
தி.ரா.அருள்ராஜன் கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
தங்கம்
தங்கம் தொடர்ந்து ஒரு புல் ரேலியில் உள்ளது. இந்த புல் ரேலி தொடருமா என்கிற கேள்வியைக் கடந்த வாரம் எழுப்பி, நாம் சொன்னதாவது...

“தங்கம் தொடர்ந்து ஏறும்போது அடுத்த கட்டமாக 28470 என்ற அடுத்தகட்ட எல்லையை அடையலாம். இது ஒரு முக்கியத் தடைநிலையாக தற்போது உள்ளது. இதை உடைத்து ஏறும்போது நாம் முன்பே குறிப்பிட்டுள்ள 28600 மற்றும் 28780 என்ற எல்லையை அடையலாம். இது ஒரு வலிமையான தடைநிலை ஆகும்.’’

நாம் சொன்னதுபோலவே, சென்ற வாரம், தங்கம் 28470 என்ற எல்லையைத் தாண்டி ஏறியது. மேலே முதல்கட்ட தடைநிலையான 28600-ஐத் தொட்டு வலிமையாகத் தடுக்கப்பட்டது. ஒருவேளை அந்த எல்லையை உடைத்திருந்தால், அடுத்த எல்லைக்கும் போய் இருக்கலாம்.
இந்த நிலையில், 28600-ல் வலிமையாகத் தடுக்கப்பட்டு, கீழ்நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் திங்கள்கிழமை, ஏற்றத்தின் முடிவில் ஒரு டோஜி தோன்றியது. பின்பு அடுத்தடுத்த இரண்டு நாள்களிலும் மெள்ள மெள்ள இறங்கி சிறிய அளவிலான ஸ்பின்னிங் டாப்புகளைத் தோற்றுவித்தது.
இந்த இறக்கம் 28320 என்ற எல்லை வரை தொடர்ந்தது. பின் வியாழன் அன்று பெரிய ஏற்றத்துக்கு முயன்று, மீண்டும் 28600 என்ற எல்லையில் மீண்டும் வலிமையாகத் தடுக்கப்பட்டு உள்ளது.
இனி, 28300 என்கிற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டு இயங்கிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். இந்த எல்லையை உடைத்து இறங்கும்போது, அடுத்தகட்ட இறக்கத்துக்கு, வழிவகுப்பதுபோல் இருக்கும். அப்போது மெள்ள இறங்கி அடுத்த ஆதரவு நிலையான 28150-ஐ நோக்கி நகரலாம்.

இந்த எல்லை மிக முக்கியமானதாகும். இது உடைக்கப்பட்டால், மிகப்பெரிய இறக்கத்துக்கு வழி வகுக்கலாம். அப்போது 28000 மற்றும் 27800 என்ற எல்லைகளைத் தொடலாம். மேலே திரும்பும் போதெல்லாம் 28600 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப் படலாம். இந்த எல்லை உடைக்கப்பட்டால், 28900 மற்றும் 29100 என்ற எல்லைகளைத் தொடலாம்.

வெள்ளி
வெள்ளி, முந்தைய வாரம் ஒரு புல்ரேலியில் மேல்நோக்கி திரும்பியது. அதன்பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறி உள்ளது. இதைப்பற்றி நாம் சென்ற வாரம் சொன்னது...
“வெள்ளி இனி, 38000 என்ற தடைநிலையைத் தாண்டி ஏறும் போது, காளைகளுக்குப் புத்துணர்வு வரலாம். அதனால், அடுத்தகட்ட ஏற்றம் என்பது வலுவானதாக மாறி, 38350 மற்றும் 38825 என்ற எல்லைகளை அடையலாம்.”
நாம் சொன்னதுபோலவே, காளைகளுக்கு ஒரு புத்துணர்வு வந்தது. சென்ற வாரம் வியாழன் அன்று, 38000 என்ற தடை நிலையை உடைத்து ஏறியது. முதல்கட்டமாக 38350 என்ற எல்லையும் தொட்டது. ஆனால், தொடர்ந்து ஏறும்போது, 38700 என்ற எல்லைவரை சென்றது.
இனி, என்ன நடக்கலாம்? வெள்ளி, பிவட் புள்ளியான 38350-ஐத் தாண்டி ஏறும் போது, ஒரு வலுவான அடுத்தகட்ட ஏற்றத்துக்குத் தயாராகலாம். இந்த ஏற்றம் உடனடித் தடைநிலையான 38700-ல் கொஞ்சம் திணறலாம்.
சென்ற முறை இந்தப் புள்ளியில்தான் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த முறை 38700-ஐ உடைத்து ஏறினால், அது மிக பலமான ஏற்றமாக இருக்கலாம். இந்த ஏற்றம், அடுத்த முக்கியமான தடைநிலையான 39300 என்ற எல்லையை நோக்கி நகரலாம். இது மிக வலிமையான தடைநிலை ஆகும்.
இந்த எல்லை உடைக்கப்பட்டால், சந்தை காளைகளின் கைகளுக்கு மாறலாம். பிவட் புள்ளியான 38350-ஐ உடைத்துக் கீழே இறங்கினால், மெள்ள மெள்ள 37400-ஐ நோக்கி இறங்கலாம். இந்த எல்லை உடைக்கப்பட்டால், சந்தையானது கரடிகளின் கைகளுக்கு மாறலாம்.
அதனால், அடுத்தகட்ட ஏற்றம் என்பது வலுவானதாக மாறி, 38350 மற்றும் 38825 என்ற எல்லைகளை அடையலாம். அதன்பின் 39350 என்பது மிக வலுவான தடைநிலை ஆகும்.

கச்சா எண்ணெய்
சென்ற வாரம் நாம் சொன்னது. “கச்சா எண்ணெய், கடந்த ஒரு வாரமாகக் கீழே 2976-ஐ ஆதரவாகவும் மேலே 3084-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது. போன மாதம் 3100 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு இறங்கியது. மீண்டும் மேலே திரும்பினால், 3100-ல் வலிமையாகத் தடுக்கப்படலாம். அதை உடைத்தால் சந்தை, காளைகள் கைக்கு மாறலாம்.”
கச்சா எண்ணெய் 2976 என்ற ஆதரவை எடுத்து ஏறியது. மேலே 3100 என்ற தடைநிலையையும் உடைத்தது, அடுத்து 3170 வரை ஏறியுள்ளது.
சென்ற வாரத்தில், டிரேடர்களுக்குக் கச்சா எண்ணெய் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். தற்போது 3100 என்பது முக்கிய ஆதரவாக மாறலாம். இதனால், உடனடித் தடைநிலையான 3180-ஐத் தாண்டும்போது வலுவான ஏற்றம் நிகழ்ந்து, 3220 மற்றும் 3270 என்ற எல்லைகளை முதல்கட்டமாகவும், அடுத்து 3330 என்ற எல்லையையும் தொடலாம். கீழே 3100-ஐ உடைக்காதவரை ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி உடைத்தால், கரடிகள் 2940-ஐ நோக்கி இறங்கலாம்.

நேச்சுரல் கேஸ்
நேச்சரல் கேஸ், சென்ற வாரம் கீழே 192 என்பது முக்கிய ஆதரவு. வியாபாரிகள் இந்த எல்லைகளுக்கு அருகில் மட்டும் வியாபாரம் செய்வது நல்லது என்றும் கூறினோம். அதைப் போலவே, 192 என்ற எல்லையை உடைத்து 186.20 வரை இறங்கியது. முன்பு ஆதரவாக இருந்த 192, தற்போது தடைநிலையாக மாறியுள்ளது. இனி 192.50-ஐ உடைத்து ஏறினால், சந்தை, காளைகளின் கைக்கு மாறலாம். அது, அடுத்த தடைநிலையான 198 என்ற எல்லையை அடையலாம். கீழே 185 - 186 என்பது வலுவான ஆதரவு நிலை ஆகும்.

மென்தா ஆயில்
மென்தா ஆயிலில் தொடர் ஏற்றத்தைப் பார்த்து வருகிறோம். இந்த ஏற்றத்தின் தற்போதைய தடைநிலை 1080 ஆகும். கீழே 1040 என்பது முக்கிய ஆதரவு. இது உடைந்தால், நல்ல இறக்கம் வரலாம்.

காட்டன்
பலமான ஏற்றம் நிகழ்ந்து, அடுத்த தடை நிலையான 21000-த்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது காட்டன். 21000 உடைக்கப்பட்டால், அடுத்து 21180, 21460- ஐத் தொடலாம். கீழே 20500 இப்போது ஆதரவாக மாறலாம்.