மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்!

செல்லமுத்து குப்புசாமி

ஷேர் மார்க்கெட்டைப் பற்றிப் பேசும்போது நம் மனக்கண் முன்னால் வந்து நிற்கும் இரு விஷயங்கள் ரியல் எஸ்டேட் முதலீடும், தங்கமும் ஆகும். இவற்றை நன்கு புரிந்துகொண்டு அதன்பிறகு ஷேர் மார்க்கெட்டில் இறங்குவது நல்லது. அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்!

கனவு இல்லம் குறித்தான லட்சியம் அனைவருக்கும் இருக்கும். நாம் வளர்ந்த வீட்டைச் சுற்றிய அல்லது வாழ்ந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் அசைபோட சுகம் தருபவை. சொந்த ஊர் குறித்தான ஏக்கமும், சொந்த வீடு குறித்தான கனவுமே வாழ்க்கையை முன்னுக்கும் பின்னுக்குமாகத் தள்ளுகின்றன.

சொந்த வீடு வைத்திருப்பதன் மூலம் வாடகையை மிச்சம் செய்கிறீர்கள். ஆனால், வருமானம்..? ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். 60 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறோம். அந்த வீட்டை மாதமொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவதாக வைத்துக்கொள்வோம். ஆக, வருட வாடகை 15 X 12 = 180 ஆயிரம். அதாவது, ரூ.1.8 லட்சம். அதாவது, செலவழித்தத் தொகைக்கு ஆண்டுக்கு 3% வாடகையாகக் கிடைக்கிறது. இதனை வாடகை மூலமாகக் கிடைக்கும் வருமானம் (Rental yield) என்பார்கள். இது போக, வருடா வருடம் அந்த வீட்டின் விலை அதிகரிக்கலாம். இப்போது ரூ.60 லட்சம் மதிப்புக்கொண்ட அந்த வீடு, அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ரூ.80 லட்சமாக உயரலாம். (அல்லது ரூ.60 லட்சத்திலேயே நிற்கலாம்)

ஐந்து வருடம் கழித்து நமக்கு வாடகையாகக் கிடைத்த பணமும், விலையேற்றம் மூலம் அடைந்த லாபமும் எவ்வளவு எனக் கணக்குப் போட்டுப் பார்த்தால், எல்லா விஷயமும் புலப்படும். குறிப்பாக, ஐந்து வருடங்களில் பணவீக்கம் எவ்வளவு, அதே 60 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்தால், எவ்வளவு கிடைக்கும் என்பது போன்ற சங்கதிகள் நமக்குப் புரிபடும்.

ரியல் எஸ்டேட்டின் இந்த அளவுகோலின்படி, இப்போது ஷேர் மார்க்கெட்டை அணுகுவோம். ஷேர் மார்க்கெட்டிலும் நமக்கு இரண்டு வகையான லாபம் கிடைக்கும். ஒன்று, டிவிடெண்ட் எனப்படும் ஈவுத்தொகை. ஒரு நிறுவனம்தான், தான் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியைப் பங்குதாரர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதே டிவிடெண்ட். பங்கு முதலீடுகளில் டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட, பங்குகளின் விலை அதிகரிப்பதால் ஏற்படும் லாபமே முதன்மையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்கினால், ஐந்து வருடங்களில் ரூ.30 டிவிடெண்டாகக் கிடைக்கிறது. அதேசமயம், பங்கு விலை 5 வருடங்களில் ரூ.2,000 ஆகிறது என்றால், விலையேற்றத்தைவிட டிவிடெண்ட் முக்கியமில்லாத விஷயமாகப்படலாம். ஆனால், இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நன்றாக பிசினஸ் செய்து லாபம் ஈட்டுகிற நிறுவனம் மட்டுமே டிவிடெண்ட் தர முடியும். அதேபோல, நன்றாக லாபம் ஈட்டுகிற நிறுவனத்தின் பங்கு விலை  மட்டுமே (மற்றவற்றை விட) அதிகரிக்கும்.

ஆக, லாபகரமான பிசினஸில் (அதாவது, நிறுவனத்தில்) முதலீடு செய்யவே அனைவரும் துடிக்கிறோம். ஆனால், ஒரு நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஈட்டும் பிசினஸ் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்த பிறகு, அதன் பங்கு விலை தாறுமாறாக ஏறியிருக்கும். அந்த ஆலமரங்கள் சிறு செடியாக இருக்கும்போதே அவற்றை அடையாளம் கண்டு நம்பிக்கையோடு முதலீடு செய்து நீண்ட நாள் காத்திருந்தால், நமது முதலீடு நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக உயர்ந்திருக்கும். அவற்றைக் கண்டறியும் சூட்சுமும், அவை விருட்சமாக வளரும் வரைக் காத்திருக்கும் பொறுமையும் வாய்க்கப் பெற்றவர்கள் பெரிய அளவில் வெற்றி அடைகிறார்கள். வாரன் பஃபெட்டும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் அப்படிக் காத்திருந்து, அறுவடை செய்தவர்கள், செய்பவர்கள்.

விதையோ, செடியோ, மரமோ எதுவாக இருந்தாலும் சரி, அதன் லாபம் ஈட்டும் திறம் என்னவென்று கவனிப்பதே ஷேர் மார்க்கெட்டில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். இன்றைக்குத் தெருமுனையில் தேநீர்க் கடையாக உள்ள பிசினஸ், பத்து வருடங்கள் கழித்து நாடெங்கும் கிளைகளைப் பரப்பி பெருநிறுவனமாக மாறலாம். அல்லது அந்த தெருமுனைக் கடையைக்கூட நடத்த முடியாமல் இழுத்து மூடிவிட்டுப் போகலாம். ஆனால், இப்போது அதன் நிலை என்ன, எவ்வளவுக்கு வியாபாரம் நடக்கிறது, எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்!நீங்கள் பார்ட்னராக இணையும் தேநீர்க் கடை ஆண்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகிறது. மொத்தம் இரண்டு பங்குதாரர்கள். ஒருவர், டீக்கடைக்காரர். இன்னொருவர், அவருடைய அவசரத் தேவைக்காகப் பணம் கொடுத்து பிசினஸில் பார்ட்னர் ஆகும் நீங்கள். இரண்டு ஷேர்களுக்கு ரூ.5 லட்சம் லாபம். அப்படியானால் ஒரு ஷேரின் லாபம் ரூ.2.5 லட்சம். இதைத்தான் ஆங்கிலத்தில் Earnings per share (EPS) என்கிறார்கள். இப்படியாக லாபம் ஈட்டும் பிசினஸில் நீங்கள் பங்குதாரர் ஆவதற்கு ரூ.25 லட்சம் பணம் தருகிறீர்கள். அதாவது, அந்த டீக்கடை பிசினஸில், தான் வைத்திருக்கும் இரண்டு ஷேர்களில் ஒரு ஷேரை உங்களுக்கு ரூ.25 லட்சத்துக்கு அவர் விற்கிறார்.

ரூ.25 லட்சத்துக்கு வாங்கும் ஷேர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கிறது. (இந்த ரூ 2.5 லட்சம் பிசினஸில் சம்பாதிக்கும் லாபம் மட்டுமே. ஆண்டு முடிவில் அல்லது மாதந்தோறும் இந்த லாபத்தின் ஒரு பகுதியை அல்லது முழுத் தொகையான ரூ.2.5 லட்சத்தையும் நாம் அப்படியே டிவிடெண்டாக எடுத்துக்கொள்கிறோமா, இல்லை மறுபடியும் அதே பணத்தை பிசினஸில் போட்டு அதை விரிவாக்கம் செய்கிறோமா என்பது வேறு விஷயம்). பங்கின் விலை ரூ.25 லட்சம்; அது ஈட்டும் லாபம் ரூ.2.5 லட்சம். அப்படியானால் ஒரு லட்சம் லாபம் சம்பாதிப்பதற்கு ரூ.10 லட்சம் ரூபாய்க்கு ஷேர் வாங்க வேண்டியிருக்கிறது.

ஒரு ஷேரின் விலைக்கும் (Price) ஒரு ஷேர் ஈட்டும் லாபத்துக்கும் (EPS – Earning per share) உள்ள விகிதம், பங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியமான ஒரு காரணி. அதனை PE விகிதம் என்கிறார்கள்.

PE விகிதம் = Price / EPS

நமது உதாரணத்தில் இந்த PE விகிதம் 25/2.5 = 10.

இப்போது இன்னொரு கேள்வி. அதே தெருமுனையில் உள்ள இன்னொரு டீக்கடை ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறது. அதன் 5 பங்குகளில் இரண்டை ரூ.50 லட்சத்துக்கு உங்களுக்கு விற்க விருப்பம் தெரிவிக்கிறார் அதன் முதலாளி. நீங்கள் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் யோசித்து வையுங்கள். அடுத்த வாரம் பேசுவோம்.

(ஜெயிப்போம்)