
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்
எதிர்காலத்தில் தொழில்முனைவோராக ஆக விரும்புகிறவர்கள் முதலில் அப்படியொரு இலக்கைத் தங்களுக்குள் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். தங்களுக்கு என்ன தேவை, தங்கள் எதிர்கால இலக்கு என்ன என்று தெரியாமலே சிலரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இன்னும் சிலர், தங்களது தேவையை அல்லது இலக்கை இவ்வளவு இருந்தால் போதும் என்று சுருக்கிக் கொள்கின்றனர். சின்ன சின்ன வெற்றிகளை அடைந்தபின், ‘அட, எத்தனை பெரிய சாதனை செய்துவிட்டோம்’ எனத் திருப்திகொண்டு அத்துடன், தங்கள் வாழ்க்கை முடிந்ததாக நினைத்து சும்மா இருந்துவிடு கின்றனர். அப்படி இல்லாமல், உங்கள் தேவை என்ன என்று தெரிந்துகொண்டு அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு சுற்றுலா ஏஜென்டிடம் ‘‘நான் ஊருக்குப் போக வேண்டும். எனக்கு டிக்கெட் வேண்டும்’’ என்று சொன்னால் அவரால் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும், எப்போது போக வேண்டும், எங்கிருந்து போக வேண்டும் என எல்லாத் தகவல்களையும் தந்தால்தான் அவரால் டிக்கெட் எடுத்துத் தர முடியும். ஏதோ ஒரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு சுற்றுலா ஏஜென்ட் மூலம் டிக்கெட் எடுக்கவே இத்தனைத் தகவல்களைத் தரும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், உங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் முடிவுகளை எடுப்பது எவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்கும்!
இலக்கு இல்லாத வாழ்க்கை
எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும். இந்தத் தெளிவு இல்லாதவர்களின் வாழ்க்கை, காற்றின் திசையில் பறந்து செல்லும் இலை போலவே இருக்கும். இலக்கு என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒருமுறை ஸ்பெய்னில் இரு பெரிய அணிகள் மோதும் கால்பந்து போட்டி நடந்தது. அந்த மைதானத்தைச் சுற்றி 20,000 பார்வையாளர்கள் இருந்தார்கள். இரண்டு அணி வீரர்களும் விளையாடுவதற்கு ஆக்ரோஷத்துடன் இறங்கினார்கள். நடுவர் பந்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, விசில் அடித்தார். பந்தை உதைத்து விளையாடத் தொடங்கிய வீரர்கள், எதிரிகளின் கோல் போஸ்ட்டை நோக்கிப் பந்தைக் கொண்டு செல்ல ஆரம்பித்தபின்பு பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. எதிரணி வீரர்கள் இருக்கும் திசையில் கோல் போஸ்ட் எதுவும் இல்லை. சரி, அவர்கள் நிற்கிற திசையிலாவது கோல் போஸ்ட் இருக்கிறதா என்று பார்த்தால் அங்கும் இல்லை. கோல் போஸ்ட் இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தெரியாமல் வீரர்கள் முழிக்க, இந்த விளையாட்டைப் பார்ப்பது வீண் என்று நினைத்து பார்வையாளர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்.
கோல் போஸ்ட் இல்லாத கால்பந்து விளையாட்டு எப்படி பார்க்கிறவர்களுக்கும், விளையாடுகிறவர்களுக்கும் போர் அடிக்குமோ, அப்படித்தான் கோல் (இலக்கு) இல்லாத வாழ்க்கையும் போர் அடிக்கும். அதனால் வெற்றிக்கான முதல் படியாக நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் முடிவு செய்வதுதான்.
நடக்கும் என்று நம்புங்கள்
ஒருவர் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் அது நடக்கும் என்று நம்ப வேண்டும். நான் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கும்போது இந்தியாவிலேயே நம்பர் ஒன் சலூனாகக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கும் என்று நம்பினேன். அது நடந்தது. இப்படி நீங்கள் என்னவாக வேண்டும் அல்லது உங்களின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடக்கும் என்று நம்புங்கள். உங்கள் எதிர்காலக் கனவுகளை நீங்களே நம்பவில்லையெனில், அது நிச்சயம் நடக்காது.

1950-க்கு முன்னால் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்துக்குள் கடக்க முடியாது என ஓட்டப் பந்தய வீரர்கள், மருத்துவர்கள், விளையாட்டு சார்ந்த மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்தனர். உலகச் சாதனையும் 4.12-தான்.
அப்போது ரோஜர் பானிஸ்டர் என்கிற ஒரு ஓட்டப் பந்தய வீரர், ‘4 நிமிடம் 12 வினாடியில ஒரு மைல் தூரம் ஓட முடியும்போது, 4 நிமிடங்களில் ஓட முடியாதா?’ என்று கேட்டார். நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தைக் கடக்க முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான பயிற்சி செய்து 1954-ல் நான்கு நிமிடங் களுக்குள் ஒரு மைல் தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார். அதன்பிறகு ஒரு வருடத்துக்குள் 16 பேர் அந்த ரெக்கார்டை ப்ரேக் செய்தார் கள். நீங்கள் ஒரு விஷயத்தை முடியும் என்று நினைத்து அதனை நம்பினால், கண்டிப்பாக அது நடக்கும்.
ஸ்மார்ட் கோல்ஸ்தான் முக்கியம்
நான் பணக்காரன் ஆக வேண்டும் என்பதற்கும், நான் 100 கோடி ரூபாயை இன்னும் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் கோலுக்கும் ஸ்மார்ட் கோலுக்கும். நான் பணக்காரன் ஆகவேண்டும் என்பதை அம்பானி ஒரு மாதிரியாகவும், ஒரு சாதாரண மனிதன் வேறு மாதிரியாகவும் புரிந்து கொள்வார்கள். ஆனால், 100 கோடி என்றால் எல்லோரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்வார்கள்.
தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப்புக்கு ஒருமுறை பெரும் தொழில் நஷ்டம் ஏற்பட்டது. அந்தச் சமயம், அவரிடம் பிச்சை கேட்டு வந்தார் ஒரு பிச்சைக்காரர். ட்ரம்ப் சிரித்துக்கொண்டே, ‘‘இப்ப என்னைவிட நீதான் பணக்காரன்’’ என்று அவரிடம் சொன்னார். பத்து வருடங்கள் கழித்து ட்ரம்ப் மீண்டும் பணக்காரராக மாற, அந்தப் பிச்சைக்காரர் அதே இடத்தில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்தப் பத்து வருடங்களில் ட்ரம்ப் செய்ததுதான் ஸ்மார்ட் கோல்.
வெற்றிக்கானப் படிக்கட்டுகளையும், இலக்கு களையும் இனி தொடர்ந்து பார்ப்போம்.
(மாத்தி யோசிப்போம்)
தொகுப்பு: மா.பாண்டியராஜன்