நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

லதா ரகுநாதன்

மூத்த குடிமகன்களுக்கு, அடுத்த பத்து வருடங்களுக்கு  ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பிரதான் மந்த்ரி வய வந்தனா யோஜனா (PMVVY) என இந்தத் திட்டத்துக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும், வரிஷ்ட  பென்ஷன் பீமா யோஜனா 2017 திட்டத்தின் காப்பிதான் இது.  

புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

இந்தத் திட்டத்தில் 2018 மே 3-ம் தேதி வரை மட்டுமே சேர முடியும். அதற்கு மேல் சேர முடியாது  என்பதால், மூத்த குடிமக்களில் சிலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று பரபரப்பாகச் செயல்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேருவதினால் நன்மையா என்று பார்ப்போம்.

இந்தத் திட்டத்தை நடத்தப் போவது ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இது ஒரு வகை பென்ஷன் திட்டம். மாதம், காலாண்டு், அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு  ஒருமுறை என இந்தத் திட்டத்தின் பென்ஷன் தொகையைப் பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது. மாதம் ஒருமுறை பெற்றுக்கொண்டால் ஏற்கெனவே சொல்லப்பட்ட 8% வட்டி கிடைக்கும். அதுவே வருடக் கணக்கில் வாங்கத் தயார் எனில், வட்டி விகிதம் 8.3% இருக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வருடாந்திரத் தொகையாக ரூ1.44 லட்சமும், அதிகபட்ச வருடாந்திர தொகையாக ரூ.7.22 லட்சம் வரையிலும் அனுயூட்டி தொகைப் பெறலாம். மாதத் தவணை எனில், குறைந்தபட்சமாக ரூ1.5 லட்சமும், அதிகபட்சமாக ரூ.7.5 லட்சமும் இருக்கும். அரையாண்டு, காலாண்டு் என்னும்போது இந்தத் தொகையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். இதன் மூலம் கிடைக்கும்  பென்ஷன் தொகையை வருடக் கடைசியில் பெற்றுக்கொண்டால், ரூ.12,000 மற்றும் ரூ.60,000 கிடைக்கும். மாதக் கடைசியில் பெற்றுக் கொண்டால், ரூ.1,000 மற்றும் ரூ.5,000 கிடைக்கும்.

புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

இந்தத் திட்டத்தில், பத்தாம் வருட முடிவில் இந்த பாலிசித் தொகை நம் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். பத்து ஆண்டுகளுக்குமுன் இதிலிருந்து விலக விரும்பினால், ஏறக்குறைய 98 சதவிகிதத் தொகையைத் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்த ஒருவர் பத்து வருடத்துக்குமுன் இறக்கும்பட்சத்தில், அவர் கட்டிய பணம் அவரது வாரிசுக்குத் தரப்படும்.

அதேபோல், இந்தத் திட்டத்தில் சேர்ந்து மூன்று வருடங்களுக்குப்பின், கட்டிய பணத்தில் 75% வரை கடனாகப் பெற முடியும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் அவ்வப்போது மாறும். இந்தக் கடன் தொகை, பென்ஷன் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே திரும்பத் தரப்படும். இந்தத் திட்டத்தில் சேருவதற்குக் குறைந்தபட்ச, அதிகபட்ச வயது வரம்பு சொல்லபடவில்லை.

இந்தத் திட்டத்தில் உள்ள மிகப் பெரிய சிறப்பு, 8% வட்டி நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதுடன், வட்டி வருமானமும் மாதந்தோறும் கையில் கிடைக்கும்.

ஆனாலும், இந்தத் திட்டத்தில் சில குறைகளும் உள்ளன. முதலாவதாக, இந்தத் திட்டத்தில் வருமான வரிச் சலுகை கிடையாது. இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை பிரிவு  80சி-யின் கீழ் வராது. தவிர, இதன்மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கும் விலக்கு கிடையாது. ஆகவே, நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், இந்த பென்ஷன் தொகைக்கும் வருடா வருடம் வரி செலுத்த வேண்டும்.     

புதிய பென்ஷன் திட்டம்... மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

இரண்டாவதாக, பணவீக்கத்தினால் வருமானத்தில் ஏற்படப்போகும் குறைபாட்டுக்குத் தீர்வு எதுவும் இந்தத் திட்டத்தில் சொல்லப்படவில்லை. தற்போதைய பணவீக்கம் சுமார் 4.5%. ஆனால், நாம் கட்டப்போகும் வரியோ 10%, 20% அல்லது 30% இருக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் வருமானத்தை நாம் கட்டுகிற வரி விகிதத்திலிருந்து நீக்கினால், நமக்குக் கிடைக்கப் போகும் வட்டி முறையே 7.2%, 6.4% அல்லது 5.4% மட்டுமே. இப்போதுள்ள பணவீக்கம் இனிவரும் ஆண்டுகளில் உயர்ந்தால், இந்தத் திட்டத்தின் மூலம் எந்த நன்மையும் கிடைக்காது. இதே வட்டி விகிதம் அல்லது சிறிதளவு குறைவான விகிதம் கொண்டுள்ள வேறு சில திட்டங்களும் உள்ளன.  அவற்றைப் பார்ப்போம்.
  
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்


ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரை உள்ளது. ஐந்து வருடக் கணக்குக்கு வட்டி 7.6%. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு, பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு உண்டு. வட்டிக்கு விலக்கு கிடையாது. வட்டி, வருடத்துக்கு ஒரு முறைதான் தரப்படும்.

சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் அக்கவுன்ட்

ஐந்து வருடம் லாக் இன் கொண்ட திட்டம் இது. ரூ.1,000-த்தில் ஆரம்பித்து ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதன் வட்டி 8.3%. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி தரப்படும். சேமிப்புக்கு, பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு உண்டு. வட்டிக்கு விலக்குக் கிடையாது.

ஐந்து வருட வரி சேமிப்பு டெபாசிட்டுகள்

ஐந்து வருடத் திட்டமான இது, சில தேர்ந்தெடுத்த வங்கிகளில் செயல்படுத்தப்படுகிறது. பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு உண்டு. ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். வட்டிக்கு வரி விலக்குக் கிடையாது. மூத்த குடிமக்களுக்கு 7.5% வரை வட்டி விகிதம் மாதந்தோறும் வட்டி தரப்படும்.

போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS)

ரூ.1,500-லிருந்து ரூ.4.5 லட்சம் வரை இந்தத் திட்டத்தில் சேமிக்க இயலும். வட்டி 7.5% மாதத் தவணையில் கிடைக்கும். வரி விலக்கு ஏதும் கிடையாது. 8% வட்டி என்பது கவர்ச்சியான விஷயமாக இருந்தாலும், அது கையில் கிடைக்கும்போது வருமான வரியால் மிகவும் குறைந்துவிடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பணத்தின் மதிப்பும் பணவீக்கத்தினால்  குறைந்துவிடுகிறது.

மேலே சொல்லப்பட்ட சில திட்டங்களில் சிலவற்றுக்கு, பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்கு உள்ளதால், முதலீடு செய்யும்போது 10 சதவிகித வரி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.15,000, 20 சதவிகித வரிக்கு ரூ.30,000, 30 சதவிகித வரிக்கு ரூ.45.000 வரை வருடத்துக்கு வரியைக் குறைக்க முடியும். ஆக, மேலே உள்ள பட்டியலைப் பார்த்தால், சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் அக்கவுன்ட் (SCSS), எல்லாவற்றிலும் சிறந்ததாகப்படுகிறது.

எனவே, இந்தத் திட்டத்தில் சேரும்முன், மற்ற திட்டங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது மூலம் சரியான திட்டத்தைக் கண்டறிய முடியும்.