மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்!

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

மிழ்நாட்டில் இருக்கும் தொழில் முனைவோர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்யும் தொழிலில் சராசரியான லாபம் வந்தால் போதும், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றே நினைப்பார்கள். இவ்வளவு  பணம் சம்பாதித்ததே போதும் என்று நினைப்பார்கள். ஏனென்றால், அவர்களது தொழிலில் நஷ்டம் வராமல், ஒரு பாதுகாப்பான கட்டத்துக்குச் சென்றுவிட்டதால் இப்படி அவர்களுக்குத் தோன்றும்.   

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்!

நாங்கள் முதலில் கடலூரில் பிசினஸ் செய்ய ஆரம்பித்தபோதுகூட, அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம், குறைவான லாபம் வந்தாலே போதும் என்றுதான் முடிவெடுத்தோம். இப்படி நினைப்பது தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கிறது. ஆந்திரா, குஜராத்தில் இருக்கும் தொழில்முனைவோர்கள் எல்லாம் இப்படி சிந்திப்பதே கிடையாது. தொழிலில் நல்ல லாபம் வந்தபிறகுதான் அவர்களுக்கு இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை வரும். இன்னும் அதிகமாக உழைப்பார்கள். இன்னும் அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள். தொழிலில் லாபம் வந்தபிறகு, ஓடியது போதும் என்று உட்கார்ந்துவிடாமல், இன்னும் ரிஸ்க் எடுப்பதே ஒரு நல்ல தொழில்முனைவோருக்கான அடையாளம்.

ஒருவர் 500 பேருக்கு வேலை கொடுக்கிறார் எனில், அவர் சமூகத்தைத்தான் முதலில் பார்க்க வேண்டும். அதற்கடுத்துத்தான் அவருடைய குடும்பத்தைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அவர் இந்த அளவுக்கு உயரக் காரணமே இந்தச் சமூகம் செய்த உதவிதான். அதற்காகவே அவர் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால், தொழிலில் முன்னேற்றம் கண்டு,  பாதுகாப்பு (Safe zone) என்கிற எண்ணம் வந்தவுடன், போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என  அமைதியாக இருக்கக்கூடாது. அப்போதுதான் இன்னும் அதிகம் சம்பாதித்துப் பணக்காரனாக வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

பணக்காரர்கள் எல்லாம் பயங்கரமானவர்கள், திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் என நினைத்துக்கொண்டு, பணத்தின்மீது ஆசைப்படாமல் இருக்கும் தொழில்முனைவோர்கள் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பணம்தான் நமக்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுக்கும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; எல்லோரையும் பணம் சம்பாதிக்க வைக்க வேண்டும்; தொழில் முனைவோராக மாற்ற வேண்டும்.
இதற்கு நீங்கள் பெரிதாகக் கனவு காண வேண்டும். நீங்கள் 90 மார்க் வாங்க ஆசைப் பட்டால், 60 மார்க்தான் வாங்குவீர்கள். 60 மார்க் வாங்க ஆசைப்பட்டால், 40 மார்க்தான் வாங்குவீர்கள். அதனால உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே வேண்டும் என நினையுங்கள்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்!



இன்னொரு முக்கியமான விஷயம், தொழில் முனைவோர்கள் தங்களுக்கான கலாசாரத்தை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். கலாசாரம் என்றவுடன் நமது பாரம்பர்யத்தை கடைப்பிடிக்க வேண்டும்; கோவிலுக்குச் செல்ல வேண்டும்; சேலை - வேஷ்டி அணிய வேண்டும் என நினைக்காதீர்கள். ஒரு மனிதன் சக மனிதனை மதிக்க வேண்டும். இதுதான் உண்மையான கலாசாரம். இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அரசியல்வாதி, கம்பெனி ஓனர் என மேலே உள்ள அனைவரும் கீழே உள்ளவர்களின் திறமை களையும், சக்திகளையும் மட்டும் எடுத்துவிட்டு, அவர்களை மதிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால், வெளிநாடுகளில் தனிமனிதனுக்கு அதிகமாக மரியாதை கொடுப்பார்கள். இது இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது.

 சமுதாயத்தின்மீது  நமக்கு அக்கறை கிடையாது. வீட்டை அழகாக வைத்திருப்போம், ஆனால், வெளியில் குப்பை போடுவோம். சிக்னலில் நிற்க மாட்டோம், வரிசையில் நிற்க மாட்டோம், சாலை விதிகளைப் பின்பற்ற மாட்டோம். லஞ்சம் கொடுப்போம், மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். நான் நல்லா இருக்கணும், என் குடும்பம் நல்லா இருக்கணும், என்னைச் சார்ந்தவர்கள் நல்லா இருக்கணும் என்று சுயநலமாகவே யோசிப்போம்.
நாடு நன்றாக இருக்க வேண்டும்; அதற்்காக நாம் வரி கட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டோம். நம்மில் எல்லோரும் இப்படித்தான் என்று சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கும் பொதுவான ஒரு கலாசாரத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். இது மாற வேண்டும். அந்த மாற்றம் நமது வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். வீட்டில் யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ, அவர்களுக்கு மற்றவர்கள் குனிந்து செல்வார்கள். வீட்டில் அனைவரும் சரிசமமாக இருக்க வேண்டும். முக்கியமாக, பெண்களுக்கு மரியாதை தரவேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சின்னச் சின்ன விஷயத்தில் மாற்றம் வந்தால்தான், பெரிய மாற்றம் வரும்.

தொழில்முனைவோர்களைப் பொறுத்தவரை, தன்னோடு இருப்பவர்களிடமும், தனக்குக் கீழ் வேலை செய்பவர்களிடமும் ஒரே மாதிரிதான் பழகவேண்டும். இந்தப் பழக்கம் தொழில் முனைவோர்களிடம் இருந்தால், அவர்களோடு வேலை பார்ப்பவர்களும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்வார்கள். அப்படி செய்யும்போது தொழிலில் வெற்றியும் கிடைக்கும்.

தொகுப்பு: மா.பாண்டியராஜன்

(மாத்தி யோசிப்போம்)