதை விட ஒரு அரும்பெரும் சாதனையே செய்துவிட லாம். அது தவிர, ஐ.டி உள்பட அனைத்துத் துறைகளிலும் வேலை இழப்பு என்பது சகஜமாகி விட்டது. இதனால் குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை வேலையில் சேர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சொந்தத் தொழில் என்பதே  இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. சொந்தத் தொழிலில் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலம் கிடைக்கும் பலன் அனைத்தையும் நாமே அனுபவிக்க முடியும்.  யாருக்குக் கீழேயும் வேலை பார்க்காமல், நான்கு பேருக்கு வேலை கொடுக்கக்கூடிய நிலைமை சொந்தத் தொழிலில்தான் இருக்கிறது.  சொந்தத் தொழிலில் ஜெயிப்பதன் மூலம், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் பணத்தைச் சேர்க்க முடியும் என்பதற்கு இன்றைய நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படிப்பட்ட சொந்தத் தொழிலைச் செய்வதற்கு, இன்றைய இளைஞர்களைப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. காரணம், சொந்தத் தொழிலைத் தொடங்க, முதலீடு தேவை. இந்த முதலீட்டுக்கான தொகையைத் தங்கள் கையில் உள்ள பணத்தைத் தருவதற்குப் பல பெற்றோர்கள் விரும்புவதில்லை. காரணம், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டுச் சேர்த்த தொகையை, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்புவதில்லை.

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின்பு தொழில்முனைவோராக  ஆக விரும்பும்பட்சத்தில் அவர்கள் தொழில் தொடங்கத் தேவையான முதலீட்டினைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, உரிய நேரத்தில் அவர்களிடம் கொடுப்பதும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் குழந்தையின் மேற்படிப்புக்குத் திட்டமிட்டுச் சேர்ப்பது போல, எதிர்காலத்தில் மகன் அல்லது மகள் தொழில் தொடங்கத் தேவையான முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேர்த்துத் தருவதும்தான். இதற்கு எஸ்.ஐ.பி முறையின் மூலமான முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதந்தோறும் ரூ.500, ரூ.1,000 என்று 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் கணிசமான தொகையைச் சேர்க்க முடியும்.

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!



இந்த நோக்கத்துக்குத் தேவையான தொகையைச் சேர்க்க வேண்டும் எனில், குழந்தை பிறந்தது முதலே எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கிவிடுவது நல்லது. பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்து, அவர்கள் 30 வயதை அடையும் வரை முதலீட்டைத் தொடர வேண்டும்.

இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் அபாரமாக இருக்கும் என்பதற்கு அட்டவணை 1-ஐப் பார்த்தால் புரியும். எஸ்.ஐ.பி-யைவிட ஒரே நேரத்தில்  (Lumpsum) பணத்தை முதலீடு செய்கிறவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பவர்களுக்கு, அட்டவணை 2-ஐப் பார்த்தால் புரியும். (மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் கணிசமான லாபம் கிடைக்கும் என்றாலும், 12 சதவிகித  லாபம் என்பதன் அடிப்படை யில் இந்தக் கணக்குப் போடப்பட்டுள்ளது. 12 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கும்பட்சத்தில், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிட அதிகமான தொகை கிடைக்கும்)     

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்!

இந்த வகை முதலீடுகளைப் பெற்றோர்கள் அவர்களது பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோ ஆரம்பிக்கலாம். பிள்ளைகள் பெயரில் ஆரம்பிக்கும் முதலீடுகளுக்கு அவர்கள் 18  வயது அடையும் வரை பெற்றோர்கள் காப்பாளர்களாக இருப்பார்கள். அதன்பிறகு அந்த முதலீடானது பிள்ளையின் பெயருக்கு மாற்றப்படும்.

குழந்தைகள் படித்து முடித்துவிட்டு, நேராகச் சொந்தத் தொழிலில் இறங்குவதைவிட, சொந்தமாகச் செய்ய விரும்பும் தொழிலைச் செய்துவரும் வேறொரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை பார்த்து, அதில் உள்ள நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்ட பின் சொந்தத் தொழிலில் இறங்குவது நல்லது.

உங்கள் குழந்தை எதிர்காலத்தில் தொழிலதிபராக வரவேண்டும் என்று நினைக்கும்பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, குழந்தை பிறந்தவுடன் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குவது. இரண்டாவது, அந்த முதலீட்டை ஒரு தேர்ந்த நிதி ஆலோசகரின் உதவியுடன் செய்வது.

உங்கள் குழந்தைகள் தொழிலதிபராக வரவேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இல்லாமல் இருக்காது. இந்த ஆசையை நிஜமாக்கும் முதலீட்டை  நீங்கள் இன்றே தொடங்குங்கள்!