
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : நோ மேன்ஸ் லேண்ட் (No Man’s Land)
ஆசிரியர் : டஃக் டாட்டம் (Doug Tatum)
பதிப்பாளர் : Portfolio Trade
வளர்ந்த நிறுவனங்களை நிர்வகிக்க பல உத்திகள் உண்டு. அதேபோல வளர்ந்துவரும் நிறுவனங்களை நிர்வகிக்கவும் சிறப்பான சில உத்திகள் உண்டு. டக் டாட்டம் என்பவர் எழுதிய ‘நோ மேன்ஸ் லேண்ட்’ என்னும் புத்தகம் உங்கள் நிறுவனம் பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் நிலையில், அதை எப்படி நிர்வகிப்பது என்பதைச் சொல்லித் தருகிறது.
நீங்கள் வேகமாக வளரும் நிறுவனத்தின் உரிமையாளராகவோ, வேகமாக வளரும் நிறுவனத்தைப் பொறுப்பேற்று நடத்துபவ ராகவோ இருந்தால், நீங்கள் எவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
அமெரிக்காவில் 1980-களில் ஆரம்பித்து தற்போது வரையிலான காலகட்டத்தில் பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 7,454 நிறுவனங்களில் 5% நிறுவனங்களே ஒரு பில்லியன் விற்றுவரவு என்ற எல்லையைத் தாண்டி வளர்ந்து கொண்டிருக் கின்றன. இந்த 5% நிறுவனங்களை ஆராய்ந்தால், அவை அனைத்துமே 10 மில்லியன் அளவிலான விற்றுவரவு என்ற நிலையை அடைந்தபின்னர் சந்தித்த மாற்றங்களைச் சமாளித்ததனாலேயே தொடர்ந்து வளர ஆரம்பித்தன என்பது தெரியும்.
பல ஆயிரம் நிறுவனங்கள், பல படிநிலைகளில் தோல்வியடைகின்றன. அவற்றின் நிலைமைகளை ஆராய்ந்தால், நிறுவனங்களின் வாழ்க்கைச் சுழற்சி (life cycle) நமக்குப் புரியவரும்.
ஒரு நிறுவனம், சிறியது என்று சொல்லமுடியாத அளவுக்குப் பெரியது, பெரியது என்று சொல்ல முடியாத அளவுக்குச் சிறியது என்ற நிலை யாருக்கும் புலப்படாமல் திடீரென்று வந்துவிடு கிறதா என்று கேட்டால், அதுதான் இல்லை. தொழில் அதிபரும், முக்கியப் பணியாளர்களும் ‘வளர்ச்சி... வளர்ச்சி’ என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியபின்னரே வர ஆரம்பிக்கிறது.
அப்படி வரிந்துகட்டிக்கொண்டு இறங்கும் போது அதற்கான செயல்முறைகளும், நடைமுறை களும் நம் நிறுவனத்தில் இருப்பதில்லை அல்லது அவற்றை உருவாக்கிக்கொள்வதற்கான வலுவான திட்டங்களைக் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக, வாடிக்கையாளர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை அடிக்கடி வந்துபோகும். பணியில் இருக்கும் பல நிர்வாகிகளால் (சிறிதாக இருக்கும்போது முடிவெடுக்கும் செயலைச் செய்தவர்கள்) முடிவெடுக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் குறித்த முடிவுகள் கடினமானதாக ஆகிக்கொண்டே போகும்.
எங்கேயிருந்து இவ்வளவு பணம் வருகிறது; இது தொடருமா என்பது குறித்த தெளிவு குறைந்துகொண்டே போகும். இவற்றையெல்லாம் பார்த்து, தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசையும் நிலை அடிக்கடி வந்துபோகும்.
இந்த நிலைகள் ஒவ்வொன்றாகவோ, ஒரே நேரத்தில் பலவும் சேர்ந்து வரும்போதே நிலைமை கையை மீறிப் போகிறது என்பது தெரிந்துவிடும். மனித வாழ்க்கையில் இருப்பதைப்போல், ‘நோ மேன்ஸ் லேண்ட்’ என்னும் நிறுவனத்தின் பதின் பருவம் ஒரே ஒருமுறையே வந்துபோகும். அதைத் திறம்பட கையாண்டால் மட்டுமே வெற்றிகரமான அடுத்த நிலைக்கு நிறுவனத்தை நம்மால் எடுத்துச் செல்ல முடியும் என்கிறார் ஆசிரியர்.

‘நோ மேன்ஸ் லேண்ட்’ என்பது ஒரு நிறுவனத்தில் எந்த நிலையில் வருகிறது என்று ஒரு படத்தினை ஆசிரியர் தந்துள்ளார். (பார்க்க, வலதுபக்கத்தில் உள்ள படம்) இந்தப் படத்தினைப் பார்த்தால், நிறுவனங்களின் வாழ்க்கைச் சுழற்சி என்னவென்றும், அதில் ‘நோ மேன்ஸ் லேண்ட்’ என்ற சூழல் எப்போது வருகிறது என்றும் நமக்குச் சுலபத்தில் புரியும்.
இந்த வாழ்க்கைச் சுழற்சியில் நிறுவனங்கள் நிலை குறித்து விரிவாகச் சொல்வதும், அதைச் சமாளிப்பது எப்படி என்று தெளிவாகச் சொல்வதும்தான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பாகச் சொன்னால், ‘நோ மேன்ஸ் லேண்ட்’ என்னும் நிலை, மனித வாழ்க்கையில் வரும் பதின்பருவம் போன்றது. இந்தப் பருவத்தில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை. ஏனென்றால், நாம் சிறுவனாகவும் இல்லை அல்லது பெரிய மனிதனாகவும் இல்லை என்ற நிலையினால்தான்.
அதேபோல்தான், நிறுவனங்களின் சூழலும். சிறிய நிறுவனமும் இல்லாமல் பெரிய நிறுவனமும் இல்லாமல் இருக்கும் குழப்பமான சூழ்நிலை. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஒரு நிலையான இமேஜ் இருக்காது. பணியாளர்களும் அன்றாடம் பெரும்பாடு படவேண்டியிருக்கும். ஆனால், பெரிய நிறுவனத்துக்கான சலுகைகள் எதுவும் கிடைக்காது.
இதுபோன்ற சூழ்நிலையில், தனிமனிதனுக்கு ஏற்படும் குழப்பம், ஏமாற்றம், எண்ணக் குலைவு போன்றவற்றைப் போலவே நிறுவனங்களிலும் குழப்பம், ஏமாற்றம், தேக்கநிலை, பணியாளர்களின் மன உறுதி குறைதல் போன்றவை உருவாகி, கடைசியில் பண ரீதியான நஷ்டத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது.

இந்த மாறுதல்கள் நிகழும் பருவத்தில் நிர்வாகங்கள் தனிக் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். நிறுவனம் இயங்கும் தொழிலுக் கான சந்தை, நிர்வாகத்தில் (படிநிலைகள்) ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள், நிறுவனம் வியாபார ரீதியாக இயங்கும் விதம் (மாடல்) மற்றும் வேகமான வளர்ச்சியைச் சந்திக்கும் தொழிலை திறம்பட நடத்தத் தேவையான பணம் என்ற நான்கு விஷயங்களில் மட்டுமே சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
இந்த நான்கு விஷயங்களையும் ஏதோ ஆழ்ந்து சிந்தித்துச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நீண்ட காலமாகத் தொடர்ந்து நிறுவனங்களையும் சந்தைகளையும் கண்காணித்த பின்னரே நான் தொகுத்துத் தந்துள்ளேன் என்கிறார் ஆசிரியர்.
நிறுவனம் இயங்கும் தொழிலுக்கான சந்தை
ஒரு நிறுவனம் வேகமான வளர்ச்சியை எப்போது சந்திக்கிறது. ஒட்டுமொத்தமாக அந்தத் தொழிலில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் சூழ்நிலை யில்தான். எனவே, நிறுவனத்தின் வளர்ச்சியும் தொழிலின் வளர்ச்சியும் எந்த வேகத்தில் மாறுகிறது என்பதை நிறுவனம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
நிர்வாகம் (Management)
வேகமாக வளருகிற சூழ்நிலையில், நிர்வாக முறையிலும் படிநிலைகளிலும் பல்வேறு மாறுதல்களைத் தேவைக்கேற்ப கொண்டுவர வேண்டியிருக்கும்.
நிறுவனம் வியாபார ரீதியாக இயங்கும் விதம்
நிறுவனம் வேகமாக வளர்ந்துவரும்போது தற்போது செயல்படும் மாடலிலேயே தொடர்ந்து நல்ல லாபம் ஈட்ட முடியுமா என்ற சோதனையை அடிக்கடி செய்துகொண்டேயிருக்க வேண்டும்.
நிறுவனத்தை நடத்தத் தேவையான பணம்
நிறுவனம் வேகமாக வளரும் சூழ்நிலையில் அதிக அளவிலான பணத் தேவை இருக்கும். அந்த அளவிலான பணத்தை முதலீட்டாளார்களிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் இருந்தோ சுலபத்தில், தேவையான சமயத்தில் திரட்டிக் கொள்ள முடியுமா என்பதிலும் அதிக அளவு கவனத்தைச் செலுத்தவேண்டியிருக்கும்.
இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் இந்தப் பதின்பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல முடியும் என்கிறார் ஆசிரியர்.
அனைத்து நிறுவனங்களும் சந்திக்கக்கூடிய பிரச்னையைத் தீர்க்கும் தீர்வுகளைச் சொல்லும் புத்தகம் இது என்பதால் முதலாளிகள் மட்டுமல்ல, பணியாளர்களும் படிக்க வேண்டியது அவசியம்.