நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

மாபெரும் வெற்றிக்கு மகத்தான காரணிகள்!

மாபெரும் வெற்றிக்கு மகத்தான காரணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் வெற்றிக்கு மகத்தான காரணிகள்!

நாணயம் புக் செல்ஃப்

மாபெரும் வெற்றிக்கு மகத்தான காரணிகள்!

புத்தகத்தின் பெயர் : வாட் வொர்க்ஸ் (What Works)

ஆசிரியர்: ஹாமிஷ் மெக்ரே (Hamish McRae)

பதிப்பாளர் : HarperPress

லக அளவில் 20 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வெற்றியைக் குறித்து விரிவாகச் சொல்கிறது ஹாமிஷ் மெக்ரே என்பவர் எழுதிய ‘வாட் வொர்க்ஸ்’ என்னும் புத்தகம்.  

இந்தப் புத்தகத்தில் 20 நிறுவனங்கள், அந்த நிலையை எப்படி அடைந்தன என்பது குறித்த தனித்தனியாக ஆய்வுகள்  செய்து தரப்பட்டுள்ளன. பலதரப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆய்வு என்பதால், படிக்கும் அனைவருக்கும் அவரவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலுக்கேற்ப அவரவர்கேற்ற தகவல்களும் நுண்ணறிவும் கிடைக்கும். இந்தப் புத்தகம் தரும் பொதுவான பத்து கருத்துகளைப் பார்ப்போம்.

1. உலக அளவில் சிறந்த நிறுவனங்களைப் பற்றி ஆராயப் புறப்பட்டால், நம்பிக்கையோடு  செயல்படுகிறவர்களே ஜெயிக்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.  அவநம்பிக்கைக் கட்டாயம் தோற்கவே செய்கிறது. முன்னேற்றம் என்பது ஒரு நேர்கோட்டில் அமைவதில்லை. நிறைய ஏற்ற இறக்கங்கள் கொண்ட கோடு அது. அதனாலேயே முன்னேற்றத்துக்கு நம்பிக்கை மிக மிக அவசியம்.

2. ஐரிஷ் நாட்டின் பொருளாதாரம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை, லண்டன் நகரத்தில் நடக்கும் நிதி சார்ந்த சேவைகள் சந்தித்த வீழ்ச்சி போன்றவையே எவ்வளவு பெரிய நிறுவனங்கள் என்றாலும் அவை, வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதையும்,  அதிலிருந்து மீளத் தேவையான நம்பிக்கையின் அவசியத்தையும் உணர்த்துகிறது. தொடர் வெற்றியைவிட அவ்வப்போது ஏற்படும் சறுக்குதல்களே நிறையப் படிப்பினைகளை நமக்குத் தருகின்றன.

3. ஒரு விஷயத்தைத் தேவையான அளவுக்கு சிறப்பாக செய்தல் என்பதே போதுமானதாக இருக்கிறது. நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகளை நியாயமான லாபத்துக்கு விற்பதற்குத் தயாரித்தலே போதுமானதாக இருக்கிறது. இதைச் செய்வதை விட்டுவிட்டு்ப் பிரமாதப்படுத்துகிறேன் எனக் குறைந்த அளவிலான வள ஆதாரங்களை வீணடிப்பதற்குப் பதிலாக, அந்த வளத்தினை அதிகப் பொருள்கள் உற்பத்திக்குச் செலவிடுவதே சிறந்ததாக உள்ளது.

4. தலைசிறந்ததாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால், தலைசிறந்த நிறுவனமாகிவிட்டால் அங்கேயே நம்மைத் தொடர்ந்து நிற்பது ஒன்றும் சாமான்ய காரியம் இல்லை. உதாரணமாக, பல பேர் போட்டியிடும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டைப் பாருங்கள். எத்தனை லட்சம் பேருக்கு ஆசை. எத்தனை ஆயிரம் பேர் தயாராகிறார்கள். ஆனால், சில நூறு பேர்களே பங்கேற்கின்றனர். ஒரு சிலரே வெல்கின்றனர். பலரது உழைப்பு வீணாகி, ஒரு சிலர் மட்டுமே வெற்றியை அடைகின்றனர். உழைக்க, உழைக்க வெற்றிக்கான படிகள் உயர உயரப் போகிறது, இல்லையா?

5. பிரபலங்களின் வழிபாடு, விளையாட்டு வீரர்களின் சம்பாத்தியம், பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சம்பளம் போன்றவை  பல பேருடைய உழைப்புச் செலவில் அனுபவிக்கப் படுபவையே. நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறுவனங்கள் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் தார்மீகப் பொறுப்பை மறந்தால் என்னவாகும்? நம்பர் ஒன்னாக இருக்கும் வரை பிரச்னை ஏதுமில்லை.பயணிக்கும் பாதையில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கும்போது, அவை பூதாகரமாக மாறும் வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள். அதற்காக, அந்தச் சிறப்பான நிலையை நோக்கிப் பயணிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. சாதாரண நிலையில் பலரும் இருக்கின்றனர் என்பதை நினைவில்கொண்டே பயணிப்பது நல்லது.    

மாபெரும் வெற்றிக்கு மகத்தான காரணிகள்!

6.  நிறுவனமோ, நாடோ, அதில் தலைவர்களும் தலைமைகளும் கொண்டாடப்படுவதில் தவறேதும் இல்லை. ஆனால், சமுதாயத்தையும் அதன் செயல்பாட்டையும் கொண்டாடத் தவறாதீர்கள். என்னதான் தலைமை திட்டங்களைத் தீட்டிச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தாலும் அதைச் செயலாக்குவது சமுதாயமே (community). எனவே, சமுதாயத்தைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டாடுங்கள்.

7. சமுதாயமே முன்னேற்றத்துக்கான வேலைகளைச் செய்யும் என்றால், அரசாங்கங்கள் என்ன செய்யும்? நிச்சயமாக அரசாங்கமும் முன்னேற்றத்துக்கான வேலைகளைச் செய்யவே செய்யும். ‘1980-களில் அயர்லாந்தும், துபாயும் இருந்த நிலையைப் பாருங்கள்; இன்றைக்கு (சில சரிவுகள் இருப்பினும்) இருக்கும் நிலையைப் பாருங்கள்’ என்று அரசாங்கங்கள் கொண்டு வரக்கூடிய முன்னேற்றங்களுக்கான உதாரணங் களைக் காட்டுகிறார். அரசாங்கமோ, நிர்வாகமோ, திறமையானவர்களை இழுக்கும் காந்தமாக மாறவேண்டும்.

8. சிறந்த கல்வியாளர்கள் ஹார்வர்டு மற்றும் அமெரிக்க ஐவி லீக் பல்கலைக்கழகங்களை நோக்கியும், சிறந்த வங்கித் துறை நிபுணர்கள் லண்டன், நியூயார்க் அல்லது ஹாங்காங்கை நோக்கியும் (ஏன்  இன்னமும் ஷாங்காய் நோக்கிச் செல்வதில்லை என்று சிந்தியுங்கள்), சிறந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் அமெரிக்காவை நோக்கியும் பயணிப்பது ஏன்? ஒரே தெருவில் அத்தனை நகைக் கடையும், வட்டிக்கடையும், வங்கிகளும், டெய்லர்களும் இருப்பதைப்போன்று எங்கே இருப்பது சிறப்போ, அங்கு நோக்கியே அந்தத் துறையில் சிறந்தவர்கள் பயணிக்கிறார்கள். அதனாலேயே அரசாங் கங்களும் நிர்வாகங்களும் சிறந்தவர்களை இழுக்கும் காந்தமாக, ஒரு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிர்வாகமாகச் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்.

9. தோல்வியைச் சந்தியுங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்.  மாண்ட்ரீலில் நடந்த ஒலிம்பிக்ஸில் படுதோல்வியைச் சந்தித்த பின்னர் உருவானதுதான் ஆஸ்திரேலியன் ஸ்போர்ட்ஸ் எஜூகேஷன் சிஸ்டம். ஆப்பிரிக்காவில் டெலிபோன் லைன்களை நிறுவிப் பராமரிப்பதில் ஏற்பட்ட தோல்விதான், அங்கே மொபைல் போன் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியடைய காரணமாக இருந்தது.தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருங்கள். தொடர்ந்து தவறுகளையும் தவறாமல் செய்யுங்கள். ஏனென்றல் தவறுகளே நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கருவிகள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, கற்றுக்கொள்ள மறுத்தாலோ, அதற்கு மன்னிப்பே கிடையாது.

10. நன்றாக இருக்கும்போது, நாங்கள்  இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று பேசித் திரிந்தால்,  கெட்ட காலம் என்று ஒன்றுவரும்போது உங்களை மற்றவர்கள் கிழிகிழி என்று கிழித்துவிடு வார்கள். தோற்றால் எப்படி சுருங்கிப்போவீர்களோ, அதே அளவுக்கு ஜெயித்தாலும் அடங்கிப் போகக் கற்றுக்கொள்ளுங்கள். பல சமயங்களில் வண்டி அதிர்ஷ்டத்தில் ஓடுகிறது என்பதை உணரவும், ஒப்புக்கொள்ளவும் தேவையான பண்புகளைப் பெற்றுத் திகழுங்கள் என்கின்றார் ஆசிரியர்.

வெற்றி பெற்றவர்களும், பெறத் துடிக்கிறவர் களும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் டீம்