
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம்
தங்கம் நெடுங்காலமாக இறங்கி, சற்றே ஏறியுள்ளது. சென்ற வாரம் நாம் சொன்னது: “28300 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டு இயங்கி வருவதைப் பார்க்கிறோம். இது மேலே திரும்பும்போது 28600 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படலாம். பிறகு 28900, 29100 என்ற எல்லைகளைத் தொடலாம்.”

28300 என்ற எல்லையை இன்னும் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு ஒரு சுத்தியல் அமைப்பையும் தோற்றுவித்துள்ளது. இதனால் இந்த ஆதரவு சற்றே வலுப்பெற்றுள்ளது. இந்த எல்லையை உடைத்து இறங்கும்போது, அடுத்த ஆதரவு நிலையான 28150-ஐ நோக்கி நகரலாம். இதைப் போலவே, மேலே நாம் முன்பு சொன்ன எல்லைகளான 28600, 28900-க்கு இடையே முக்கியத் தடைநிலை உள்ளது. அதாவது, 29750 என்பது தற்போதைய முக்கியத் தடைநிலையாக உள்ளது. அதை உறுதி செய்வது போல, திங்கள் அன்று ஒரு டோஜி ஏற்றத்தைத் தடுத்துள்ளது.இதைத் தாண்டாத வரை பக்க வாட்டு நகர்வில் இருக்கும். 28300- ஐ உடைத்து இறங்கினால், வலிமையான இறக்கம் இருக்கலாம்.

வெள்ளி
வெள்ளி, ஒரு வலிமையான ஏற்றத்துக்கு முயன்று தோல்வியுற்றது. சென்ற வாரம் சொன்னது: “இந்த ஏற்றம் உடனடித் தடை நிலையான 38700-ல் கொஞ்சம் திணறலாம். சென்ற முறை இந்தப் புள்ளியில்தான் தடுத்து நிறுத்தப்பட்டது.”
நாம் சொன்னதும் நடந்தது. சென்ற வாரம் திங்கள் அன்று 38700 என்ற தடையை உடைத்து வலிமையாக ஏற முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. செவ்வாய் அன்று ஏற முயற்சி செய்து அதுவும் தோல்வியடைந்தது. அதன்பின் அடுத்தடுத்தத் தொடர் இறக்கமாக இறங்கி, தற்போது 37400 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், இறக்கம் என்பது கடுமையாக இருக்கலாம். அதன் கீழ் எல்லைகளான 37000 மற்றும் 36350 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். மேலே 38700 என்ற தடைநிலை மிக வலுவாக உள்ளது. இந்த நிலை உடைந்தால்தான், காளைகள் மீண்டும் ஆட்டத்துக்கு வரும்.

கச்சா எண்ணெய்
சென்ற வாரம் சொன்னது. “கீழே 3100-ஐ உடைக்காதவரை ஏற்றம்தான். உடைத்தால், கரடிகள் 2940- ஐ நோக்கி இறக்கலாம். தற்போது 3100 என்கிற நிலை உடைக்கப்பட்டு, தொடர்ந்து இறங்கிக்கொண்டு இருக்கிறது.”

தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த கச்சா எண்ணெய், படிப்படியாக ஒரு ஹயர் பாட்டத்தைத் தோற்றுவித்து, ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றத்தின் கடுமையான தடைநிலையாக இருந்த எல்லை 3100. கடந்த வாரங்களில் 3100 என்ற எல்லையை உடைத்து வலிமையாக ஏறியது. இந்த ஏற்றம் தொடர்ந்து 3234 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் தொடர்ந்து ஏற முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கமானது, முந்தைய தடைநிலையான 3100 என்ற எல்லையை ஆதரவாக எடுக்க முயல்கிறது. இந்த 3100 என்ற எல்லை உடைக்கப்பட்டால், இறக்கம் வலிமையானதாக இருக்கும். ஏற்கெனவே சொன்ன 2940 என்ற ஆதரவு நிலையை எடுக்கலாம். அதையும் உடைத்தால் இறக்கம் தொடரலாம். மேலே தடைநிலை 3250 ஆகும்.

மென்தா ஆயில்
இதன் ஏற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்ற வாரம் தடையை உடைத்து 1179 வரை ஏறியுள்ளது. இந்த வலிமையான ஏற்றத்தில் 1180-ல் ஒரு வலிமையான தடுப்புக்கான முயற்சியும் நடைபெறுகிறது. அதைத் தாண்டினால் இன்னும் பெரிய ஏற்றம் வரலாம். 1110 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும்.

காட்டன்
காட்டன், சென்ற வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை 18250 என்ற ஆதரவு நிலையில் இருந்து ஏறி, 18640 என்ற எல்லையைத் தொட்டது. இந்த நிலையில், கீழே 18400 என்பதை ஆதரவாகவும், மேலே 18640 என்பதை தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.