நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

ல்ல செய்தி வேண்டுமா இல்லை, கெட்ட செய்தி வேண்டுமா, எது முதலில் வேண்டும்?

சரி, முதலில் நல்ல செய்தியையேப் பார்ப்போம். ஜூன் மாதத்துக்கான பணவீக்கக் குறியீடு குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. பணவீக்கம் கணிசமாகக் குறைந்திருப்பதாகச் சொல்கிறது இந்தப் புள்ளிவிவரம். இதனை நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம். உதாரண மாக, நடப்பு ஆண்டில் மே மாதம் 2.18 சதவிகிதமாக இருந்த சில்லறை விலைக் குறியீடு, ஜூன் மாதத்தில் 1.54 சதவிகிதமாகக்  குறைந்திருக்கிறது.         

நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

ஆனால், மொத்த விலைக் குறியீடோ இன்னும் அதிகமாகக் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த மே மாதம் 2.17 சதவிகிதமாக இருந்த மொத்த விலைக் குறியீடு, ஜூன் மாதத்தில் 0.9 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

பணவீக்கம் குறைவது நல்ல செய்திதானே என்கிறீர்களா? நல்ல செய்திதான். பொருள்களை வாங்குவோருக்கு, விலை குறைவாக இருக்கலாம் என்பதால். ஆனால், முதலீட்டாளர்களுக்கு..?

நாம் எந்தவிதமான முதலீட்டில் பணம் போட்டிருக்கிறோம் அல்லது போடப் போகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நல்லதும், கெட்டதும் அமையும்.

உதாரணமாக, உத்தரவாதமான ஃபிக்ஸட் ரிட்டர்ன் தரக்கூடிய டெபாசிட்டிலோ, இல்லை கடன் பத்திரங்களிலோ ஏற்கெனவே பணம் போட்டு வைத்திருப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஏன் தெரியுமா? பொதுவாக,  பணவீக்கம் கணிசமாகக் குறையும்போதெல்லாம், வட்டி விகிதம் குறைக்கப்படும்.

நாகப்பன் பக்கங்கள்: பணவீக்கம் குறைவு... முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?அதீத ஆதாயம் தர வாய்ப்புள்ள பங்குச் சந்தை போன்ற உத்தரவாதமான வருவோயோ, ஆதாயமோ இல்லாத முதலீடுகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்களின் கதி என்ன? அவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. பணவீக்கம் குறைவு காரணமாக வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு குறையும் என்பதால், அவர்களின் லாபம் ஓரளவுக்கு அதிகரிக்கலாம். அதன் காரணமாக விற்பனை அதிகரிக்கலாம். இவையெல்லாம் ஒருசேர நிறுவனங்களின் பங்கு விலையேற்றத்துக்குக் காரணமாக அமையலாம். எனவே, நல்ல பங்குகளைக் கையில் வைத்திருப்போர் கவலைப்படத் தேவையில்லை. இனிமேல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இருப்போருக்கும் இது பொருந்தும்.

ஓய்வு பெற்றோர், சீனியர் சிட்டிசன்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அவர்களும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ரியல் ரேட் ஆஃப் ரிட்டர்ன் நன்றாக இருக்கும்வரை. அதாவது, பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் தரும் வரை இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது இருப்பதைப்போல, பணவீக்கம் 2 சதவிகிதமாக இருந்து வட்டி விகிதம் 6 சதவிகிதமாக இருப்பின்,  முதலீட்டாளர்களுக்குத் தானே 4% நிகர லாபம்?

பணவீக்கம் அதிகமாக இருந்து வட்டி விகிதமும் அதிகமாக இருப்பது யாருக்கு லாபம்? வட்டி விகிதம் 6 சதவிகிதத்துக்குப் பதில் 9% என்றால், நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதானே? ஒரு நிமிடம் நிதானமாக யோசியுங்கள். பணவீக்கம் 10 சதவிகிதமாக இருந்து, வட்டி 9 சதவிகிதமாக  இருப்பின், நமக்குத்தான் 1% உண்மையில் இழப்பு.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; பணவீக்கம் கணிசமாகக் குறைந்து வருவதால் தன் எதிர்காலத்துக்கான சேமிப்பையும் குறைத்துக் கொள்ளலாமா என்கிற அதிர்ச்சிக் கேள்வியைக் கேட்டார் ஒருவர்.  தயவுசெய்து அந்தத் தவறை மட்டும் ஒருபோதும் செய்துவிடாதீர்கள். ஏன் தெரியுமா?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பணவீக்கம் என்பது மாதாமாதம் வெளியிடக்கூடிய தகவல். அது மாறிக்கொண்டே இருக்கும். அதற்குத் தக்க நாமும் மாறிக்கொண்டே இருப்பது சாத்தியமும் அல்ல; சரியும் அல்ல. 

அடுத்தது, பணவீக்கம் என்பதே சென்ற ஆண்டோடு ஒப்பிட்டு இந்த ஆண்டு எவ்வளவு விலைவாசி அதிகரித்திருக்கிறது என்று  சொல்வது. பல ஆண்டுகள் கழித்து ஓய்வுக் கால நிதிக்கு சிறுகச் சிறுக குருவி சேர்ப்பது போலச் சேர்க்கும் நாம், இதைக் கண்டு மனம் மாறுவது சரியல்ல.

மிக முக்கியமாக ஒன்று, பணவீக்கம் எப்படிக் கணக்கிடப்படுகிறது, அதில் என்ன பொருள்கள் எல்லாம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டால், நம் சேமிப்பைக் குறைக்கவே மாட்டோம்.

ஒட்டுமொத்தமாக, நாம் பார்க்கும், கேட்கும் பணவீக்கத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மட்டுமல்லாது, சிமென்ட், ஸ்டீல் போன்ற கட்டுமானப் பொருள்களும் அடங்கும்.

யோசித்துப் பாருங்கள், ஸ்டீல், சிமென்ட் எல்லாம் நாம் அன்றாடம் வாங்கும் பொருள்கள் என்ன? எப்போதாவது வாழ்நாளில் ஒருமுறை வீடு கட்டும்போது மட்டுமே வாங்குவோம். அதன் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் குறைந்தது என்பதை நம்பி, நம் முதலீட்டையும் குறைக்கலாமா என்ன?

தொடர்ந்து உயர்ந்துவரும் மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் கல்விச் செலவுகள், கேபிள் டிவி கட்டணம், மாதாந்திர கரன்ட் பில், ஹோட்டல் மற்றும் சினிமா செலவுகள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கத்தைப் பாருங்கள்.

கடந்த பல ஆண்டுகளாகவே பணவீக்கம் சராசரியாக 7 – 8 சதவிகிதமாக இருப்பதால்தான், நம் எதிர்காலச் சேமிப்புக்காகத் திட்டமிடக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 8% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

2010-ம் ஆண்டு உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் எவ்வளவு தெரியுமா? மறந்திருப்போம். 22 சதவிகிதத்துக்கும் மேல்! அவ்வளவு ஏன், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட இரட்டை இலக்க எண்ணில்தான் இருந்தது மொத்தப் பணவீக்கமே. உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் சுமார் 15 சதவிகிதமாகவே இருந்தது அப்போது.

எனவே, மனதை அலைபாயவிடாமல், அநாவசியச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க முடியுமா என்று பார்க்கலாமே!