மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதித் தொழில் செய்யும்போது,  ஒவ்வொரு நாட்டுக்கும் நீங்கள் அனுப்பும் பொருளுக்கேற்ப, அந்த நாட்டு அரசாங்கம் சில சான்றிதழ்களை அவசியம் கேட்கும். ஏற்றுமதிக்குத் தேவையான சான்றிதழ்கள் நாட்டுக்கு நாடு மாறுபடலாம். நீங்கள் பொருளை எந்த இறக்குமதி யாளருக்கு அனுப்புகிறீர்களோ, அந்த இறக்குமதி யாளரிடம் என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தயார் செய்து கொள்ள வேண்டும். பொருள்களை அனுப்புவதற்கு முன்பே தேவையான சான்றிதழ்களை எடுத்து அனுப்ப வேண்டும். பொருள்களை அனுப்பியபிறகு சான்றிதழ்கள் எடுத்து அனுப்பினால், திருப்பி அனுப்பிவிடுவார்கள். என்னென்ன சான்றிதழ்கள் ஏற்றுமதி பிசினஸில் அவசியமாக உள்ளன என்பதைப் பார்க்கலாம்.   

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்!

ஃபூமிகேஷன் சான்றிதழ் (Fumigation Certificate), பைதோசானிட்டரி சான்றிதழ் (Phytosanitary   Certificate), ஜெனரலைஸ்டு சிஸ்டம் ஆஃப் பிரீஃபரன்ஸ் (Generalized System of Preferences), உற்பத்தியாளர் சான்றிதழ் (Manufacturing Certificate), டிஸ்ட்ரிப்யூட்டர் சான்றிதழ் (Distributor Certificate), ஹெல்த் சான்றிதழ் (Health Certificate), ஆரிஜின் சான்றிதழ் (Certificate of Origin) மற்றும் ஹலால் சான்றிதழ் (Halal Certificate) ஆகியவை ஏற்றுமதித் தொழிலில் அவசியமாக உள்ள சான்றிதழ்கள் ஆகும். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகப்  பார்ப்போம். 

 ஃபூமிகேஷன் சான்றிதழ் (Fumigation Certificate)


உணவுப் பொருள்கள் மற்றும் மரப்பெட்டிக்குள் வைத்து பேக்கிங் செய்யப்படும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு ஃபூமிகேஷன் சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த ஃபூமிகேஷன் சான்றிதழ் இல்லாமல், உணவுப் பொருள்கள், பூச்சிகள் அரிக்கக்கூடிய வகையிலான பேக்கிங்கில் உள்ள இயந்திரங்கள் ஆகியவற்றை அனுப்பக்கூடாது. இந்தச் சான்றிதழை எந்தவொரு தனியார் பூச்சிக் கட்டுப்பாடு நிறுவனங்களிலும் வாங்கிக் கொள்ளலாம். சான்றிதழில் இன்வாய்ஸ் நம்பர், தேதி போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.

பைதோசானிட்டரி சான்றிதழ் (Phytosanitary Certificate)


அக்ரோ (Agro-Products) பொருள்களுக்கு பைதோசானிட்டரி சான்றிதழ் அவசியம் தேவை. இந்தச் சான்றிதழை PQ (Plant Protection and     Quarantine) சான்றிதழ் என்றும் சொல்வார்கள். இந்தச் சான்றிதழை, ஏற்றுமதி செய்யும் நீங்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழில், நீங்கள் ஏற்றுமதி செய்யும்  பொருளின் தாவரவியல் பெயர் இருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை, இந்தியக் காடு ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும். இந்தச் சான்றிதழ், விண்ணப்பித்த பின் கிடைக்க ஒருநாள் ஆகும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்!



ஜெனரலைஸ்டு சிஸ்டம் ஆஃப் பிரீஃபரன்ஸ் (Generalized System of Preferences)

இந்த ஜெனரலைஸ்டு சிஸ்டம் ஆஃப் பிரீஃபரன்ஸ் சான்றிதழானது ஒரு பதிவுச் சான்றிதழ் ஆகும். இதனை REX (Regitered Exporter System) என்றும் அழைப்பார்கள். அதாவது, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு அதன்படி சில சலுகைகளை வழங்கும்.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி யாளர்கள் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்யலாம். உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளில் வரி இல்லாமல் கன்சைன்மென்டை க்ளியர் செய்ய முடியும். இதற்கான சான்றிதழை இந்திய எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்‌ஷன் கவுன்சில் வழங்குகிறது.

உற்பத்தியாளர் சான்றிதழ் (Manufacturing Certificate)

கிரைண்டர், மிக்ஸி போன்ற உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அதற்கு உற்பத்தியாளர் சான்றிதழ் மிகவும் அவசியம். உற்பத்தியாளர் சான்றிதழ் என்பது அந்தப் பொருளை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்குவதாகும். அதில் அந்தப் பொருள் எங்கே, எந்த நிறுவனத்தினால், யாரால் விற்பனை செய்யப்பட்டது என்கிற விவரங்கள் அடங்கி இருக்கும். மோட்டார், இன்ஜின் போன்றவற்றுக்கு  இந்தச் சான்றிதழ் அவசியம்.

டிஸ்ட்ரிப்யூட்டர் சான்றிதழ் (Distributor Certificate)

எந்தவொரு பிராண்டட் பொருளையும் ஏற்றுமதி செய்ய, முதலில் டிஸ்ட்ரிப்யூட்டர் இந்தச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். பிராண்டட் பொருள்களை உங்களிடமிருந்து வாங்கும் இறக்குமதியாளர், இந்தச் சான்றிதழைக் கட்டாயம் கேட்பார்.

ஹெல்த் சான்றிதழ் (Health Certificate)

உணவுப்பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தச் சான்றிதழ் மிக மிக அவசியம். முக்கியமாக அரபு நாடுகளில் இந்தச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். இந்தச் சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு உணவுப் பொருள்களையும் அங்கு இறக்குமதி செய்வதில்லை. உணவுப் பொருளானது  தரமாகவும், சுத்தமாகவும், உண்ணக்கூடிய வகையிலும் இருக்கிறதா என்பதை இந்தச் சான்றிதழ் உறுதி செய்யும்.  இந்தச் சான்றிதழை இந்திய எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்‌ஷன் கவுன்சில் வழங்குகிறது.

ஆரிஜின் சான்றிதழ் (Certificate of Origin)

இது நாம் ஏற்றுமதி செய்யும் பொருளின் பிறப்புச் சான்றிதழ் ஆகும். அந்தப் பொருள் எங்கு உற்பத்தியானது அதாவது, எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடும் சான்றிதழ் ஆகும். இந்தச் சான்றிதழை மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் போன்ற சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஃபியோவிடமிருந்தும் (FIEO) இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஹலால் சான்றிதழ் (Halal Certificate)

ஹலால் என்பது குறித்து இங்கு சரியான புரிதல் இல்லை. உணவுப் பொருள்களின் சுத்தத் தன்மையைக் குறிப்பதே ஹலால் சான்றிதழ். உணவுப் பொருள்களில் பன்றி இறைச்சியின் ஜெலாட்டின் மற்றும் ஆல்கஹால் போன்றவை கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்தான் ஹலால் சான்றிதழ் என்பதாகும். அப்படிப்பட்ட பொருள்கள் ஹலால் என்றும், இல்லாதவை ஹராம் என்றும் கூறப்படும். அரபு நாடுகளில் ஹலால் சான்றிதழ் என்பது அவசியம்.
 
நீங்கள் அனுப்பும் பொருளுக்கு என்னென்ன சான்றிதழ்கள் தேவைப்படும் என்பதைப் பொருள்களை அனுப்புவதற்கு முன்பே இறக்குமதியாளரிடம் கேட்டுத் தயார் செய்துகொள்வது நல்லது. 

(ஜெயிப்போம்)