நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?

ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?

ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?

நாட்டையே கிறுகிறுக்க வைத்திருக்கும் ஜி.எஸ்.டி வரி, பெண்களை மட்டும் சும்மா விட்டுவிடுமா என்ன? இல்லத்தரசிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எல்லோரையும் ஒரு புரட்டுப் புரட்டியெடுத் திருக்கிறது இந்தப் புதிய வரி. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களில் இந்த வரியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஜி.எஸ்.டி-யினால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து சில பெண்களிடம் கருத்துக் கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது அழகுக்கலை நிபுணர் ராதாவை.         

ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?

‘‘இந்தப் புதிய வரியினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்தான். ஒரு ஃபேஸ்வாஷ் க்ரீமின் எம்.ஆர்.பி விலை 100 ரூபாயாக இருந்தால், 8% ஜி.எஸ்.டி வரி சேர்ந்து 108 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் எங்களைப் போன்ற பியூட்டி பார்லர் மற்றும் கடை வைத்திருப்பவர்களுக்கு இழப்புதான்.

மும்பை, மலேசியா போன்ற இடங்களிலிருந்து அழகு சாதனப் பொருள்களை இறக்குமதி செய்யும்போது, அதற்கான ரசீதைத் தர மறுக்கிறார்கள். ரசீதைத் தந்தால், ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்கிறார்கள். அதையும் மீறிக் கேட்டால், சரக்குகளை அனுப்பாமல் பின்வாங்குகிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், பார்லருக்கு வரும் கஸ்டமர்கள், வேக்ஸிங், த்ரெட்டிங், ஃபேஷியல் போன்றவற்றுக்கான கட்டணத்தைக் கேட்டுப் பின்வாங்குகிறார்கள். ஜி.எஸ்.டி-க்கு முன்பெல்லாம் பத்து நிமிடங்களுக்கு ஒரு கஸ்டமர் வருவார். இப்போது ஒரு மணி நேரமானாலும் ஒரு வாடிக்கையாளர் வருவது அபூர்வமாகியிருக்கிறது.

நான் சமீபத்தில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றேன். அங்கிருந்த பார்லருக்குச் சென்று, ‘‘பெடிக்கியூர் செய்துகொள்ள எவ்வளவு ஆகும்’’ என விசாரித்தேன். ‘‘பெடிக்கியூர் செய்துகொள்ள ரூ.550. அதற்கு ஜி.எஸ்.டி வரி சேர்த்தால் ரூ.680’’ என்றார்கள். இது சுமார் 24% அதிகம். பார்லரை மாலில் வைத்திருப்பதால், அந்தக் கடைக்கான வாடகை, மின்சாரச் செலவு, பார்க்கிங் போன்றவற்றையும் ஜி.எஸ்.டி-யோடு வசூலிக்கிறார்கள். இப்படித்தான் துணிகளுக்கான ஷோரூம், பார்லர்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் ஜி.எஸ்.டி-யால் பெண்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க அதிக விலை தரவேண்டியிருக்கிறது’’ என்று நொந்துகொண்டார் ராதா.

அடுத்து, இல்லத்தரசியான காமாட்சியைச் சந்தித்தோம். 

‘‘எங்களைப் போன்ற இல்லத்தரசி களுக்கு பார்லர் சர்வீஸ் பெரிய பிரச்னையா இருக்கு. பார்லரில் மிகக் குறைவாகச் செலவு பண்றதே த்ரெட்டிங்குக்குத்தான். ஜி.எஸ்.டி-க்கு முன்னாடி 30 ரூபாய்ல  த்ரெட்டிங் செஞ்சுக்கிட்டேன். இப்ப 60 ரூபாய் தர வேண்டியிருக்கு. நான் மாதாமாதம் பார்லருக்குச் சென்று ஆயில் மசாஜ் செஞ்சுக்குவேன். அதற்கு மாதம் 400 ரூபா செலவாகும். இப்போது 600 ரூபாய் ஆகுது.

அதேபோல, உணவுப் பொருள்களிலிருந்து உடை வரை பிராண்டட் பொருள்களின் விலை ஏறிடுச்சு. குடும்பத் தலைவிகள்  அதிகம் கவனம் செலுத்தும் சமையல் பொருள்களான பருப்பு வகைகளில் ஆரம்பித்து, எல்லாத்துக்குமே      ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருக்கு. வாரக் கடைசியில அல்லது மாசத்துக்கு ஒரு முறையாவது குழந்தைகளை ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் சாப்பிடுவோம். இப்போ அங்கேயும் விலை அதிகமாயிடுச்சு.
 
ஜி.எஸ்.டி-யினால் மாதச் சம்பளம் பெறும் நடுத்தரக் குடும்பங்களுக்குச் சேமிப்பு என்பது இனி எட்டாக் கனிதான்’’ என்று அவரும் புலம்பினார்.    

ஜி.எஸ்.டி... பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருமா?

ஜி.எஸ்.டி-யினால் பெண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்வதினால், அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என ஆடிட்டர் இசை அழகனிடம் கேட்டோம்.
 
“ஜி.எஸ்.டி-யின் வருகையால் பெண்கள் பயன்படுத்தும் சில பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.  முக்கியமாக, அவர்கள் விரும்பி அணியும் தங்க நகைகளுக்கான வரி 1 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால் திருமணத்துக்கு நகை வாங்கும் நடுத்தரக் குடும்பத்தினர் நிறையவே பாதிப்படைவார்கள். பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு விதிவிலக்கல்ல.

ஆடைகளுக்கான விலை 1,000 ரூபாய்க்கும் கீழே இருக்குமானால், அதற்கான வரி 5 சதவிகிதமாக உள்ளது. ஆயிரத்துக்கும் மேலான விலையுள்ள ஆடைகளுக்கு வரி 12 சதவிகிதமாக உள்ளது. இன்று பெண்கள் பலருக்கும் அழகு சாதனப் பொருள்கள் அத்தியாவசியமாக இருக்கின்றன. அவற்றுக்கான வரியை 14.5 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குங்குமம், பொட்டு, காஜல் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி-யினால் வரி குறைந்து உள்ளதை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். பெண்கள் மாதாமாதம் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரி விதித்திருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். ஏற்கெனவே, சானிட்டரி நாப்கின்கள் 90 ரூபாய்க்கு மேலே உள்ள நிலையில், 5 முதல் 12 சதவிகித வரி உயர்வும் கொடுமை’’ என்று முடித்தார் அவர்.

பெண்கள் பயன்படுத்தும் பல பொருள்களின் விலையை உயர்த்தியதன் மூலம் அந்தப் பொருள்களின் மூலம் அதிக வருமானம் பார்க்க நினைக்கிறதா அல்லது அந்தப் பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்று நினைக்கிறதா அரசாங்கம்?

- வே.கிருஷ்ணவேணி


படங்கள்: ப.சரவணகுமார், ப.பிரியங்கா