
வரிக் கணக்குத் தாக்கல்... கெடு தேதி தவறியவர்கள் என்ன செய்யலாம்?
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்பதை, தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடித்தது மத்திய அரசு. பான், ஆதார் இணைப்பில் சிக்கல் இருந்ததால், பலரால் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இந்தக் கெடு தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் நிறையப் பேர் இருக்கவே செய்கிறார்கள். சில காரணங்களால் குறித்த தேதியில் தாக்கல் செய்ய முடியவில்லை; எங்களுக்கு ஏதாவது பிரச்னைகள் வருமா என பதற்றத்துடன் சிலர் கேட்கிறார்கள். சரியான தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும் என்று சென்னையைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம்.
“வருமான வரிக் கணக்குத் தாக்கல் என்பது அடிப்படை வருமான வரி வரம்பைத் தாண்டிய அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். போதுமான கால அவகாசம் இருந்தபோதிலும் எல்லோரும் கடைசி நாளில் முண்டியடித்துக் கொண்டு தாக்கல் செய்ய முயல்வதால்தான் இணையதள சர்வர் முடங்கிப் போனது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை நீட்டிக்க காரணம்.
இந்தப் புதிய கெடு தேதியான ஆகஸ்ட் 5-க்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு வட்டி கட்ட வேண்டிவரும். இதற்கு அபராதம் விதிக்க வேண்டுமென்று சட்டத்தில் சொல்லி இருந்தாலும்கூட, பெரும்பாலான வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகள் அபராதம் விதிப்பதில்லை என்பதுதான் தற்போதுவரை உள்ள நிலை.
ஆனால், அடுத்த நிதியாண்டிலிருந்து கெடு தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, அபராதம் என்பதை, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் என்று மாற்றவிருக்கிறார்கள்.
மேலும், கெடு தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், ரிவைஸ்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாது. 2016-17-ம் நிதியாண்டுக்கான ரிவைஸ்டு ரிட்டர்னை 2019-ம் ஆண்டு மார்ச் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை, நிர்ணயிக்கப்பட்ட கெடு தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் உங்களால் ரிவைஸ்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யவே முடியாது.
உங்களுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதேனும் வருமானம் , வரிச் சலுகை முதலீடு சேர்க்கப்படாமல் விட்டுப் போயிருந்தாலோ, ஏதாவது பிரச்னை இருந்தாலோ அதனை உங்களால் மீண்டும் தாக்கல் செய்ய முடியாது.
பிசினஸ் செய்பவர்கள் கெடு தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், பிசினஸில் ஏதேனும் நஷ்டம் இருக்கிறது என்றாலும் அதனை அடுத்த நிதியாண்டுக்கு கேரிஓவர் செய்ய முடியாது.
அதேசமயம், இது வரை வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், 2018 மார்ச்க்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம். அபராதம் விதிப்பது அதிகாரிகள் கையில் இருக்கிறது.” என்றார் ஆடிட்டர் சதீஷ்குமார்.
வருமான வரிக் கட்ட வேண்டியது நாம் நாட்டுக்குச் செய்யும் கடமை. ஆனால், வரிக்கு வட்டியும் அபராதமும் சேர்த்துக் கட்டுவது நமக்கு நாமே செய்துகொள்ளும் தீமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த முறை கெடு தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியவர்கள், அடுத்த ஆண்டிலாவது ஜூலை மாதத் தொடக்கத்திலேயே தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
-ஜெ.சரவணன்
படம்: வி.ஸ்ரீனிவாசலு
