
BIZ பாக்ஸ்
ஒரே நாளில் ரூ.6,300 கோடி சம்பாதித்த பஃபெட்!

பங்குச் சந்தை குருவான வாரன் பஃபெட், ஒரே நாளில் ரூ.6,300 கோடிக்கு மேல் லாபம் சம்பாதித்திருக்கிறார். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவை, ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை 5.11% ஒரே நாளில் உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் 135 மில்லியன் பங்குகளை வைத்திருக்கும் வாரன் பஃபெட்டுக்கு அடித்தது யோகம். இதனால் ஒரே நாளில் அவர் ரூ.6,300 கோடி லாபம் சம்பாதித்தார்.
பஃபெட்ஜி, உங்கள் காட்ல எப்பவும் பண மழைதான்!

50 கோடி சவாரிகளை முடித்த ஊபர்!
ஊபர் நிறுவனம் வெற்றிக் களிப்பில் இருக்கிறது. காரணம், கடந்த ஜூன் மாதத்துடன் 50 கோடி சவாரிகளை முடித்ததே. ‘‘எங்கள் வளர்ச்சியில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்’’ என்கிறார் ஊபர் இந்தியாவின் தலைவர் அமித் ஜெய்ன். 2013-ல் மூன்று ஊழியர்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில், இன்றைக்கு 29 நகரங்களில் ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்களாம்!
பயணிகளை, குறிப்பாகப் பெண்களைப் பாதுகாப்பாக கொண்டு போய் இறக்கிவிட்டீங்கன்னா சரிதான்!

தங்கத்தை நோக்கி ஓடும் மக்கள்!
ஜி.எஸ்.டி வந்தபிறகு நம் நாட்டில் தங்கம் வாங்குவது அதிகரித்திருக்கிறது. கடந்த 2016 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.24,350 கோடிக்கு நம்மவர்கள் தங்க நகை வாங்கினார்கள். ஆனால், இந்த ஆண்டின் அதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.33,000 கோடிக்குத் தங்க நகை வாங்கி யிருக்கிறார்கள். தங்கத்தில் முதலீடும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.8,740 கோடியாக இருந்த தங்க முதலீடு, இந்த ஆண்டில் ரூ.10,610 கோடியாக உயர்ந்திருக்கிறது.
கடந்த வருஷத்துல தங்கம் 9.95% நஷ்டம்னு தெரிஞ்சபிறகும் பணத்தைப் போடுறாங்களே!

இந்தியாவில் கவனம் குவிக்கும் ஆப்பிள்!
‘‘இந்தியாவைப் பற்றி நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டீம் குக். ஆப்ஸ் ஆக்ஸிலேரேட்டர் சென்டரை ஏற்கெனவே இந்தியாவில் தொடங்கிய ஆப்பிள், தற்போது எஸ்இ அசெம்பிளிங் மையத்தை பெங்களூரில் ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் ஐ-போன்களின் சந்தை பங்களிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பிரீமியம் ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிளின் மார்க்கெட் பங்களிப்பு 34%. சாதாரண மனிதர்களும் வாங்குகிற மாதிரி ஆப்பிள் போனை எப்பக் கொண்டு வரப்போறீங்க, குக்?
இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியம்!
ஒருவர் இறந்தபின், அவர் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழைப் பெற ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இறந்தவர்களின் பெயரில் இருக்கும் ஆதாரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கவே இந்த நடவடிக்கை என மத்திய அரசாங்கம் விளக்கம் தந்திருக்கிறது. இன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கேப்பாங்களோ!

பாரத் - 22 என்னும் புதிய இ.டி.எஃப்.
பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இ.டி.எஃப் ஃபண்டுகள், சமீப காலமாக நம் நாட்டில் பிரபலமாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இப்போது பாரத் 22 என்கிற பெயரில் ஒரு புதிய இ.டி.எஃப்-ஐ வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசுக்குச் சொந்தமான 22 நிறுவனங்களின் பங்குகள் இருக்கும். இந்த இ.டி.எஃப் பற்றி தகவல் வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இது எப்போது வரும் என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். சீக்கிரம் கொண்டு வாங்க சார்!

நேற்று ரகுராம்; இன்று அரவிந்த் பனகாரியா!
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா, தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த பனகாரியா, மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்தார். எனவே, மோடி பிரதமரானவுடன் திட்ட கமிஷனை ஒழித்துவிட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பினை உருவாக்கி, அதற்குத் துணைத் தலைவராக நியமித்தார்.
ஆனால், இந்தப் பதவியின் மூலம் அவர் செய்ய நினைத்த சில விஷயங்களைச் செய்ய முடியவில்லை. குறிப்பாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்களிடம், குறிப்பாக பெண்களிடம், வருமான வரித் துறையினர் விசாரணை செய்யக் கூடாது என்று சொன்னார். அது நடக்கவில்லை.
இது மாதிரி பல மனக் குறைகள் அவருக்கு. இனியும் இங்கிருந்து பிரயோஜனம் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, ‘கொலம்பியா பல்கலைக்கழகம் என் விடுமுறையை நீட்டிக்கவில்லை’ என்கிற காரணத்தைக் காட்டி, நிதி ஆயோக் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
வெளிநாட்டில் வாங்கும் எக்கச்சக்கமான சம்பளத்தைத் தியாகம் செய்துவிட்டு, தாய் நாட்டுக்காக தொண்டாற்ற வரும் நம் நாட்டவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா?
நேற்று ரகுராம், இன்று பனகாரியா. எங்கே போகிறது நம் நாடு?
ரூ.4,549 கோடி - கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் கிடைத்த லாபம் குறைந்ததால், ஐ.ஓ.சி நிறுவனம் அடைந்த நஷ்டம்.
ரூ.1,73,145 கோடி - இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு. கடந்த 2014-ல் வந்த முதலீடு 2,56,568 கோடி.