நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

ஓவியம்: பாரதிராஜா

ம்பாதிக்க ஆரம்பித்தவுடனேயே, வாழ்க்கையின் முக்கிய இலக்குகளுக்கு முதலீட்டைத் தொடங்கிவிடுகிறவர்களுக்குப் பெரிதாக பணச் சிக்கல் வருவதில்லை. ஈரோட்டைச் சேர்ந்த பார்த்திபன், சம்பாதிக்க ஆரம்பித்தது முதலே சில முதலீடுகளைச் செய்து வருகிறார். டேர்ம் இன்ஷூரன்ஸ்,      மெடிக்ளெய்ம் என எல்லாவற்றையும் பக்காவாகச் செய்துவரும் பார்த்திபன் தன் முதலீடுகள் சரியான பாதையில்தான் செல்கிறதா, இன்னும் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவர் நம்மிடம் சொன்னார்...   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

“என் வயது 31. வேளாண் துறையில் வேலை. மாத வருமானம், பிடித்தங்கள் போக ரூ.55,000. என் மனைவி வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

என் மனைவியும், குழந்தையும் எந்தச் சூழ்நிலையிலும் பொருளாதாரப் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.90 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துள்ளேன். ஃப்ளோட்டர் பாலிசி ரூ.5 லட்சத்துக்கு எடுத்துள்ளேன். ரூ.4 லட்சத்துக்கு அரசின் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் உள்ளது. பி.எஃப் தொகை மாதம் ரூ.6,500 பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் இதுவரை ரூ.4.6 லட்சம் உள்ளது. இரண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகள் வைத்துள்ளேன்.

வரிச் சேமிப்புக்காக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்து வருகிறேன். இது சரியானதா எனச் சொல்லவும். நான் செய்துவரும் முதலீடுகளில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா, செய்துவரும் முதலீடுகள் எதிர்கால இலக்குகளுக்குப் போதுமா, இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமா? தற்போது வீட்டு வாடகை கிடையாது. அலுவலர்களுக்கான குடியிருப்பில் இருக்கிறேன்” என்ற பார்த்திபன் தன் முதலீடுகள், காப்பீடுகள், வரவு செலவு விவரப் பட்டியலை அனுப்பி வைத்தார்.        

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?


முதலீடு, வரவு செலவு விவரங்கள்

எஸ்.ஐ.பி ரூ.24,000 (இதுவரையில் ரூ4.55 லட்சம்)

பி.பி.எஃப் : ரூ.3,000 (இதுவரையில் ரூ.1.3 லட்சம்)

கார் லோன்: ரூ.7,710 (நவம்பர்-2017-ல் முடியும்)

கார் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.1,200

டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.800

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.1,100

குடும்பச் செலவுகள்: ரூ.15,000

பெட்ரோல் செலவு: ரூ.2,000

மொத்த செலவுகள்: ரூ.54,810

இலக்குகள்


அடுத்த 10 வருடத்தில் மனை வாங்க ரூ.10 லட்சம்

அடுத்த 20 வருடங்களில் வீடு கட்ட ரூ.50 லட்சம்

அடுத்த 15 வருடங்களில் குழந்தையின் மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம்

அடுத்த 20 வருடங்களில் குழந்தையின் திருமணச் செலவுகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் 50 பவுன் நகை

அடுத்த 5 வருடங்களில் புது கார் வாங்க ரூ.6 லட்சம்

ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரம்

(இலக்குகளுக்குத் தேவையான தொகைகள் அனைத்தும் தற்போதைய மதிப்பில்)

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ்  பார்த்தசாரதி.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?‘‘31 வயதிலேயே எதிர்கால வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு முதலீடுகளையும், காப்பீடுகளையும் செய்துள்ளதற்கு முதலில் பாராட்டுகள். நீங்கள் முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள் 20 வருடங்கள் கழித்து வீடு கட்ட இன்றைய மதிப்பில் ரூ.50 லட்சம் கேட்டுள்ளீர்கள். இன்றைய மதிப்பில் ரூ.50 லட்சம் எனில், 20 வருடங்கள் கழித்து ரூ.1.50 கோடி தேவையாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, உங்கள் வருமானம் உள்ளிட்டவற்றைக்  கணக்கிட்டால், உங்களுக்கு 1500 சதுர அடி வீடு போதுமானதாக இருக்கும். எனவே, இன்றைய மதிப்பில் ரூ.30 லட்சம்  மதிப்பீட்டில் உங்களுக்கான வீட்டைக் கட்ட முடியும். இப்படிச் செய்தால்தான் உங்களின் மற்ற இலக்குகளுக்கு முதலீடு செய்ய முடியும்.

இன்றைய மதிப்பில் ரூ.30 லட்சம் எனில், 20 வருடங்கள் கழித்து உங்களுக்கு ரூ.1.16 கோடி தேவைப்படும். அப்படியானால் உங்கள் எல்லா இலக்குகளுக்கும் ரூ.39,300 முதலீடு செய்தால் சரியாக இருக்கும். தற்போது ரூ.27 ஆயிரம் முதலீடு செய்கிறீர்கள். கார் லோன் முடிந்ததும் ரூ.35 ஆயிரம் வரை உங்களால் முதலீடு செய்ய முடியும். பற்றாக்குறைக்கு ஆண்டுக்கு 5% முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் ஈடு செய்யலாம். 

அடுத்த 10 வருடங்களில் மனை வாங்க ரூ.20 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.8,700 முதலீடு செய்ய வேண்டும். வீடு கட்ட ரூ.1.16 கோடி தேவை. மியூச்சுவல் ஃபண்டுகளில் தற்போது வரை மொத்தம் ரூ4.55 லட்சம் உள்ளது அதில் ஈக்விட்டி ஃபண்டுகளில் உள்ள ரூ.3.75 லட்சத்தை மட்டும் வீடு கட்டப் பயன்படுத்தலாம். இது 20 வருடங்களில் ரூ.43.20 லட்சமாக உயரும். மீதம் தேவைப்படும் ரூ.73 லட்சத்துக்கு மாதம் ரூ.7,400 முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார் வாங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு மாதம் ரூ.7,500 முதலீடு செய்ய வேண்டும்.குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 15 ஆண்டு களில் ரூ.27.50 லட்சம் தேவை. இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை ரூ.5.4 லட்சம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். அதுபோக, ரூ.22.2 லட்சம் சேர்க்க வேண்டும். அதற்கு மாதம் ரூ.4,400 முதலீடு செய்ய வேண்டும். அடுத்து, குழந்தையின் திருமணத்துக்கு நகை வாங்க மற்றும் திருமணச் செலவுகளுக்கு ரூ.80 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.8,100 முதலீடு செய்ய வேண்டும்.

ஓய்வுக் காலத்துக்கு இன்றைய மதிப்பில் ரூ.20 ஆயிரம் தேவை எனில், ஓய்வு பெறும் காலத்தில் ரூ.1,24,000 தேவையாக இருக்கும். அதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.3.5 கோடி தேவை. உங்களுக்கு பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் தொகை ரூ.2.61 கோடி கிடைக்கக்கூடும். மீதம் ரூ.80 லட்சம் சேர்க்க மாதம் ரூ.3,300 முதலீடு செய்ய வேண்டும்.    

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

முதலீட்டுக்கான தொகை தற்போது போதுமானதாக இல்லாததால், சம்பளம் உயரும்போது சில இலக்குகளுக்கு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுக்கு 5% எனப் படிப்படியாக முதலீட்டை அதிகரிக்கவும். ஐந்து வருடங்கள் கழித்து கார் வாங்குவதற்கான முதலீடு முடிந்தபிறகும், 10 வருடங்கள் கழித்து மனை வாங்குவதற்கான முதலீடு முடிந்த பிறகும், மற்ற இலக்குகளுக்கு இன்னும் கூடுதலாகவே முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும்.

பரிந்துரை : நீங்கள் முதலீடு செய்து வரும் பிர்லா சன் லைஃப் எம்.எம்.சி ஃபண்ட்,  ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் ஃபண்டுக்குப் பதிலாக பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். கார் லோன் முடிந்ததும் அந்தத் தொகையை பி.எஃப்-ல் கூடுதலாக ரூ.3,000, செல்வமகள் திட்டத்தில் ரூ.3,000, கோல்டு ஃபண்டில் ரூ.1,800 என முதலீடு செய்யவும்.

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor- Reg.

no - INA200000878 
 
கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?