
பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு சிறந்த வழி!

நாணயம் விகடன், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ‘மியூச்சுவல் ஃபண்ட் செல்வம் சேர்க்கும் செயல் திட்டம்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளஸ்டர் மேனேஜர் பி.கே.சுனில், “நம் கலாசாரமானது மக்களின் சேமிப்பு வழக்கத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்துகிறது. பணவீக்கம் குறித்த தெளிவான பார்வை மக்களிடம் ஏற்பட வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மற்ற சேமிப்புகளைவிட, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரவல்லது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து, முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண், “மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களி லிருந்து குறுகிய காலத்தில் பலனை எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான முழுமையான விவரங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் கண்ணன், “இளமைக் காலம் முதலே எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்தால், ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். ஒவ்வொருவரும் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான தொகையைச் சேர்க்க மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒரு சிறந்த வழி” என்றார்.
இந்தக் கூட்டத்துக்கு வந்ததன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெளிவான விளக்கம் கிடைத்ததாக வாசகர்கள் சொன்னார்கள்.
-தி.ஆதிரை
படம்: ல.அகிலன்