நடப்பு
தொடர்கள்
Published:Updated:

குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ)  மூலம் நிதி திரட்டுவது அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.  2016-17-ல் மட்டும் மொத்தம் 25 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.28,210 கோடி திரட்டின. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும்.  

குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு டஜன் நிறுவனங்களுக்கும் மேல் பங்குச் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. மேலும், சமீப காலமாகப் பல ஐபிஓ பங்குகள், பட்டியலிடப்பட்ட அன்றே கணிசமாக விலை அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித் தருகின்றன.

ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும்போது சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகரும், மதுரையைச் சேர்ந்த ஈஸி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான பி.ராமசுவாமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“இந்த ஆண்டு பங்குச் சந்தையின் உயர்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் சாதகமான நிலையில், புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பட்டியலிடப்படும் நாளன்றே, பல நிறுவனப் பங்குகளின் விலை படுவேகமாக உயர்வதால், பல முதலீட்டாளர்கள், குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி, இந்த வலையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

ஐ.பி.ஓ என்பது, ஒரு நிறுவனம் அதன் பங்கைப் பொது மக்கள் வாங்கி, முதலீடு செய்வதற்காக முதன்முதலில் வெளியிடுவது. சில சமயங்களில் ஏற்கெனவே பட்டியிலிடப்பட்ட (listed) நிறுவனம், மேலும் பங்குகளைப் பொது மக்களுக்காக வெளியிடுவது உண்டு. இதனை எஃப்.பி.ஓ  (FPO - Follow on Public Offer)  என்றழைக்கின்றனர்.  எஃப்.பி.ஓ-ல் ஏற்கெனவே வர்த்தகமாகிவரும் பங்கு என்பதால், அதன் விலை, சந்தை விலையை அனுசரித்தே இருக்கும். ஆனால், ஐ.பி.ஓ-வில் முதன்முதலில் பங்கு விற்பனைக்கு வருவதால், அதன் விலையை அவ்வளவு எளிதில் மதிப்பிட முடியாது.

ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை...  

1. நம்மில் பலர் பங்கின் விலையையும் (price) அதன் மதிப்பையும் (Value) ஒன்றுதான் என்று நினைக்கிறோம். ஆனால், அவை இரண்டும் ஒன்றல்ல. உதாரணமாக, நாம் ஒரு சட்டை வாங்குகிறோம். அந்தச் சட்டையின் விலை  (price tag) என்பது அந்தக் கடைக்காரர் குறிப்பிடும் விலை. ஆனால், சட்டையை அணிந்து பார்த்தால் தான் அதன் மதிப்பை (worthiness) அறிய முடியும். அதேபோல், பங்குச் சந்தையிலும் நாம் முதலீடு செய்யும் பங்கின் விலை, அதன் மதிப்பைவிட மலிவாக இருந்தால், அந்தப் பங்கு முதலீடு ஆதாயம் ஈட்டுவதாக இருக்கும்.

2) ஒரு பங்கில் முதலீடு செய்யும்முன் எதற்காக முதலீடு செய்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில், பலரும் குறுகிய கால லாபத்துக்கே முதலீடு செய்கின்றனர். ஆனால், பங்கு முதலீடு என்பது நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் இருக்க வேண்டும். அதனால் பட்டியலிடப்படும் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி, அந்தத் தொழில் துறையின் வளர்ச்சி வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம்.

குவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!



3) நிறுவனத்தை யார் ஆரம்பித்தது, எந்த வருடம் ஆரம்பித்தது, இதன் வளர்ச்சிப் பயணம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், இந்த நிறுவனத்தின் கடன் சுமை எவ்வளவு, அதன்  கடன் - பங்கு மூலதன விகிதம் என்ன என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். இந்த விகிதம்     2:1-க்கு மேல் இருந்தால், அந்த நிறுவனம் நீண்ட நாள் தாக்குப் பிடிப்பது கடினம்.

4)  ஒரு நிறுவனம், எதற்காக நிதி திரட்டுகிறது என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். கடனை அடைக்க  அல்லது ஏற்கெனவே முதலீடு செய்த சில முதலீட்டாளர்களை (private equity investors) வெளியேற்ற என்றால், அந்தப் பங்கு முதலீட்டை நிராகரிப்பது நல்லது. அதுவே தொழிலை விரிவுபடுத்த அல்லது புதிய தொழிற்சாலை அமைக்க அல்லது அந்தத் தொழில் சார்ந்த சிறிய நிறுவனங்களை வாங்க நிதி திரட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த நோக்கத்துக்காக நிதி திரட்டும் பங்கு நிறுவனங்களை ஐ.பி.ஓ-வில் வாங்கலாம். இந்த விவரம் அந்த ஐ.பி.ஓ ஆஃபர் டாக்குமென்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். முதலீடு செய்யும்முன் அதைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

5) ஐ.பி.ஓ வரும் நிறுவனத்தில் எத்தனை பங்குதாரர்கள் உள்ளனர் என்பதையும்,  அவர்களின் பங்கில் பொதுமக்களுக்கு எவ்வளவு தருகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். சிறிய நிறுவனங்களின் ஐபிஓ-வில், குறைந்த அளவே பங்குகள் வெளியிடப்படுவதால், அதற்குத் தேவை ஏற்படுவது இயற்கைதான். கிடைக்காத ஒன்று என்றெண்ணி அனைவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு முதலீடு செய்வதுண்டு. இதனாலேயே சில பங்கின் விலை பட்டியலிட்டவுடன் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. ஆனால், நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் அடிப்படையிலேயே அந்தப் பங்கின் விலை வர்த்தகமாகும்.

6) ஐ.பி.ஓ வரும் நிறுவனத்தைப் போன்ற மற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. புதிய நிறுவனத்தை மதிப்பிட ஓரளவுக்கு இது உதவியாக இருக்கும்.

7) கடைசியாக, இந்த ஐபிஓ-வின் பிரதான மேலாளர் (Lead Manager) மற்றும் பதிவாளர் (ரெஜிஸ்ட்ரார்) யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஊர் பேர் தெரியாதவர்கள் மேலாளராகவும், பதிவாளராகவும் இருக்கிறார்கள் என்றால் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.

முதலீடு செய்யும்போது, நிறுவனம் மற்றும் நிறுவனர்களின் தரம் மற்றும் வளர்ச்சி  வாய்ப்பைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது. கேள்விப்படாத தொழில், புரிந்துகொள்ள முடியாத தொழில் துறை, அறியாத நிறுவனங்களின்
பங்குகளில் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.

முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணரின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளலாமே!

-சோ.கார்த்திகேயன்