நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்!

செல்லமுத்து குப்புசாமி

பிஇ (PE) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பிரைஸ் ஏர்னிங் (Price Earning)  விகிதம் 10 என்ற கணக்கில், ரூ.25 லட்சம் கொடுத்து  ரூ.2.5 லட்சம் லாபம் தரும் ஒரு தேநீர் விடுதியை வாங்கியதைப் போன வாரம் பார்த்தோம். வசதி கருதி அதற்கு ‘ஏ’ என்றே பெயரிடுவோம்.       

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்!

இன்னொரு தேநீர் விடுதி ‘பி’-ல் மொத்தம் 5 பங்குகள். மொத்த லாபம் ரூ.10 லட்சம் எனில், ஒரு பங்கு தரும் லாபம் (EPS) ரூ.2 லட்சம். இரண்டு பங்குகளின் விலை ரூ.50 லட்சம் என்ற கணக்கின்படி, ஒரு பங்கின் விலை ரூ.25 லட்சம். அப்படியானால் இதன் பிஇ விகிதம் 25/2 = 12.5.

இந்த இரு தேநீர் விடுதிகளில் எதில் முதலீடு செய்வீர்கள்? ஏ-ல் பார்ட்னரானால் நாம் முதலீடு செய்யும் 10 ரூபாயானது 1 ரூபாய் லாபம் சம்பாதிக்கும். பி-யில் பங்குதாரர் ஆவதென்று முடிவு செய்தால், ஒரு ரூபாய் சம்பாதிக்க ரூ.12.50-ஐ நீங்கள் முதலீடு செய்தாக வேண்டும். ஆக நாம் குறைவான பிஇ விகிதம் உள்ள பிசினஸைத் தேர்ந்தெடுப்போம். காரணம், அதுதானே மலிவாகக் கிடைக்கிறது.

பொதுவாகவே, உலகம் முழுவதும் ஷேர்களை ஆய்வு செய்வதில் பயன்படும் முதன்மையான, எளிமையான பிஇ அளவுகோல் இதுதான். ஒரே துறையில் இருக்கும் இரு நிறுவனங்கள், ஒரே மாதிரியான பிசினஸ் மேற்கொள்பவை, ஒரே மாதிரியான எதிர்காலம் கொண்டவை என்னும் போது எந்த நிறுவனத்தின் பிஇ விகிதம் குறைவாக உள்ளதோ, அதையே தேர்வு செய்வோம். பங்கு முதலீடுகளை ஒப்பிடுவதற்கு பிஇ  விகிதம் வெகுவாக உதவுகிறது.

ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களை ஒப்பிடுவதற்கு உதவுவது ஒரு பக்கம். ஒரே நிறுவனத்தை வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பிடுதலுக்கும் இந்த பிஇ விகிதம் உதவும். உதாரணத்துக்கு, ஒரு கம்பெனி கடந்த ஆண்டு பங்கு ஒன்றுக்கு ரூ.12 லாபம் (EPS) ஈட்டியது. ஒரு பங்கின் விலை ரூ.240-க்கு விற்றது. ஆக, பிஇ விகிதம் 240/12=20. இந்த வருடம் லாபம் ரூ.12-லிருந்து ரூ.16-ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இது சிறிய நிறுவனமாக உள்ளபடியால் முதலீட்டாளர் சமுதாயம் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் விலை அதே 240 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அப்படியானால் பிஇ விகிதம் = 240/16 = 15.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்!



சென்ற ஆண்டு பிஇ  விகிதம் 20. தற்போது பிஇ 15-ல் விற்பனையாகிறது. எனவே, சென்ற ஆண்டைவிட மலிவாகக் கிடைக்கிறது. சென்ற ஆண்டு வாங்கியதைவிட (அல்லது வாங்கியிருப்பதைவிட) இப்போது வாங்குவது நலம். ஆனால், ஷேர் மார்க்கெட்டில் விலை அப்படியே ஒரு வருடம் முழுவதும் இருப்பதில்லை. ஒருவேளை சென்ற ஆண்டு ரூ.240-ஆக இருந்த விலை இப்போது ரூ.272 ஆக இருந்தால்..?

பிஇ விகிதம் = 272 / 16 = 17.

அப்போதும்கூட சென்ற ஆண்டைவிட குறைவான விலைக்கு விற்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். ரூ.240-க்கு விற்றபோது ரூ.12 லாபம் ஈட்டியதற்கு இணையாகவில்லையென்றால், அது ரூ.16 லாபம் ஈட்டும்போது ரூ.320 ஆகும். இரண்டுமே பிஇ விகிதம் 20. ரூ.320-க்கு மேலே விற்றால் மட்டுமே சென்ற வருடத்தைவிட விலை அதிகம் ஆகும். 

நிறைய பேர் செய்கிற தவறு ஒன்றிருக்கிறது. ஒரு நிறுவனம், குறைவான லாபம் ஈட்டிய சமயத்தில் குறைவான விலைக்கு விற்றிருக்கும். அப்போது நாம் வாங்க நினைத்திருப்போம். ஏதோவொரு காரணத்துக்காக வாங்க முடியாமல் போயிருக்கும். பிறகு அந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து அதன் லாபம் உயர்ந்திருக்கும். ஆனால், நாம் அந்த பழைய விலையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.

“உனக்குத் தெரியுமா? இப்பத்தான் 300 ரூபாய். 5 வருஷத்துக்கு முந்தி வெறும் 100 ரூபாய்க்கு வித்துச்சு. மறுபடியும் 100-க்கு வந்தா வாங்கிருவேன்.”

- இப்படி சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். தெருமுனையில் ஒரேயொரு தேநீர்க் கடை மட்டுமே வைத்திருக்கும்போது ஒரு பங்கின் விலை ரூ.25 லட்சம் சரி. அதே நிறுவனம் சென்னை முழுவதும் 30 கடைகளைத் திறந்து பெரிய கம்பெனியான பிறகும், ‘‘அப்பவே அந்த ஆளு ரூ.25 லட்சம் கொடுத்து பார்ட்னர் ஆகச் சொல்லி கெஞ்சினார். நான்தான் மடத்தனமா வேணாம்னு சொல்லிட்டேன்” என்று பிற்பாடு புலம்புவதால் யாருக்கு என்ன லாபம்?

அதனால் நடப்பு விலை, லாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டு முடிவுக்கு வர வேண்டும் – பிஇ உதவியுடன்.

நமது உதாரணத்தில் தேநீர் விடுதிகளைக் கண்டோம். ஒன்று, பிஇ-10-க்கும், மற்றது பிஇ 12.5-க்கும் விற்பனைக்குக் கிடைத்தன. 10 என்ற விகிதம் குறைவாக இருப்பதால், அதை வாங்கு வதாகத் தீர்மானித்தோம். ஒரு விவசாயக் கிராமம். அங்கே ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சத்துக்கு விலை போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் ரூ.8 லட்சத்துக்கு விற்க முன்வருகிறார். ஏன் அவர் மட்டும் குறைவாக விற்கிறார் என யோசிப்பீர்களா இல்லையா? அவர் நிலத்தில் என்ன குறை, நிலம் சமனாக இல்லையா, விளைச்சலுக்கு ஏற்ற நல்ல மண் இல்லையா, ஒருவேளை மற்றவர்கள் நிலத்தில் உள்ளதுபோல அவர் நிலத்தில் கிணறு இல்லையோ என்றெல்லாம் நாம் யோசிப்போம். 

நாம் விசாரித்துப் பார்த்தவரைக்கும் அந்த நிலத்தில் எந்தக் குறையுமில்லை. அந்த விவசாயி ஏதோ அவசரத் தேவையின் காரணமாகவே  குறைத்து விற்கிறார் எனத் தெரிய வருகிறது. சந்தோசமாக வாங்குவீர்கள். அப்படித்தான் பிஇ குறித்தும் பார்க்க வேண்டும்.

ஒரு துறையில் எல்லா நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட பிஇ விகிதத்தில் விற்கும்போது ஒரு கம்பெனி மட்டும் குறைவான பிஇ-க்கு விற்றால் அது ஏனென்று யோசிக்க வேண்டும். அந்த நிறுவனம் தொடர்பான செய்திகளை, தகவல்களை ஆராய வேண்டும். அந்த ஆய்வும், நிறுவனங்களைப் பற்றிய தேடலும்தான் ஷேர் மார்க்கெட் அனாலிசிஸ் ஆகிறது.

(ஜெயிப்போம்)